வவுனியா நகரசபை அதிகாரியின் பொறுப்பற்ற செயலால் வருமானம் இழப்பு

115 0

வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதியில் 218 கட்டடங்களுக்கு இதுவரை வாழ்வியல் குடிபுகுதல் சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படாதிருப்பதோடு, நான்கு சட்டவிரோத கட்டடங்களுக்கு கட்டணம் அறவிடப்படாமையால் 3,32,969 ரூபா வருமான இழப்பு ஏற்பட்டுள்ளமை இலங்கை கணக்காய்வு திணைக்களத்தினரின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நகரசபையினர் கட்டிடங்களை கட்டுவதற்கு எவ்வாறு அனுமதி வழங்குகின்றார்களோ அதே போன்று அனுமதி எடுக்கப்படாது கட்டப்பட்ட கட்டடங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதும், அதற்கு அங்கிகாரம் மேவிய கட்டணங்களை அறவிடுவதற்கும் சபையினரே பொறுப்பானவர்களாவர்.

ஆனால் வவுனியா நகரசபையினர் தமது ஆளுகைக்குட்பட்ட இடங்களில் அனுமதி எடுக்கப்படாது கட்டப்பட்ட கட்டடங்கள் தொடர்பான முழுமையான தகவல்களை சேகரிக்கவில்லை, அவற்றிற்கு அறவிடப்படும் அங்கிகாரம் மேவிய கட்டணங்களை கூட அறவிடவில்லை அத்தோடு சட்டவிரோத கட்டடங்களுக்கு எதிராக நடவடிக்கைகளையும் இதுவரை எடுக்கப்படவில்லை. இதனால் சபையினருக்கு இலட்ச ரூபாய் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து 2021ஆம் ஆண்டு கணக்காய்வு திணைக்களத்தினால் வெளிவந்த பொழிப்பு அறிக்கையில் பின்வருமாறு சுட்டிக்காட்டப்பட்டிருந்து. மூன்று கட்டடங்களுக்கு அனுமதி வழங்கும் போது அனுமதிக்கப்பட்ட கட்டணத்தை விட குறைத்து அறவிடப்பட்டுள்ளதுடன், நான்கு கட்டடங்களுக்கு அங்கீகாரம் மேவிய கட்டணம் அறவிடப்படாமையால் ரூபா 3,32,969 வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது என சுட்டிக்காட்டி கட்டட அமைப்புக்களுக்கு அங்கீகாரம் மேவிய கட்டணம் நடைமுறையிலுள்ள சட்டங்கள் மற்றும் துணைவிதிகளுக்கமைய மேற்கொள்ளப்பட வேண்டும் என கருத்துரை வழங்கியிருந்தார்கள். அதற்கு சபையினர் எனது பணிப்புரைக்கு அமையவே கட்டட அனுமதி வழங்கப்பட்டது என பொருத்தமற்ற ரீதியில் பதில் வழங்கியிருந்தார்கள்.

எனினும், அதே ஆண்டு இறுதியாக வெளிவந்த அறிக்கையில் நகரசபையின் நிர்வாகத்திற்கு உட்பட்ட பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் அனுமதியற்ற கட்டடங்கள் தொடர்பில் மேற்பார்வை செய்து கணக்காய்விற்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை என சுட்டிக்காட்டி சட்டவிரோத கட்டுமானங்கள் தொடர்பான விபரங்கள் கணக்காய்விற்கு அறிக்கையிடப்பட வேண்டும் என கருத்துரை வழங்கியிருந்தார்கள். அதற்கு சபையினர் வட்டாரங்களில் அமைக்கப்பட்டுள்ள அனுமதியற்ற கட்டடங்கள் தொடர்பில் மேற்பார்வை செய்து அறிக்கையிடப்பட்டு வருகின்றது என பதிலளித்திருந்தார்கள்.

நகரசபை கட்டளை சட்டத்தின் கீழ் ஒவ்வொரு நகர சபையினருக்கும் என சில கடமைகள் வழங்கப்பட்டிருக்கும். சபையினரின் கீழ் இருக்கும் பகுதிகளில் அமைக்கப்படும் கட்டடங்களுக்கு பௌதீக ரீதியான இட அமைவுகளுக்கு ஏற்ப அனுமதி வழங்குவதும், அனுமதி பெறப்படாது சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட கட்டடங்களுக்கு அங்கீகாரம் மேவிய கட்டணங்களை அறவிடுவதும், அனுமதி பெற்ற கட்டடங்களுக்கு வாழ்வியல் குடிபுகுதல் சான்றிதழ் வழங்குவதும் சபையினரின் கடமையாகும்.

