தமிழ்க் கட்சிகளை ஒன்றிணைப்பதில் டட்லி பாணியில் ரணிலின் பயணம்

100 0

1965ல் டட்லி சேனநாயக்கவின் தேசிய அரசாங்கத்தில் தமிழரசுக் கட்சியும் தமிழ்க் காங்கிரசும் அங்கம் வகித்தன. தமிழர் சார்பில் எம்.திருச்செல்வம் அமைச்சராகவும், தமிழ் காங்கிரஸ் சார்பில் மு.சிவசிதம்பரம் உபசபாநாயகராகவும் இருந்தனர். தமிழரசுக் கட்சி தமிழ் பல்கலைக்கழகம் கேட்க, தமிழ் காங்கிரஸ் இந்து பல்கலைக்கழகம் கேட்டது. இரு கட்சிகளும் இணைந்து ஒரு பல்கலைக்கழகம் கேட்டால் தம்மால் அதனைத் தர முடியும் என்ற டட்லியின் நிபந்தனை அவரது எதிர்பார்ப்பை நிறைவேற்றியது. தமிழருக்கான பல்கலைக்கழக கனவு அன்று சிதறுண்டது. டட்லியின் அதே தடத்தில்தான் தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு காண தமிழரின் ஒற்றுமையை ரணில் கேட்பது தெரிகிறது.

தமிழர் பிரச்சனை தீர்வு தொடர்பாக வெளிநாடுகளில் தெரிவிக்கப்படும் கருத்துகளே அண்மைய நாட்களில் பலரதும் கவனத்தை ஈர்த்து வருகின்றன. இந்தக் கருத்துகளை வெளியிடுபவர்கள் சாதாரண அரசியல்வாதிகள் அல்ல. பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் வல்லமை கொண்ட சர்வ அதிகார ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும், இந்திய பாரதிய ஜனதா கட்சியின் தமிழக பிரமுகரான கு. அண்ணாமலையும் இவர்களுள் முக்கியமானவர்கள்.

தமிழர் பிரச்சனையில் அரைவாசிக்குத் தீர்வு கண்டாகி விட்டது என்று இங்கிலாந்தில் வைத்து ரணில் விக்கிரமசிங்க, கனடிய முன்னாள் பிரதமரும் சர்வதேச ஜனநாயக ஒன்றியத்தின் நிகழ்காலத் தலைவருமான ஸ்ரீபன் ஹாப்பரிடம் கூறியுள்ளார்.

இந்தக் கருத்து தெரிவிக்கப்பட்ட காலத்தில் இந்திய பாரதிய ஜனதா கட்சியின் கு. அண்ணாமலை இங்கிலாந்திலுள்ள இலங்கை – இந்திய புலம்பெயர் தமிழர் ம்த்தியில் உரையாற்றுகையில் காணி மற்றும் காவற்துறை அதிகாரங்களுடன் 13ம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த தமிழருக்கு இந்தியா துணை புரியும் என்று தெரிவித்துள்ளார்.

மேற்கூறிய இரண்டு முக்கிய அறிவிப்புகளும் இலங்கைக்கு வெளியே தாயக அரசியலில் ஈழத்தமிழர் தீவிரமாக செயற்பட்டு வரும் நாட்டில் வைத்து தெரிவிக்கப்பட்டன என்பது கவனத்துக்குரியது.

இலங்கையின் இனப்பிரச்சனையையும், தமிழர் மீது சிங்கள அரசு கட்டவிழ்த்துவிட்டு நிகழ்த்திய பேரழிவையும் நன்கறிந்தவர் ஸ்ரீபன் ஹாப்பர். இலங்கையின் மனித உரிமை மீறல்களையும், சிறுபான்மையினர் மீதான இம்சைகளையும் இலங்கை அரசின் சட்டத்துக்கு புறம்பான செயற்பாடுகளையும் கண்டித்து 2011ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை புறக்கணித்தவர் ஸ்ரீபன் ஹாப்பர்.

இலங்கையைப் பற்றி சகலதும் அறிந்தவரான இவர், இலங்கையில் முன்னையவர்களின் (ராஜபக்சக்கள்) ஆட்சி எவ்வாறு முடிந்தது என்பது அனைவரும் அறிந்தது என்ற முன்னுரையுடன், இன்று தமிழ்ச் சமூகத்துக்கும் முழுமையான நாட்டுக்கும் இடையே நல்லிணக்கத்தை எவ்வாறு மேம்படுத்துகிறீர்கள் என்று வெகு சிம்பிளாக ஒரு கேள்வியை ரணிலின் முன்னால் தூக்கிப் போட்டார்.

