பள்ளிவாசலுக்கு கல் எறிந்ததைப் பேசுபவர்கள், புனரமைப்புச் செய்தது பற்றிப் பேசுவதில்லை-நாமல் ராஜபக்ஷ

224 0

எமது ஆட்சிக்காலத்தில் கல்லெறியப்பட்ட ஒரு சில பள்ளி வாசல்கள் பற்றி பேசுபவர்கள், நாம் வடக்கு, கிழக்கில் புனரமைப்பு செய்த 48 பள்ளிவாசல்கள் பற்றி வாய் திறப்பதில்லை எனப் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பத்ரமுல்லை நெலும் மாவத்தையில் உள்ள கூட்டு எதிரணி காரியாளயத்தில் இடம்பெற்ற முஸ்லிம்களுடனான கலந்துரையாடலில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்;
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்டதாக, கல்லெறியப்பட்டுத் தாக்கப்பட்டதாக கூறுபவர்கள் நாம் வடக்கு கிழக்கில் புனரமைப்பு செய்து கொடுத்த 48 பள்ளிவாசல்கள் பற்றி வாய் திறப்பதில்லை. புதிதாக அனுமதி வழங்கிய பள்ளிவாசல் பற்றியும், புதிதாகக் கட்டப்பட்ட பள்ளிவாசல்கள் பற்றியும் வாய்திறப்பதில்லை. நாம் எப்போதும் முஸ்லிம்களுக்கு எதிராகச் செயற்படவில்லை. எமது ஆட்சிக் காலத்தில் முஸ்லிம் மக்களை எம்மிடம் இருந்து பிரிக்க திட்டமிட்ட சதி நடவடிக்கைகள் இடம்பெற்றன. பொதுபலசேனா போன்ற அமைப்புகளுக்கு எமது அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருந்து கொண்டு சம்பிக்க போன்றவர்கள்  நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவினார்கள்.

கண்டி நகரில் இடம்பெற்ற பொதுபல சேனாவின் முதலாவது கூட்டத்துக்கு ஹெல உறுமய கட்சியே அனுமதி எடுத்துக்கொடுத்தது. அதே ஹெல உறுமய இன்று நல்லாட்சியில் பங்காளியாக உள்ளனர். அதன் பயனாக நாம் உள்ளே அனுமதிக்காத சில குழப்பவாதிகள் இன்று அரச மரியாதையுடன் வலம் வருகிறார்கள். இதை முஸ்லிம் மக்கள் நன்றாகப் புரிந்துகொள்ளவேண்டும். இன்று தம்புள்ளை பள்ளிவாசல் பிரச்சினை பூதாகரமாக வெடித்துள்ளது. அந்த பள்ளிவாசலை அங்கிருந்து அப்புறப்படுத்த இணக்கம் தெரிவித்துள்ள முஸ்லிம் அரசியல் தரப்புகள் அன்று பள்ளிவாசலை ஒரு அங்குலமாவது அங்கிருந்து நகர்த்த முடியாது எனக் கூறினார்கள். அன்று தம்புள்ளை பள்ளிக்கான கண்ணீர் வடித்தவர்கள் இன்று பதவி மோகத்தில் ஒன்றுமே நடக்காதது போல இருக்கிறார்கள். இவர்கள் தொடர்பில் முஸ்லிம் மக்கள் நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டார்