வாழ்வியல் குடிபுகுதல் சான்றிதழ் என்பது கட்டட அனுமதி வழங்கப்பட்டு, வழங்கப்பட்ட கட்டட அனுமதிக்கு அமைய பௌதீக கட்டடம் அமைக்கப்பட்டிருப்பின் குறித்த கட்டடத்திற்கு வழங்கப்படும் சான்றிதழ் ஆகும்.

அங்கீகாரம் மேவிய கட்டணம் என்பது கட்டட அனுமதி இன்றி அமைக்கப்படும் கட்டடங்களுக்கு அனுமதி வழங்கப்படும் போது அறவிடப்படும் கட்டணம் ஆகும்.

இது தொடர்பாக தகவலறியும் உரிமைச்சட்டம் மூலம் பின்வருமாறு வினவப்பட்டிருந்தது.

நகரசபையின் எல்லைக்குட்பட்ட பகுதியில் அனுமதி எடுத்து கட்டப்பட்ட கட்டடங்கள் எத்தனை?, சபையினால் அனுமதி வழங்கப்பட்டு கட்டப்பட்ட கட்டடங்களுக்கு வாழ்வியல் குடிபுகுதல் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளனவா? இல்லை எனின் அதற்கு தாங்கள் எடுத்த நடவடிக்கை , எத்தனை கட்டடங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது? என வினவியதற்கு 283 கட்டடங்கள் அனுமதி எடுத்து கட்டப்பட்டுள்ளது எனவும் வழங்கப்பட்ட கட்டட அனுமதிக்கு அமைவாக பௌதீக ரீதியாக கட்டடம் அமைக்கப்பட்டால் அதற்கு குடிபுகுதல் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாகவும், 218 கட்டடங்களுக்கு குடிபுகுதல் சான்றிதழ் வழங்கப்படவில்லை எனவும் அதற்கு எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் பதிலளித்திருக்கின்றார்கள்.

இது தொடர்பாக வவுனியா நகரசபை செயலாளர் வி.நிஸங்க அவர்களிடம் வினவிய போது,

தனக்கு இது தொடர்பில் தகவல் தெரியாது எனவும் ஊடகங்களுக்கு என்னால் கருத்து கூற முடியாது. எனவும் பதிலளித்திருந்தார்.

வவுனியா நகரசபையினர் தமக்கு கீழ் உள்ள பத்து பகுதிகளிலும் அமைக்கப்படும் கட்டடங்களுக்கு அனுமதி வழங்கி அதன் மூலம் வருமான மீட்டுவதும், அனுமதி பெறப்படாது சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட கட்டடங்களுக்கு தண்டப்பணத்தினை அறவிட்டு வருமானத்தினை பெற்று கொள்வதும் அனுமதி பெறப்பட்டு கட்டடப்பட்ட கட்டடங்களுக்கு வாழ்வியல் குடிபுகுதல் சான்றிதழ் வழங்குவதும் நகரசபையினரின் வழமையான செயற்பாடாகும்.

அந்தவகையில் வவுனியா நகரிற்குட்பட்ட பகுதிகளில் அனுமதி எடுக்கப்பட்டு கட்டடப்பட்ட கட்டடங்கள் பல இருக்கின்றது. அவற்றிற்கு நகரசபையினரால் முழுமையாக வாழ்வியல் குடிபுகுதல் சான்றிதழ் இதுவரை வழங்கவில்லை. அத்தோடு அனுமதி வழங்கும் போது அறவிடப்பட வேண்டிய தொகையினையும் குறைத்தே அறவிடுகின்றார்கள், அதுமட்டுமன்றி சபையினரிடம் அனுமதி எடுக்கப்படாமல் கட்டப்பட்ட கட்டடங்களுக்கு அறவிடப்பட வேண்டிய அங்கீகாரம் மேவிய கட்டணத்தினையும் இதுவரை அறவிடவில்லை. இதனால் சபையினருக்கு கிடைக்க வேண்டிய பல இலட்ச வருமானம் கிடைக்காமல் போயிருக்கின்றது.

