புகையிலை நிறுவனத்திடம் இருந்து கிடைக்கும் வரி வருமானத்தை விட புகைத்தல் காரணமாக ஏற்படும் நோய்களை குணமாக்க அரசாங்கம் பெருமளவு பணத்தை செலவிடுகின்றது. சுகாதாரத்துறையை அபிவிருத்தி செய்ய என்னால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் காரணமாக தான் வகித்து வரும் சுகாதார அமைச்சர் பதவியை பறிக்க புகையிலை நிறுவனமும் மருந்து நிறுவனங்களும் எதிர்காலத்தில் முயற்சிகளை எடுக்கக்கூடும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
களுத்துறையில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
புகையிலை நிறுவனம் அரசாங்கத்திற்கு வருடந்தோறும் 100 பில்லியன் வரி வருமானத்தை வழங்கி வருகிறது. இலங்கையில் புகைத்தல் மற்றும் மதுசாரம் அருந்துவதன் காரணமாக வருடந்தோறும் 35 ஆயிரம் பேர் உயிரிழக்கின்றனர்.
தற்போது தொற்றா நோய்களை இல்லாமலாக்குவதில் அரசாங்கம் பல சவால்களை எதிர்நோக்குகின்றது. இதற்கென தேசிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ள போதிலும் சமூக நலன்கருதி என்னால் முன்னெடுக்கப்படும் செயற்றிட்டங்களை பலரும் விமர்சிக்கின்றனர். தொற்றா நோய்களில் புகைத்தல் காரணமாகவே அதிகளவிலானோர் பாதிக்கப்படுகின்றனர். நல்லாட்சி அரசாங்கத்தில் புகையிலைசார் உற்பத்திகளை குறைப்பதற்காகவே 90 சதவீத வரி அதிகரிக்கப்பட்டது. அது மட்டுமல்லாது சிகரட் பைக்கற்றுக்களில் 80 சதவீத எச்சரிக்கை விளம்பரம் கட்டாயமாக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது கடைகளில் ஒரு சிகரட்டை அல்லது தனித்தனி சிகரட்டுக்களை விற்பனை செய்ய தடைவிதிக்கும் சட்டம் அடங்கிய யோசனை அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்பிக்கப்பட உள்ளதுடன் அது நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னர், சிகரட் பெட்டிகளை மாத்திரமே கடைகளில் விற்பனை செய்ய முடியும்.
சுகாதார துறைக்காக தான் செயற்படுத்தி வரும் வேலைத்திட்டங்கள் காரணமாக தான் வகித்து வரும் சுகாதார அமைச்சர் பதவியை பறிக்க புகையிலை நிறுவனமும் மருந்து நிறுவனங்களும் எதிர்காலத்தில் முயற்சிகளை எடுக்கக் கூடும். அவற்றைக்கண்டு நான் ஒருபோதும் அஞ்சப்போவதில்லை. இந்நாட்டு மக்களின் சுகாதார நலனை பேணுவதில் அனைவரும் அர்ப்பணிப்போடு செயற்பட வேண்டும். அதற்கான முயற்சிகளை நான் எப்போதும் எடுக்க தயாராகவுள்ளேன் என்றார்.

