தேனி மக்களவை தேர்தலில் ஓபிஎஸ் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றது செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக அவரது தரப்பு வழக்கறிஞர்கள் கூறியதால், இந்த உத்தரவு 30 நாட்களுக்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
2019 மக்களவை தேர்தலில் தேனி தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் குமார் போட்டியிட்டார். இவர் தன்னை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஈவிகேஎஸ் இளங்கோவனைவிட 76,319 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
இந்த நிலையில், தேர்தலில் ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்க கோரி அத்தொகுதி வாக்காளரான உப்பார்பட்டியை சேர்ந்த மிலானி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார். ‘சொத்துகள், வங்கிக் கடன் போன்ற விவரங்களை வேட்புமனுவில் ரவீந்திரநாத் மறைத்துள்ளார். பணப் பட்டுவாடா செய்து தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்’ என்று மனுவில் அவர் கூறியிருந்தார்.
இந்த வழக்கை நிராகரிக்குமாறு ரவீந்திரநாத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் தள்ளுபடி செய்தார். இதையடுத்து, இந்த வழக்கு தொடர்ந்து நடந்தது.
விசாரணையின்போது, ரவீந்திரநாத் 3 நாட்கள் ஆஜரானார். தேர்தல் ஆணைய அதிகாரிகளும் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். வாதங்கள் முடிந்து, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்ட நிலையில், வழக்கு தொடர்பான சில கூடுதல் விவரங்கள், ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு ரவீந்திரநாத் தரப்புக்கு நீதிபதி அறிவுறுத்தினார்.