இந்தக் கேள்வியை ரணில் நிச்சயம் எதிர்பார்த்திருக்க மாட்டார். ஆனாலும் தமது கெட்டித்தனத்தால் சமாளிக்க முனைந்தார். நல்லாட்சிக் காலத்தில் தாம் பிரதமராக இருந்தபோது தொடங்கிய நல்லிணக்க முயற்சியை, அன்று விட்ட இடத்திலிருந்து தொடர்கிறேன் என்ற பீடிகையுடன் ஆரம்பித்து, உண்மை மற்றும் நல்லிணக்கம் தொடர்பான சட்ட வரைபு, பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைபு என்பவைகளை நிறைவேற்றி விட்டதாக அப்பட்டமான பொய்யை அவிழ்த்துவிட்டு ஸ்ரீபன் ஹாப்பரின் காதில் பூ வைக்க எத்தனித்தார்.

முன்னர் விட்ட இடத்திலிருந்து தமிழர் பிரச்சனையை தீர்ப்பதற்கு தமிழர் பிரதேச நாடாளுமன்ற உறுப்பினர்களுடன், பல முக்கிய விடயங்களில் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாகவும் தெரிவித்ததோடு, அரைவாசிப் பிரச்சனைக்கு தீர்வு கண்டு விட்டதாக அடுக்கடுக்காக பொய்களை தெரிவித்தார்.

முக்கியமாக அதிகாரப் பகிர்வுக்கான தீர்வை தமிழரிடம் முன்வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதிகாரப் பகிர்வு என்பது இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் 13ம் திருத்த அடிப்படையிலான மாகாண சபைகளின் முறைமை. 1987 யூலையில் ஜே.ஆரும் ராஜிவ் காந்தியும் செய்து கொண்ட இரு நாட்டு ஒப்பந்தமே இலங்கையின் அரசியல் அமைப்பில் 13ம் திருத்தத்தை ஏற்படுத்தியது. இதில், அதிகாரப் பகிர்வு என்பது காணி மற்றும் காவற்துறை அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்குவது.

வடக்கும் கிழக்கும் இணைந்த மாகாண சபை 1980களின் பிற்பகுதியில் இயங்கிய வேளையிலும் சரி, பின்னர் வடக்கு கிழக்கு மாகாண சபைகள் பிரிக்கப்பட்டு தனித்தனியாக இயங்கிய காலங்களிலும் சரி காணி, காவற்துறை அதிகாரங்கள் இவைகளுக்கு வழங்கப்படவில்லை. ஒருபோதும் இவை வழங்கப்படமாட்டாது என்றே கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கையை ஆட்சி புரியும் சிங்கள அரசுகள் கூறிவந்துள்ளன. இன்றும் அதே நிலைப்பாடுதான்.

இந்த அதிகாரங்களை வடக்கு, கிழக்கு மாகாண சபைகளுக்கு வழங்கினால் தமிழீழம் என்ற தனிநாடு ஒரு காலத்தில் இலகுவாக உருவாக வாய்ப்பளிக்கும் என்ற வாய்ப்பாடே சிங்கள அரசியல்வாதிகளினதும் அவர்களின் அரசியல் கட்சிகளினதும் நித்திய வாலாயமாகவுள்ளது.

நிலைமை இப்படியிருக்கையில், பாரதிய ஜனதா கட்சியின் அண்ணாமலை காணியையும் காவற்துறையையும் உள்ளடக்கியதான 13ஐ நடைமுறைப்படுத்த இந்தியா துணை நிற்கும் என்று இங்கிலாந்தில் வைத்து கூறியுள்ளார். அடுத்தாண்டு நடைபெறவிருக்கும் இந்திய பொதுத்தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளை தமது கட்சிக்குப் பெற்றுக் கொடுக்கும் முயற்சியாகவே இவரது உறுதிமொழியை பார்க்க முடிகிறது.

யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொள்ளும் வேளைகளில் ஆட்சித் தரப்பினரையும் சிங்கள கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்து இந்தக் கருத்தை கூறமுடியாத அண்ணாமலை இங்கிலாந்தில் நின்று தெரிவித்ததானது அவரது சுய அரசியல் லாபத்துக்கானது என்பது வெளிப்படை.