வவுனியா நகரசபையினரின் ஆளுகைக்குட்பட்ட பத்து வட்டார பகுதிகளிலும் 283 கட்டடங்கள் அனுமதி எடுக்கப்பட்டு கட்டப்பட்டுள்ளது. அதில் 65 கட்டடங்களுக்கு மட்டுமே சபையினர் இதுவரை வாழ்வியல் குடிபுகுதல் சான்றிதழினை வழங்கியுள்ளார்கள். இதனால் சபையினருக்கு கிடைக்கவேண்டிய வருமானம் இழுக்கப்பட்டுள்ளது.ஆனால் சபையினரால் தொகை குறித்து காட்டப்படவில்லை.

இது தொடர்பாக 2018, 2019, 2020ஆம் ஆண்டு கணக்காய்வு திணைக்களத்தினால் வெளிவந்த பொழிப்பு அறிக்கையில் சபையினரால் கட்டட அனுமதி வழங்கப்பட்டவர்களில் 219 தரப்பினர்களுக்கு வாழ்வியல் குடிபுகுதல் சான்றிதழினை நாளதுவரை வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டு உரிய அறிவுறுத்தல்களுக்கமைய செயற்பட வேண்டும் என பரிந்துரை வழங்கியிருந்தார்கள். அதற்கு சபையின் கணக்கீட்டு உத்தியோகத்தர் உரிய முறையில் அனுமதி பெறப்பட்டு பூர்த்தி செய்யப்பட்டு வாழ்வியல் குடிபுகுதல் சான்றிதழ் கோரப்பட்டவர்களுக்கு எம்மால் வாழ்வியல் குடிபுகுதல் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகின்றது என்பதுடன் ஏனையவர்கள் தொடர்பாக தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என பதிலளித்திருந்தார்கள்.

கணக்காய்வு திணைக்களத்தினர் வினவியதற்கு குடிபுகுதல் சான்றிதழ் வழங்க தொடர் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்த சபையினர் கட்டுரையாளனுக்கு குடிபுகுதல் சான்றிதழ் வழங்க இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் குடிபுகுதல் சான்றிதழ் வழங்கப்படாமைக்கான காரணம் பற்றி வினவியதற்கு பதில் எதுவும் குறிப்பிட்டிருக்கவில்லை. எனினும் கணக்காய்வு திணைக்களத்தினர் குறித்த விடயத்தினை சுட்டிக்காட்டி ஐந்து வருடங்களை கடந்தும் நகரசபையினர் குடிபுகுதல் சான்றிதழ் வழங்க எவ்விதமான ஆக்க பூர்வமான நடவடிக்கைகளையும் மேற்காெண்டிருக்கவில்லை. என்பது வெளிப்படையாகின்றது.

இது தொடர்பாக கட்டுரையாளனால் தகவலறியும் உரிமை சட்டம் மூலம் பின்வருமாறு வினவப்படிருந்தது. அனுமதி எடுக்கப்படாது கட்டடப்பட்ட கட்டடங்கள் எத்தனை? அதன் விபரம்? அனுமதி இல்லாது கட்டப்பட்ட கட்டடங்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்? என வினவப்பட்டதற்கு நகரசபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அனுமதி பெறப்படாது அமைக்கப்பட்ட கட்டடங்கள் தாெடர்பான விபரங்களை திரட்டும் வேலைத்திட்டம் வட்டார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மூலம் முன்னெடுக்கப்படுவதனால் விபரங்கள் திரட்டப்பட்ட பின்னர் அனுமதி பெறப்படாது அமைக்கப்பட்ட கட்டடங்கள் தாெடர்பான விபரங்கள் அனுப்பி வைக்கப்படும் எனவும், நகரசபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அனுமதி பெறப்படாது அமைக்கப்பட்ட கட்டடங்கள் தொடர்பான விபரங்களை திரட்டும் வேலைத்திட்டம் வட்டார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மூலம் முன்னெடுக்கப்படுவதனால் விபரங்கள் திரட்டப்பட்ட பின்னர் அனுமதி பெறப்படாது அமைக்கப்பட்ட கட்டடங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பதிலளித்திருந்தார்கள்.

