போராட்டத்தில் இருந்த மதிப்பும் மரியாதையும் இந்தப் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட பெண்களுக்கு இல்லாமல் போயிருக்கின்றது – வியாழேந்திரன்

362 0

முப்பது வருட காலம் யுத்தத்தால் பாதிக்கபட்ட பகுதிகள் அப்படியே இருக்க பாதிக்கப்படாத மேல் மாகாணத்திற்கு தனியான மேல்மாகாணம் மற்றும் வடமேல் மாகாண அபிவிருத்திக்கு என தனி அமைச்சுக்கள் உள்ளன.

இது தெளிவான பாரபடசம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் தெரிவித்தார்.

விடியல் சமூக மேம்பாட்டுக்கான மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சர்வதேச பெண்கள் தினத்தையொட்டிய நிகழ்வு ஏறாவூர் 4ஆம் குறிச்சி மாஞ்சோலை மணிமண்டபத்தில் அதன் தலைவர் யோகேஸ் மகாதேவன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய வியாழேந்திரன் கடந்த 3 தசாப்த கால யுத்தத்தினால் வடக்கு கிழக்கில் பல உயிரிழப்புக்கள், உடமை இழப்புக்கள், அங்கவீனங்கள் என்று எல்லாமே அழிவுகள்தான்.

யாழ்ப்பாணம் 27756, கிளிநொச்சி 6810, வவுனியா 9389, மன்னார் 4765, முல்லைத்தீவு 4521, திருகோணமலை 13481, மட்டக்களப்பு 33602, அம்பாறை 16126 என்ற எண்ணிக்கையில் வடக்கு கிழக்கில் சுமார் ஒரு இலட்சத்து 15 ஆயிரத்திற்கு மேற்பட்ட விதவைகள் உள்ளார்கள்.

இவர்கள் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் என்ற பட்டியலுக்குள் உள்ளடகக்கப்படுகிறார்கள்.

இதிலே விதவைகளின் நிலைமை மிகப் பரிதாபம். வடக்கு கிழக்கிலே விதவைகள் அதிகூடிய மாவட்டம் மாவட்டம் மட்டக்களப்பு

மட்டக்களப்பில் இளம் விதவைகள் 30 வயதிற்குட்பட்டவர்கள் 50 வீதத்திற்கு உள்ளார்கள்.

முன்னாள் போராளிகளான புனர்வாழ்வு பெற்ற பெண்களின் நிலைமையும் மிக வேதனையானது விடுதலை செய்யப்பட்ட 11 ஆயிரத்து 900 பேரில் 3200 பெண் போராளிகள் உள்ளார்கள்.

புனர்வாழ்வு பெற்று விடுதலையாக்கப்பட்ட முன்னாள் போராளிகள் சம்பந்தமாக அண்மைக்காலமாக பேசப்பட்ட விச ஊசி விவகாரத்திற்குப் பின்னர் இந்தப் பெண் போராளிகளின் நிலைமை மேலும் மோசமடைந்திருக்கின்றது.

புனர்வாழ்வு பெற்றதன் சாதக பாதகத் தன்மையை ஆராய்வது ஒரு புறமிருக்க, இந்த விடயத்திலே உள்ள பாரதூரத்தன்மையை ஆராய்வது முக்கியம்.

அதேவேளை இந்த விச ஊசி விவகாரத்தால் பனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளான பெண்கள் தங்களுடைய வாழ்க்கையை இழந்து நிற்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

விச ஊசி விவகாரத்தின் பின்னர் திருமணம் பேசப்பட்ட பெண்களுக்கு திருமணம் தடைப்பட்டிருப்பதையும் அறிய முடிகின்றது.

போராட்டத்தில் இருந்த மதிப்பும் மரியாதையும் இந்தப் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட பெண்களுக்கு இல்லாமல் போயிருக்கின்றது.