இது ஒருபுறமிருக்க, தமிழர் பிரச்சனைக்கு அரைவாசி தீர்வு கண்டாகிவிட்டது என்று ரணில் தெரிவித்ததை முக்கியமாக நோக்க வேண்டியுள்ளது. அவருடன் பேச்சு நடத்திய தமிழ் அரசியல் தலைவர்கள் என்ன சொல்கிறார்கள். இவர்களின் மௌனப் போக்கு ரணிலின் கருத்துக்கு வலுவூட்டுவதாகவே மாறுகிறது.

அடிக்கடி அழைத்துப் பேசிவிட்டு அதில் பின்னடைவு காண்பதே கடந்த ஒரு வருடமாக நிகழ்ந்தவை. 2022 இறுதிக்குள் தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு காணப்படுமென்று முன்னர் அறிவித்த ரணில், பின்னர் பெப்ரவரி 4 சுதந்திர தினத்தில் இறுதித் தீர்வு அறிவிக்கப்படுமென்றார். எதுவுமே இடம்பெறவில்லை.

பின்னர் மீண்டும் தமிழர் தரப்புடன் பேச்சுகளை ஆரம்பித்தார். நம்பகத்தன்மை இன்மையால் பேச்சுவார்த்தை தேக்கநிலைக்குச் சென்றது. இறுதியாக நடைபெற்ற சந்திப்பு தமிழரசின் மூத்த தலைவர் சம்பந்தனின் வேண்டுகோளுக்கிணங்கவே நடைபெற்றது என்பது பின்னரே தெரியவந்தது. இச்சந்திப்பின் இறுதியில் அடுத்த கூட்டம் யூலை மாத இறுதியில் இடம்பெறுமென தெரிவிக்கப்பட்டது.

அரசியல் தீர்வுக்கான ஒரு பேச்சுவார்த்தையாக அதிகாரபூர்வமாக இரு தரப்புக்குமிடையில் இடம்பெற்றிருந்தால் சந்திப்புகளின் இறுதியில் இரு தரப்பும் இணைந்த கூட்டறிக்கையொன்று வெளியிடப்பட வேண்டும். ஆனால் இதுவரை எந்தச் சந்திப்பின் பின்னரும் அவ்வாறான கூட்டறிக்கை எதுவும் வெளிவந்ததாக தெரியவில்லை. மாறாக சந்திப்பில் கலந்து கொண்டவர்கள் தங்கள் தங்கள் அபிப்பிராயத்துக்கு உட்பட்டவகையில் சில கருத்துகளை ஊடகங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

ஆனால், இங்கிலாந்தில் வைத்து தமிழர் பிரச்சனைக்கு அரைவாசி தீர்வு கண்டுவிட்டதாக ரணில் தெரிவித்தது உண்மையா என்பதை பகிரங்கப்படுத்த வேண்டிய கடப்பாடு உடையவர்கள் அவரைச் சந்தித்த தமிழர் தரப்பு பிரதிநிதிகள். எதற்காகவோ அவர்கள் தரப்பிலிருந்து அதிகாரபூர்வமான அறிக்கை எதுவும் வெளிவரவில்லை.

ரணிலின் நல்லாட்சிக் காலத்தில் புதிய அரசியலமைப்பொன்று உருவாக்கப்பட்டதாக தமிழரசுக் கட்சியின் சுமந்திரன் அவ்வப்போது தெரிவித்து வந்தார். இதற்காக எத்தனையோ டசின் கூட்டங்கள் நடத்தப்பட்டு தமிழர் பிரச்சனைத் தீர்வுக்கு சாதகமான வரைபு தயாரிக்கப்பட்டதாகவும், அதன் பிதாமகர் தாமே என்பது போலவும் சுமந்திரன் தம்மை அடையாளப்படுத்தி வந்தார்.  இதனால்தானோ என்னவோ சுமந்திரனை ‘எங்களின் சட்டமா அதிபர்” என்று ரணில் பொதுநிகழ்வுகளில் அழைத்து வந்தார். நல்லாட்சி முடிந்து ரணில் ஆட்சி ஒரு வருடமாகியும் சுமந்திரன் கூறிய நல்லாட்சிக் கால புதிய அரசியலமைப்பு வரவுக்கு என்னானது என்று தெரியவில்லை. யாரிடம் கேட்பது என்பதும் புரியவில்லை.

