நிதி வங்குரோத்து நிலை தொடர்பில் ஆராயும் தெரிவுக் குழுவின் தலைவர், உறுப்பினர்கள் நியமனம் மீள் பரிசீலனை செய்யப்பட வேண்டும்.
இந்த குழுவில் நடுநிலையான விசாரணை முன்னெடுக்கப்படுமா என்பது சந்தேகத்துக்குரியது. தற்போது கடன் பெற்று கடன் செலுத்தப்படுகிறது.
கடன் பெறுவதற்கான பலம் இழக்கப்படும் போது நாடு மீண்டும் வீழ்ச்சியடையும் என சுதந்திர மக்கள் சபையின் பிரதிநிதியும் பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வானூர்தி மூலம் ஏற்றிச் செல்லல் (திருத்தச்) சட்டமூலம் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
நாட்டின் பொருளாதார பாதிப்புக்கு ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைகள் நிறுவனம் முக்கிய பங்கு வகிக்கின்றன.
கோப் குழுவின் தலைவராக பதவி வகித்த போது ஸ்ரீ லங்கன் விமான சேவைகள் நிறுவனத்தின் முறைகேடுகள் தொடர்பில் ஆராய்ந்து துறைசார் நிபுணர்களின் அறிக்கையை சிவில் விமான சேவைகள் அமைச்சிடம் ஒப்படைத்தோம்.
பொருளாதார ரீதியில் வங்குரோத்து நிலை அடைந்துள்ள பின்னணியில் பிரத்தியேக விமான சேவைகள் நிறுவனம் அவசியமா என்பது தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டும்.
பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைந்துள்ள பெரும்பாலான நாடுகளில் பிரத்தியேக விமான சேவைகள் நிறுவனம் ஏதும் கிடையாது.
ஸ்ரீ லங்கன் விமான சேவைகள் நிறுவனத்தை மறுசீரமைக்கும் போது அதன் சேவை கட்டமைப்பு தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டும்.
பாராளுமன்றத்தில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளுடனான கலந்துரையாடலை தொடர்ந்து வினைத்திறனான வெளிப்படை தன்மையுடன் ஒரு தீர்மானம் எடுக்க வேண்டும்.
மறுசீரமைப்பு என்று குறிப்பிட்டுக் கொண்டு நட்டமடையும் அரச நிறுவனங்களை கவனத்திற் கொள்ளாமல் இலாபமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கிறது. இலங்கை காப்புறுதி நிறுவனம்,லங்கா வைத்தியசாலை, லிட்ரோ நிறுவனம் உட்பட இலாபமடையும் நிறுவனங்களை மறுசீரமைக்கும் நோக்கத்தை அறிய முடியவில்லை. நட்டமடையும் ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைகள் நிறுவனம் உட்பட தெரிவு செய்யப்பட்ட நிறுவனங்களை மறுசீரமைக்கும் பணிகள் மந்தகதியில் காணப்படுகின்றன.
நிதி நிலை வங்குரோத்து நிலை தொடர்பில் ஆராய பாராளுமன்றத்தில் விசேட தெரிவுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் தலைவர் மற்றும் ஏனைய உறுப்பினர்கள் தொடர்பில் மக்கள் மத்தியில் நல்லதொரு நிலைப்பாடு ஏதும் கிடையாது. வங்குரோத்து நிலை தொடர்பில் நடுநிலையான விசாரணைகள் முன்னெடுக்கப்படுமா என்பது சந்தேகத்துக்குரியது.
2018 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் நாட்டின் நிலை தொடர்பில் 500 பக்கங்களை உள்ளடக்கிய விசேட அறிக்கையை கணக்காளர் நாயகம் சமர்ப்பித்துள்ளார். அத்துடன் 2022.06.04 ஆம் திகதி நாட்டின் நிதி நிலைமை தொடர்பில் ஆராய பொறுப்புக் கூற வேண்டிய தரப்பினரை கோப் குழுவுக்கு அழைத்து விசாரணைகளை மேற்கொள்ள தீர்மானித்தோம். ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தின் ஊடாக தெரிவு செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து பாராளுமன்றத்தை ஒத்திவைத்தார். அதனால் கோப் குழு கலைக்கப்பட்டது. தீர்மானங்களும் இரத்து செய்யப்பட்டது.
நாட்டின் நிதி நிலைமை தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள தெரிவுக்குழு நியமனம் மீள் பரிசீலனை செய்யப்பட வேண்டும். இந்த குழு 2018-2022 ஆம் ஆண்டு நிதி நிலைமை தொடர்பில் கணக்காளர் நாயகம் சமர்ப்பித்த அறிக்கை கவனத்திற் கொள்ளப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன். அத்துடன் குழு சிறந்த முறையில் உண்மையாக செயற்பட வேண்டும்.
2019 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஆட்சியில் இருந்த அரசாங்கம் எடுத்த தீர்மானங்கள் மாத்திரம் நிதி வங்குரோத்துக்கு காரணம் என்று குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. 2015 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்த அரசாங்கம் அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு விற்றமை,கொழும்பு துறைமுக நகர செயற்திட்டத்தை இடைநிறுத்தியமை,மத்திய வங்கி பிணைமுறி கொடுக்கல் வாங்கல் மோசடி ஆகிய நடவடிக்கைகள் பொருளாதார பாதிப்பை தீவிரப்படுத்தியது.
2019 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கம் அந்த பொருளாதார பாதிப்பை வங்குரோத்து நிலைக்கு தள்ளும் அளவுக்கு முறையற்ற தீர்மானங்களை மேற்கொண்டது. ஆகவே நிதி வங்குரோத்து நிலை விவகாரத்தில் 2015 ஆம் ஆண்டு காலப்பகுதியை தவிர்க்க முடியாது. பொருளாதார பாதிப்புக்கு பொறுப்புக் கூற வேண்டிவர்களுக்கு தண்டனை வழங்குவதை காட்டிலும் இவ்வாறான நிலை எதிர்காலத்தில் தோற்றம் பெற கூடாது என்ற நிலைப்பாட்டில் இருந்துக் கொண்டு தீர்மானங்கள் எடுக்க வேண்டும்.
பொருளாதாரப் பாதிப்புக்கு தீர்வு காண ஏற்றுமதி பொருளாதாரத்துக்கும்,இறக்குமதி பொருளாதாரத்துக்கும் இடையில் காணப்படும் முரண்பாடான தன்மைக்கு தீர்வு காண வேண்டும். இலவச கல்வி, இலவச மருத்துவம் மற்றும் நலன்புரி சேவைகள் தவறு என்ற நிலைப்பாட்டை தோற்றுவிக்க அரசாங்கம் முயற்சிக்கிறது. இலவச கல்வி, மருத்துவம் இந்த நாட்டுக்கு பாரிய சேவையாற்றியுள்ளன. பொருளாதாரப் பாதிப்புக்கு தற்போது தீர்வு காணப்படவில்லை. கடன் பெற்று கடன் செலுத்தப்படுகிறது, கடன் பெறுவதற்கான பலம் இல்லாமல் போகும் போது நாடு வீழ்ச்சியடையும் என்றார்.

