அதிமுகவில் 2 கோடி பேரை உறுப்பினராக சேர்க்க வேண்டும் என்பதே இலக்கு, என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்தார்.
சேலத்தை அடுத்த ஓமலூரில் சேலம் புறநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான பழனிசாமி கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழக முதல்வர், தான் எதிர்க்கட்சியாக இருந்தபோது, கெட்டதை கூட தைரியமாக செய்ய முடிந்தது என்று கூறுவது சரியல்ல. எதிர்க்கட்சியாக இருந்தாலும், மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும். அதிமுக அப்படி தான் செயல்பட்டு வருகிறது. ஆனால், அதிமுக ஆட்சியின்போது, எதிர்க்கட்சியான திமுக எந்தளவுக்கு செயல்பட்டு வந்தது என்பதை முதல்வர் ஸ்டாலினே ஒப்புக் கொண்டுள்ளார். தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். ஒரே நாளில் செய்தால், கள்ளச்சாராயம் பெருகிவிடும். அதன்படி, நான் முதல்வராக இருந்தபோது, முதல் கட்டமாக 500 மதுக்கடைகள் மூடப் பட்டன.
அதிமுக ஆட்சியின்போது, கரோனா காலத்திலும் சிறப்பான மருத்துவசேவையை மக்களுக்கு வழங்கினோம். இப்போது உள்ள அரசுக்கு, மக்களுக்கான மருத்துவ சேவையை பற்றி எல்லாம் கவலை இல்லை.
சென்னையில் கை ஒன்றை இழந்த குழந்தைக்கு, ஆட்சியாளர்கள் உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை வேண்டும்.
அதிமுக ஆட்சியின்போது, அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி மீது ஊழல் குற்றச்சாட்டுகளை ஸ்டாலின் முன்வைத்தார். இப்போது, செந்தில் பாலாஜி மீது வழக்குகளை போட்டு, மத்திய அரசு பழிவாங்குவதாக முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். இது உண்மைக்கு புறம்பான கருத்து. கைதியாக இருக்கும் ஒருவர், எப்படி அமைச்சராக இருப்பார் என்பதுதான் எங்களது கேள்வி.
5 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய உறுப்பினர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும். அதன்படி, 2018-ம் ஆண்டுக்குப் பின்னர் அதிமுகவில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. தற்போது 1.35 கோடி பேர் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர்.
எங்கள் இலக்கு 2 கோடி பேரை உறுப்பினராக சேர்க்க வேண்டும் என்பது தான். அதிமுக தொண்டர்கள் எங்களிடம் தான் உள்ளனர். இனி, தொண்டர்கள் என் பக்கம் என்று ஓபிஎஸ் கூறுவதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது. திமுக-வின் ‘பி’ அணியாக ஓபிஎஸ் செயல்பட்டு வருகிறார்.
மாமன்னன் திரைப்படத்தை நான் பார்க்கவில்லை. பார்க்காத திரைப்படத்தைப்பற்றி நான் கருத்து சொல்ல முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.
முன்னாள் அமைச்சர் செம்மலை, சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் உள்பட அதிமுகவினர் உடனிருந்தனர்.

