6 ஆண்டுகளாகியும் லஞ்ச வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாதது ஏன்?: உயர் நீதிமன்றம் அதிருப்தி

140 0

நீதிமன்றம் உத்தரவிட்டு 6 ஆண்டுகளாகியும் லஞ்ச வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யாதது ஏன்? என கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம், காவல் துறை மீது கடும் அதிருப்தி தெரிவித்தது.

மதுரையைச் சேர்ந்தவர் எம்.முனீர் அகமது. கல்வித் துறையில் பணியாற்றிய இவர், தன் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் 2017-ல் பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்றக் கிளையில் மனுத் தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்து நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் பிறப்பித்த உத்தரவு: மனுதாரர் இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி வழக்கில் தொடர்புடையவர்களுடன் சேர்ந்து இதே நீதிமன்றத்தில் 2017-ல் வழக்குதொடர்ந்துள்ளார். அந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய மறுக்கப்பட்டது. அத்துடன், 4 வாரத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் தனி நீதிபதி 2017-ல் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 6 ஆண்டுகளாகியும் இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாதது அதிர்ச்சியாக உள்ளது.

மக்களின் நலனுக்காக லஞ்சம் மற்றும் ஊழல் வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவது குறித்து ஒவ்வொரு நாளும் நீதிமன்றங்களும், அரசுகளும் கருத்து தெரிவிக்கின்றன. அதனால்தான் குறிப்பிட்ட காலத்துக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விரைவில் விசாரணையை முடிக்க உத்தரவிடப்படுகிறது.

இருப்பினும் ஊழல் வழக்குகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் குறிப்பிட்ட காலத்துக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில்லை. குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் எடுக்கின்றனர். லஞ்ச ஒழிப்புத் துறை ஆண்டுக்கு குறைந்தது 130 வழக்குகள் பதிவு செய்கின்றன.ரும்பாலான வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் மெத்தனமான அணுகுமுறையைப் பின்பற்றுவதற்கு இந்த வழக்கு சிறந்த உதாரணம்.

இந்த வழக்கில் 4 மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் விழிப்புடன் செயல்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்க வேண்டும்.

சமூக நலன் கருதியும், சாட்சிகள் நினைவு பிறழ் ஆகாமல் இருக்கவும் குறிப்பிட்ட காலத்துக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். பல வழக்குளில் விசாரணை தொடங்குவதற்கு முன்பு சாட்சிகள் இறந்து விடுகின்றனர்.

ஓய்வு பெற்ற பிறகு விசாரணை: அரசு ஊழியர் மீது பணியில் இருக்கும்போது லஞ்ச வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. அவர் ஓய்வு பெறும் நேரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுகிறது.

ஓய்வுபெற்ற பிறகு விசாரணை தொடங்குகிறது. இந்தக் கால கட்டத்தில் சம்பந்தப்பட்ட அரசு ஊழியர் பிழைப்பூதியம் பெற்றுக்கொண்டு சுதந்திரமாக நடமாடுகிறார். இந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவிட்டும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல் இருப்பதை ஏற்க முடியாது.

எனவே, லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறை இயக்குநர் ஜூலை 17-ம் தேதி நீதிமன்றத்தில் நேரில் அல்லது காணொலி வழியாக ஆஜராகி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கான தாமதத்துக்கு விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.