சுமந்திரன் மீதான கொலை முயற்சி முன்னாள் போராளிகளுக்கு விளக்கமறியல் நீடிப்பு(காணொளி)

246 0

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை படுகொலை செய்ய முயற்சித்தாக தெரிவித்து கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்களையும் எதிர்வரும் 22 ஆம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறும் அவுஸ்ரேலியாவில் உள்ள ஆறாவது சந்தேக நபரை சர்வதேச பொலிசார் மூலம் கைது செய்யுமாறும் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை படுகொலை செய்ய முயற்சித்தமை, சட்டவிரோத ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் என்பவற்றை வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்களும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இன்றுவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஐந்து பேரும் இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதுடன், ஆறாவது சந்தேக நபரான கண்ணன் அல்லது அனோஜன் அல்லது வெற்றி என அழைக்கப்படுபவர் தற்போது அவுஸ்ரேலியாவில் இருப்பதாகவும் இவரைக் கைசெய்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு சர்வதேச பொலிசார் மூலம் கைது செய்வதற்கான அனுமதியினை பயங்காதவாத தடுப்புப்பொலிசார் நீதிமன்றத்தில் கோரியிருந்தனர்.

குறித்த ஆறாவது சந்தேக நபரை சர்வதேச பொலிஸ் மூலம் கைது செய்யுமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதேவேளை குறித்த சந்தேகநபர்கள் தொடர்ந்தும் அனுராதபுரத்தில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும், இவர்களை வவுனியா சிறைச்சாலைக்கு மாற்றுமாறு சந்தேக நபர்கள் சர்பாக ஆஜரான சட்டத்தரணிகளான எஸ்.விஜயராணி மற்றும் அர்ச்சுனா ஆகியோர் கோரியிருந்தனர்.

இதற்கு பயங்கரவாத தடுப்புப்பொலிசார் தொடர்ந்து விசாரணைகள் மேற்கொள்ள வேண்டியிருப்பதாகவும் அதனால் அனுராதபுரத்திலேயே வைத்திருக்க வேண்டுமெனவும், தெரிவித்திருந்தனர்.

இதனையடுத்து ஒரு மாதகாலத்திற்குள் விசாரணைகளை முடிவுறுத்தி குறித்த நபர்களை வவுனியா சிறைச்சாலைக்கு மாற்றுமாறும் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.