அன்று விட்ட இடத்திலிருந்துதான் இப்போது காரியங்களை தாம் முன்னெடுத்திருப்பதாக கனடிய முன்னாள் பிரதமர் ஸ்ரீபன் ஹாப்பரிடம் கூறும் ரணில், சுமந்திரன் வழிநடத்தலில் தயாரிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு வரைபு பற்றி எதனையும் தெரிவிக்காது சாதுரியமாக மறைத்துவிட்டார்.

தமிழர் பிரச்சனைக்குத் தீர்வுகாண ரணில் இப்போது வேண்டுவது தமிழர் தரப்பினர் அனைவரும் ஒன்றுபட்டு வரவேண்டும் என்பது. நாட்டை அபிவிருத்தி செய்யவும், தமிழர் பிரச்சனைக்குத் தீர்வுகாணவும் சகல தமிழ் கட்சிகளும் ஒன்றிணைந்து வரவேண்டுமென்று கேட்டுள்ளார் ரணில். இது வேண்டுகோளா அல்லது நிபநதனையா என்பது தெரியவில்லை.

எதுவாயிருந்தாலும், தமிழர் தரப்பு இணைந்து வந்தால் மட்டுமே தீர்வு காண முடியுமென்ற தமது எண்ணப்பாட்டை ரணில் பகிரங்கப்படுத்தியுள்ளார். இவ்விடத்தில் ரணில் முன்னால் தமிழர் தரப்பு வைக்க வேண்டிய நிபந்தனை ஒன்றுண்டு. தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு காண சகல சிங்கள கட்சிகளையும் அதன் தலைவர்களையும் ஒன்றிணைத்துக் கொண்டுவர ரணில் தயாரா? இது அவரால் முடியுமா? இதற்கான முடிவு பகிரங்கப்படுத்தப்பட வேண்டும்.

1965ல் இலங்கையில் முதலாவது தேசிய அரசாங்கம் அமைத்து ஐந்து ஆண்டுகள் முழுமையாக ஆட்சி புரிந்தவர் டட்லி சேனநாயக்க. அவரது அரசாங்கத்தில் தமிழரசுக் கட்சியும், தமிழ்க் காங்கிரசும் இணைந்திருந்தன. தமிழரசு சார்பில் எம்.திருச்செல்வம் அமைச்சராகவிருந்தார். தமிழ் காங்கிரஸ் சார்பில் மு.சிவசிதம்பரம் உபசபாநாயகராக இருந்தார். இரு தரப்பினரும் தமிழருக்கு ஒரு பல்கலைக்கழகம் வேண்டுமென பிரதமர் டட்லியிடம் வலியுறுத்தி வந்தனர்.

தமிழரசுக் கட்சி தமிழ்ப் பல்கலைக்கழகம் கேட்டது. தமிழ்க் காங்கிரஸ் கட்சி இந்து பல்கலைக்கழகம் கேட்டது. இதுதான் சரியான வாய்ப்பு என எண்ணிய டட்லி தனது கபட நாடகத்தை அரங்கேற்றினார். தமிழரசும் காங்கிரசும் இணைந்து ஒரு பல்கலைக்கழகம் கேட்டால் தர முடியுமென்று கூறிய டட்லி ஐந்து வருடங்களும் வரவு செலவுத் திட்டத்தில் அதற்கென நிதியை ஒதுக்கி வந்தார்.

தமிழ்க் கட்சிகள் இரண்டும் ஒன்றிணையமாட்டா என்ற டட்லியின் எதிர்பார்ப்பு பொய்க்கவில்லை. தமிழர்களின் பல்கலைக்கழக கனவு காற்றோடு கலைந்தது.

தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண விரும்புவது போன்று போக்குக்காட்டி அதனை இழுத்தடித்து தட்டிக்கழிப்பதற்காகவே சகல தமிழ் கட்சிகளையும் ஒன்றிணைந்து வருமாறு ரணில் விடுத்திருக்கும் அழைப்பு புரிய வைக்கிறது.

டட்லி சேனநாயக்கவின் ஐக்கிய தேசிய கட்சி வழிவந்த ரணிலின் சிந்தனையோட்டமும் டட்லியின் தடத்திலேயே பயணிக்கிறது. ஏமாறுபவர்கள் இருந்தால் ஏமாற்றுபவர் எப்போதும் வெற்றியாளரே!

பனங்காட்டான்