உயர் நீதிமன்ற மதுரை கிளை பற்றி திமுக கூட்டத்தில் தான் தெரிவித்த கருத்துக்கு பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு வருத்தம் தெரிவித்தார்.
மதுரையில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை வரும் 15-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். இதையொட்டி நூலகத்தை அமைச்சர்கள் எ.வ.வேலு, பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் நேற்று பார்வையிட்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் எ.வ.வேலு கூறுகையில், ‘ஜூலை 4-ம் தேதி மதுரையில் நடந்த திமுக கூட்டத்தில் பேசியபோது மதுரை மாநகரில் கருணாநிதி ஆட்சியின்போது நிறைவேற்றப்பட்ட பல்வேறு திட்டங்களை பட்டியலிட்டுப் பேசினேன்.
தென் பகுதி மக்கள் தங்கள் வழக்குகளை தீர்த்துக்கொள்ள சென்னை செல்வதை தவிர்க்க மதுரையில் உயர் நீதிமன்ற கிளை அமைக்கப்பட்டது. இதனால் மக்களின் அலைச்சல், பண விரயம் தடுக்கப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்ற கிளையை அமைக்க கருணாநிதி மிகவும் பாடுபட்டார். இதை குறிப்பிட்டு பேசும்போது மதுரையில் ‘கலைஞரின் கொடை’ என குறிப்பிடுவதற்கு பதிலாக உணர்ச்சி மிகுதியால் வேறொரு வார்த்தையை பயன்படுத்திவிட்டேன்.

