கேப்பாபுலவு மக்களின் போராட்டம் தொடர்கிறது. போராட்டத்தில் பதற்றம் வீதியில் மயங்கிய பெண். ஆத்திரமடைந்த ஒருவர் தற்கொலைக்கு முயற்சி

272 0

கேப்பாபுலவு மக்கள் தமது சொந்த கிராமத்தையும் தமது வீடுகளையும் கையகப்படுத்தி நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் அதனை விட்டு வெளியேற வேண்டுமென தெரிவித்து இன்றுடன் 13ஆவது நாளாக தொடர் போராட்டத்தினையும் 3ஆவது நாளாக சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தினையும் மேற்கொண்டு வருகின்றனர்.

கேப்பாபுலவில் அமைந்துள்ள முல்லைத்தீவு இராணுவத்தலைமையக பிரதான நுழைவாயில் முன்பாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் நேற்றைய தினம் பெண்ணொருவர் திடீரென வீதியில் மயங்கி விழுந்த நிலையில் உடனடியாக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அத்துடன், தமது உறவுகள் தமது சொந்த நிலத்தை கேட்டு வீதியில் உணாவிரதமிருப்பதை இராணுவம் வேடிக்கை பார்ப்பதாகவும் தனக்கு தனது நிலம் பறிபோனதால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும் தெரிவித்து ஆத்திரமடைந்த ஒருவர் இராணுவத்தலைமையக வாயில் முன்பாக அமைக்கப்பட்டுள்ள நீர்த்தொட்டியில் விழுந்து தற்கொலைக்கு முயற்சி செய்த நிலையில் உடனே அருகிலிருந்த மக்கள் அவரை காப்பாற்றி வெளியே எடுத்தனர்.

இதனால் பிரதேசத்தில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது இதனை தொடர்ந்து மக்கள் ஆத்திரமடைந்தவர்களாய் இராணுவவத்தை கண்டபடி திட்டி தீர்த்தனர்.

இந்த நிலையில் தமது சொந்த நிலங்களை இராணுவம் விடுவிக்கவேண்டுமென தெரிவித்து சாகும் வரையிலான உண்ணாவிரதத்தில் ஈடுபடும் வரும் இருவரையும் மருத்துவர்கள் சோதனை செய்துள்ளனர்.

இருவரது உடல் நிலையும் மிகவும் மோசமடைந்து செல்வதாகவும் இன்னும் சில நாட்கள் தொடர்ந்தால் உயிர் ஆபத்து ஏற்படும் நிலை காணப்படுவதாகவும் வைத்தியர்கள் தெரிவித்தனர்.