நம்மவர்களே அவர்களுக்குத் தொழில் வழங்குவதற்கு தயங்கும் நிலைமை உள்ளது.

புனர்வாழ்வளிக்கப்பட்டவர்களில் அங்கவீனர்களின் எண்ணிக்கை கூடுதலாக உள்ளது. அவர்கள் தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்ள முடியாது அவர்களுக்கான விசேட திட்டங்கள் எதுவுமில்லை.

யுத்தத்தினால் அங்கங்களை இழந்தவர்கள் வடக்கு கிழக்கில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நிர்க்கதியாகி இருக்கின்றார்கள்.

அநாதைப் பிள்ளைகளின் பிரச்சினை ஒரு புறம் இருக்கின்றது.
காணாமலாக்கப்டோர் விடயம் இன்னொரு புறம்.

உள்நாட்டிலும் இந்தியா உட்பட வேறு நாடுகளுக்கும் அகதிகளாக இடம்பெயர்ந்தவர்களின் நிலைமை இன்னொரு புறம் மோசமாக இருக்கின்றது.

நாடு திரும்பும் அகதிகளுக்காக வாழ்வாதாரத் திட்டங்கள் எதுவுமே முறைப்படி இல்லாதது ஒரு பெரும் பிரச்சினையாக இருந்து கொண்டிருக்கின்றது.

அரசியல் கைதிகள் இன்னமும் முற்றுமுழுவதுமாக விடுதலை செய்யப்படவில்லை.

காணாமலாக்கப்பட்ட சமூகத்தினர் ஒரு பக்கம் போராட்டங்களை முன்னெடுத்துள்ளார்கள்.

நில மீட்புப் போராட்டத்திலும் மக்கள் ஈடுபடத் தொடங்கியுள்ளார்கள். ஆகவே இவற்றக்கெல்லாம் இந்த நல்லாட்சி நல்ல சாதமான பதில்களைக் கொண்டிருக்க வேண்டும்.

நல்லாட்சிலே மக்கள் தங்களுக்கான நலன்களை போராடித்தான் பெறவேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டிருக்கின்றார்கள்.

வெறமனே வெளிநாட்டு இராஜதந்திரிகளுடன் பேசுவதாலேயோ ஊடகங்களுக்கு அறிக்கை வெளியிடுவதாலேயோ நல்லிணக்கம் கிட்டப் போலதில்லை. போரினால் துவண்டு போன வடக்கு கிழக்கு சமூகத்திற்கு ஒத்தடம் போட வேண்டும்.

நல்லாட்சி வெறுமனே சொல்லாட்சியாக இருக்க மக்கள் விரும்பமாட்டார்கள்.

வடக்கு கிழக்கிலே பாதிக்கப்பட்ட இலட்சத்திற்கு மேற்பட்ட பெண்களுக்கு புனர்வாழ்வளிக்வென வடக்கு கிழக்குக்கென தனியான பனர்வாழ்வுத் திணைக்களமோ தனியான வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கென ஒரு அமைச்சோ நிறுவப்பட வேண்டும்.

1.8 வீதம் வறுமை இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கும் கொழும்மை உள்ளடக்கிய மேல் மாகாணத்தில் அந்த மாகாணத்தின் அபிவிருத்தி;கென பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையில் ஒரு அமைச்சு உள்ளது.

வடமேல் மாகாண அபிவிருத்திக்கென எஸ்பி. நாவின்ன தலைமையில் ஒரு அமைச்சு உள்ளது.

இந்த மாகாணங்கள் யுத்தத்தினால் எந்த விதத்தலும் நேரடியாகப் பாதிக்கப்டாதது ஒரு புறமிருக்க அவை வசதிபடைத்தவர்கள் வாழும் மாகாணங்களாகும்.

எனவே இந்த விடயங்களை நல்லாட்சி சீர்தூக்கிப் பார்க்க வேண்டும் என வியாழேந்திரன் குறிப்பிட்டார்.