இது தொடர்பாக முன்னாள் நகரசபை தவிசாளர் கௌதமனிடம் நீங்கள் தவிசாளராக பணியாற்றிய காலத்தில் இருந்து இன்றுவரை அனுமதி பெற்று கட்டப்பட்ட கட்டடங்களில் அதிக கட்டடங்களுக்கு குடிபுகுதல் சான்றிதழ் ஏன் இதுவரை வழங்கப்படவில்லை குடிபுகுதல் சான்றிதழின் முக்கியத்துவம் ,சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட கட்டங்கள் தொடர்பாகவும் வினவிய போது,

குடிபுகுதல் சான்றிதழ் வங்கியில் கடன் மக்களுக்கு எடுக்கும்போதே அவசியமாகின்றது. கடன் பெறும் தேவை ஏற்படும்வரை மக்களும் அதனை பெறுவதற்கு ஆர்வம் காட்டுவதில்லை. நகர அபிவிருத்தி அதிகாரசபையின் விதிமுறைகளுக்கமைய அனுமதி பெற்று கட்டப்பட்ட கடங்களுக்கு உரித்தானவர்கள் ஒருவருடத்திற்குள் வாழ்வியல் குடிபுகுதல் சான்றிதழினை எடுக்க வேண்டும். இல்லாவிடில் குறித்த நாளில் இருந்து ஒருநாளைக்கு 500 ரூபா தண்டம் அறவிடப்படுகின்றது. மீண்டும் அவர்கள் குடிபுகுதல் சான்றிதழினை பெற வரும் போது குறித்த தண்டபணத்தினை செலுத்தியே குடிபுகுதல் சான்றிதழினை பெறமுடியும். சிலர் வழங்கப்பட்ட விதிமுறைகளை மீறி கட்டடங்களை கட்டும் போது குடிபுகுதழ் சான்றிதழ் வழங்குவதில் சிக்கல்கள் ஏற்படும். அந்த நேரத்திலே சபையினர் தண்டப்பணத்தினை அறவிடுகின்றார்கள்.

குடிபுகுதல் சான்றிதழ் வழங்கப்படாமைக்கு மக்களின் அக்கறையின்மையும் அதேநேரம், மக்களை அலைக்கழிக்கும் அதிகாரிகளின் பொறுப்பற்ற செயலுமே காரணமாகும் அனுமதி இல்லாது கட்டப்பட்ட கட்டங்களுக்கு எதிராக நான் ஆட்சியில் இருந்த காலங்களில் கடிதங்கள் அனுப்பி, சுவரொட்டிகள் மூலம் அறிவுறுத்தி அவற்றிற்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றது. என பதிலளித்திருந்தார்.

ஆகவே தகவலறியும் உரிமை சட்டம் மூலம் பெறப்பட்ட தகவல்களையும், கணக்காய்வு திணைக்கள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்ட விடயங்களினையும் ஒப்பிட்டு நோக்கும்போது வவுனியா நகரசபையினர் கட்டுரையாளனுக்கு தகவலறியும் உரிமை சட்டம் மூலம் இதுவரை அனுமதியற்ற கட்டடங்கள் தொடர்பான எவ்வித தகவல்களையும் சேகரிக்கவும் இல்லை. அதற்கு எதிராக நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருக்கவில்லை.எனவும்  அனுமதியற்ற கட்டிடங்களுக்கு அறவிடப்படும் அங்கீகாரம் மேவிய கட்டணத்தினையும் அறவீடு செய்யவில்லை என கூறியுள்ளார்கள். ஆனால் கணக்காய்வு திணைக்களத்தினரின் இறுதியாக வெளிவந்த 2021ஆம் ஆண்டு அறிக்கையில் அனுமதி பெறப்படாது அமைக்கப்பட்ட கட்டடங்கள் நான்கிற்கு அங்கிகாரம் மேவிய கட்டணம் அறவிடப்படாமையால் சபையினருக்கு 3,32,969 ரூபா வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது என சபையினரின் தரவுக்கு அமைய சுட்டிகாட்டியுள்ளார்கள்.

