கவிஞர் தீபச்செல்வனுக்கு அமெரிக்க விசா மறுப்பு

156 0

அமெரிக்காவில் நடைபெறும் இலக்கிய மாநாட்டுக்குச் செல்வதற்காக விண்ணப்பித்திருந்த  ஈழ கவிஞர் தீபச்செல்வனுக்கு விசா மறுக்கப்பட்டுள்ளது. இரண்டு முறை விண்ணப்பித்திருந்தும் அமெரிக்கத் தூதரகம் தனக்கு விசா வழங்க மறுத்துவிட்டதாகக் கூறியிருக்கும் தீபச்செல்வன், எதிர்காலத்தில் இந்தியாவுக்குச் செல்லவும் தனக்கு விசா மறுக்கப்படலாம் என கவலை தெரிவித்திருக்கிறார்.

நாவலாசிரியர், கவிஞர், சிறுகதை எழுத்தாளர், திரைப்படப் பாடலாசிரியர், வசனகர்த்தா எனப் பல தளங்களில் இயங்கிவருபவர் கவிஞர் தீபச்செல்வன். அவர் எழுதிய ‘பதுங்கு குழியில் பிறந்த குழந்தை’, ‘நான் ஸ்ரீலங்கன் இல்லை’ ஆகிய கவிதைத் தொகுப்புகளும், ‘நடுகல்’ என்ற நாவலும் தமிழ் வாசகப் பரப்பில் மிகுந்த கவனம் பெற்றவை. சமீபத்தில் அவர் எழுதிய ‘பயங்கரவாதி’ நாவல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

இந்நிலையில், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள வட அமெரிக்க தமிழ் சங்கத்தின் (FeTNA) 36-வது தமிழ் விழா ஜூன் 30-ம் தேதி தொடங்குகிறது. இந்த நிகழ்வில் பங்குபெறுமாறு தீபச்செல்வனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதற்காக இலங்கைத் தலைநகர் கொழும்புவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் விசாவுக்காக அவர் விண்ணப்பித்திருந்தார். ஆனால், அவர் நாடு திரும்புவார் என்ற நம்பிக்கை அல்லது முகாந்திரம் இல்லை, அமெரிக்காவில் குடியேறிவிடுவார் என்று கூறி அமெரிக்கத் தூதரகம் அவருக்கு விசா வழங்க மறுத்துவிட்டது. இரண்டாவது தடவையாக விசா கோரி விண்ணப்பித்தபோதும், அதே காரணம் கூறப்பட்டு விசா மறுக்கப்பட்டது.

இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ டிஜிட்டலிடம் பேசிய தீபச்செல்வன், “இலங்கையில் தொடர்ந்து வாழ வேண்டும்; ஆசிரியர் பணி செய்ய வேண்டும்; தொடர்ந்து இலங்கையில் இருந்து எழுத வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம் என்று கூறியபோதும் அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் அதைப் பொருட்படுத்தவில்லை.

ஒடுக்கப்பட்ட இலங்கை மக்களின் குரலாய் இந்த மண்ணில் வாழ்ந்து உரிமைகளைப் பெறுவதே என் எண்ணம். அதற்கு ஜனநாயக தளத்தில் தம் பண்பாடுகள், அடையாளங்கள் சார்ந்த குரலை முன்வைக்கவே மாநாட்டுக்குச் செல்ல வேண்டும் என்று விரும்பினேன். ஆனால், பொருத்தமில்லாத காரணத்தைச் சொல்லி எனக்கு விசா வழங்க மறுத்துவிட்டார்கள். அமெரிக்கத் தூதரகமே மறுத்துவிட்டதால், இனி இந்தியாவுக்கு வரவும் எனக்கு விசா வழங்கப்படுவது சந்தேகம்தான்” என்று கூறினார்