பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தமிழ்நாட்டில் படிப்படியாக மதுக்கடைகளை மூடி முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுவடைந்து வரும் நிலையில், காஞ்சிபுரம் மாநகரில் மக்கள் அதிகம் கூடும் வாலாஜாபாத் சாலையில் புதிய மதுக்கடை திறக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு தொடர்ந்து கூறி வருவதைப் போன்று, படிப்படியாக முழு மதுவிலக்கை ஏற்படுத்துவது தான் அரசின் நோக்கம் என்றால், மூடப்பட்ட மதுக்கடைகள் தவிர மீதமுள்ள 4829 மதுக்கடைகளையும் மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் இனி, இடமாற்றம் என்ற பெயரில் கூட புதிதாக மதுக்கடைகள் திறக்கப்படாது என்ற கொள்கை அறிவிப்பை தமிழக அரசு வெளியிட வேண்டும்.
அதுமட்டுமின்றி, இப்போதுள்ள மதுக்கடைகளை படிப்படியாக மூடுவதற்கான கால அட்டவணையை தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