இது தொடர்பாக ஜனநாயக மக்கள் முன்னணியின் முன்னாள் நகரசபை உறுப்பினர் காண்டீபன் கூறியபோது, வியாபார நோக்கத்திற்காகவே சட்டவிரோத கட்டங்கள் அதிகம் அமைக்கப்படுகின்றது. எனவே அதனை உடனடியாக எம்மால் கட்டுப்படுத்த முடிவதில்லை . ஏனெனில் அனுமதியற்ற கட்டடங்களுக்கு எதிராக நாங்கள் எடுக்கும் தீர்மானத்தை நகரசபையின் சட்டதரணிகள் ஊடாக சமர்ப்பித்து உடனடியாக நீதிமன்ற உத்தரவினை பெறகூடிய வலுவான ஆட்சியதிகாரம் எங்களிடம் இருக்கவில்லை.

சபையின் கட்டடத்திற்கு மேலேயே ஒரு கட்டடம் கட்டப்பட்டு இருக்கின்றது. இதனை சபையின் மாதாந்த அமர்வில் கேட்டால் சபையின் தொழிநுட்ப பிரிவின் சட்டத்துடன் சமாந்தரமான கட்டமைப்பு இல்லாதபடியால் தான் ஒவ்வொரு அரச ஊழியரும் நீதிமன்றத்திற்கு ஏறி இறங்குவதற்கும், சட்டவிரோத கட்டடங்களை நீதிமன்றிற்கு கொண்டுசெல்லவும் விரும்புவதில்லை .இதனாலேயே சட்டவிரோத கட்டடங்கள் அதிகரிக்கின்றது.

அரச நிர்வாக இயந்திரத்தில் தகுதியானவர்களை நியமிக்காமல் பதில் நிர்வாக உத்தியோகத்தர்களை தகுதியற்றதன் அடிப்படையில் நியமிப்பதனாலேயே மேலதிக செயற்பாடுகளை செய்ய முடிவதில்லை. குடிபுகுதல் சான்றிதழினை ஒரு வாரத்திற்குள் வழங்க முடியும் ஆனால் தகுதியற்ற ஊழியர்கள் பதவியில் இருப்பதனாலேயே தமாதப்படுத்தப்படுகின்றது. என பதிலளித்திருந்தார்.

வாழ்வியல் குடிபுகுதல் சான்றிதழ் வழங்கப்படாமையால் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து பெயர் குறிப்பிட விரும்பாத சாதாரண பொதுமகன் ஒருவர் கூறும் போது நாங்கள் குடிபுகுதல் சான்றிதழை பெற்றுக்கொள்ள நகரசபைக்கு சென்றால் அங்கிருக்கும் அரச ஊழியர்கள் எங்களை பொருட்படுத்துவதில்லை. நாளைக்கு வாங்கோ என்று சாெல்லி சொல்லியே தாமதப்படுத்துவார்கள் அதனாலேயே நாம் அங்கு செல்ல விரும்புவதில்லை. நகரசபையினர் குடிபுகுதல் சான்றிதழினை எமக்கு உடனடியாக வழங்காமையினால் வங்கிகளில் கடன்பெறவோ, அல்லது பணத்தேவையின் நிமித்தம் வீடுகளை விற்கமுடியாமல் சிரமப்படுகின்றோம். அனுமதி எடுக்காமல் நிறைய கட்டடங்கள் கட்டிருக்காங்க ஆனால் அதுக்கு நடவடிக்கை எடுக்கமாட்டாங்க ஆனால் அனுமதி எடுத்து கட்டின கட்டடத்திற்கு நாங்கள் சேவையை பெற போன எங்கள அலைக்கழிப்பாங்கள் என பதிலளித்திருந்தார்.

எனினும் வவுனியா நகர சபையினருக்கு கணக்காய்வு திணைக்களத்தின் அறிக்கையில் குறித்த விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டு குறிப்பாக இரண்டு வருடங்களாகியும் அனுமதியற்ற கட்டிடம் தொடர்பாக எவ்வித நடவடிக்கைகளையும் சபையினர் எடுக்கவில்லை என்பதும், கணக்காய்வு திணைக்களத்தினருக்கு , கட்டுரையாளனுக்கும் வெவ்வேறு பதில் வழங்கியுள்ளார்கள். ஆகவே சபையினர்  கேட்கப்பட்ட வினாக்களுக்கு சரியான முறையில் பதிலளிக்க தவறியிருப்பதும், சபையினரின்  பல இலட்ச வருமான இழப்பிற்கும் வவுனியா நகரசபையினரின்  பொறுப்பற்ற அதிகார நடாத்தையே காரணம் என்பதை வெளிப்படுத்துகின்றது.