கேப்பாப்பிலவில் இராணுவத்தினர் கையகப்படுத்தியுள்ள காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி மக்கள் ஆர்ப்பாட்டம்

199 0

முல்லைத்தீவு – கேப்பாப்பிலவில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை விடுவிக்க வலியுறுத்தி காணிகளுக்குரிய பொதுமக்கள் புதன்கிழமை (05) ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

குறித்த ஆர்ப்பாட்டமானது கேப்பாப்பிலவு இராணுவ முகாமின் ஆரம்ப இடத்திலிருந்து ஆரம்பமாகி, பேரணியாக கேப்பாப்பிலவு இராணுவ முகாமின் பிரதான நுழைவாயிலை வந்தடைந்தது.

தொடர்ந்து குறித்த இராணுவ முகாமின் முன்பாக ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமது காணிகளை விடுவிக்கவும், இராணுவத்தினை வெளியேறுமாறும் வலியுறுத்தி பதாதைகளைத் தாங்கியவாறும், கோசங்களை எழுப்பியும் ஆர்ப்பாட்டதனதில் ஈடுபட்டனர்.

அத்தோடு இராணுவத்தினர் தமது காணிகளைக் கையகப்படுத்தி வைத்திருப்பதால் தமது அன்றாட வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இராணுவத்தினர் தமது காணிகளிலுள்ள வளங்களைச் சுரண்டுவதற்காகவும், நந்திக்கடலின் வளத்தினைச் சுரண்டுவதற்குமாகவே தமது காணிகளை அபகரித்து வைத்துள்ளதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்களால் குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது.

அதேவேளை நீண்டகாலமாக தமது காணிகளை விடுவிக்குமாறு தாம் வலியுறுத்தி வருகின்றபோதும் இதுவரையில் தமது காணிகள் விடுவிக்கப்படவில்லை எனவும் இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்களால் சுட்டிக்காட்டப்பட்டது.

மேலும் கதறி அழுது தமது காணிகளை விடுவிக்குமாறு இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் கேட்டுக்கொண்டனர். அவ்வாறு காணிளை இராணுவத்தினர் விடுவிக்கததவறின் இராணுவமுகாமிற்குள் அத்துமீறி நுழைய வேண்டிய சூழல் எழும் எனும் ஆர்ப்பாட்டக்காரர்கள் இதன்போது எச்சரித்திருந்தனர். இந் நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் அங்கு மயக்கமுற்று வீழ்ந்தமையும் குறிப்பிடத்தக்கது.