அஸ்வெசும நிவாரண செயற்திட்டம் சமூக கட்டடைப்பில் பாரிய முரண்பாடுகளை தோற்றுவிக்கும். ஏழ்மையில் நிலையில் உள்ளவர்கள் இந்த செயற்திட்டத்தில் உள்வாங்கப்படவில்லை.
ஆகவே முறையான மதிப்பீட்டை மேற்கொள்ளும் வரை அஸ்வெசும செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதை இடைநிறுத்த வேண்டும் என பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ஜெகத் குமார் சுமித்ராராச்சி அரசாங்கத்திடம் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (23) இடம்பெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து உரையாற்றியதாவது,
சமூக கட்டமைப்பில் தீவிரமடைந்துள்ள ஏழ்மை நிலையை இல்லாதொழிக்க அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள அஸ்வெசும செயற்திட்டம் சமூக கட்டமைப்பில் பாரிய முரண்பாடுகளை தோற்றுவிக்கும் வகையில் உள்ளது.
தகுதியானவர்களுக்கு மாத்திரம் நிவாரண தொகை வழங்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டது.
அஸ்வெசும நிவாரண செயற்திட்டத்தில் நிவாரணம் பெறுவதற்கு தகுதியானவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள்.
தகுதியற்ற செல்வந்தர்கள் நிவாரண திட்டத்துக்குள் உள்வாங்கப்பட்டுள்ளார்கள்.ஆகவே இந்த திட்டத்தில் உண்மையான தரப்பினர் அடையாளப்படுத்தப்படவில்லை.
நிவாரணத்தை பெற்றுக்கொள்ள விண்ணப்பித்து புறக்கணிக்கப்பட்டவர்கள் மேன்முறையீடு செய்யலாம் என நிதியமைச்சு குறிப்பிட்டுள்ளது.மேன்முறையீட்டுக்கான காலவகாசம் நீடிக்கப்பட வேண்டும்.
குளறுபடிகளுடன் இந்த செயற்திட்டத்தை அமுல்படுத்தினால் சமூக கட்டமைப்பில் பாரிய முரண்பாடுகள் தோற்றம் பெறும்.
ஆகவே பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வரை செயற்திட்டத்தை அமுல்படுத்துவதை தற்காலிகமாக இடைநிறுத்த வேண்டும் என்றார்.

