ஆளுநர் ஒன்றும் அரசியல்வாதி அல்ல; செய்தியாளரை சந்திப்பது தவறான முன்னுதாரணம் – அண்ணாமலை கருத்து

154 0

ஆளுநர் ஒன்றும் அரசியல்வாதி அல்ல என்றும் செய்தியாளர்களை அவர் சந்திப்பது தவறான முன்னுதாரணமாகிவிடும் என்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

திண்டிவனத்தில் ஸ்ரீராம் அறக்கட்டளை சார்பில் 39 ஜோடிகளுக்கு திருமணத்தை நேற்று நடத்தி வைத்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியது: போபாலில் நடைபெற்ற கூட்டத்தில், பிரதமர் மோடி பொது சிவில் சட்டம் பற்றி பேசியிருந்தார். ‘ஒரு நாட்டில், ஒரு குடும்பத்தில் இரண்டு சட்டங்கள் இருக்க முடியாது’ என அவர் தெரிவித்திருந்தார். இதில் சில கட்சிகளின் நிலைப்பாடு வேறாக இருக்கலாம். அதில் தவறில்லை.

பொது சிவில் சட்டத்தை யாரெல்லாம் எதிர்க்கிறார்களோ அவர்களும் நாடாளுமன்றத்தில் இதை தாக்கல் செய்யும்போது முறையாக தெரிந்து கொள்வார்கள். யாரையும் பிரிப்பதற்காக இச்சட்டம் கொண்டு வரப்படாது.

பொது சிவில் சட்டம் என்பது இஸ்லாமியர்களுக்கும், குறிப்பாக இஸ்லாமிய பெண்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் கூட நல்ல சட்டம் தான். யாருக்கும் எதிராக இச்சட்டம் இருக்காது. வரும் காலத்தில் பொது சிவில் சட்டத்தில் அதிமுகவின் நிலைப்பாடு மாறும் என நம்புகிறேன்.

மேகேதாட்டு அணை விவகாரத்தில் புதுச்சேரி, தமிழ்நாடு, கேரளமாநிலங்களின் அனுமதி இல்லாமல் அணை கட்ட முடியாது என நாடாளுமன்ற துறை அமைச்சர் தெளிவுபடுத்தி உள்ளார்.

இந்த ஆண்டு தமிழகத்துக்கு காவிரி தண்ணீர் இல்லை என்று கர்நாடகம் தெரிவித்துள்ளது. இப்படி சொல்ல கர்நாடக துணை முதல்வருக்கு அதிகாரம் இல்லை. இதை திமுகவும், காங்கிரஸும் ஏன் கண்டிக்கவில்லை? தமிழகத்தை கேரளம், கர்நாடக மாநிலங்கள் வஞ்சிக்கின்றன. மேகேதாட்டுவில் அணை கட்டக் கூடாது என்பதே தமிழக பாஜகவின் நிலைப்பாடு.

தமிழகத்தின் ஒவ்வொரு பிரச்சினைக்கும் ஆளுநர் பதில் சொல்ல ஆளுநர் ஒன்றும் அரசியல்வாதி அல்ல. ஆளுநர் அரசியல் பேசக்கூடாது. ஆளுநர் அவரது கடமையை மட்டுமே செய்ய வேண்டும். ஆளுநர் செய்தியாளரை சந்திப்பது தவறான முன்னுதாரணமாகிவிடும். இவ்வாறு அவர் கூறினார்.