உள்நாட்டு கடன் மறுசீரமைப்புக்கு நாங்கள் செல்ல மாட்டோம் என சர்வதேச நாணய நிதியத்துக்கு தெரிவிக்க அரசாங்கம் முன்வந்தால், எதிர்க்கட்சியில் இருக்கும் அனைவரும் அதற்காக அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்க தயாராக இருப்போம். அத்துடன் எமது அரசாங்கத்தில் சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துகொண்டுள்ள ஒப்பந்தம் தொடர்பில் மீள் பேச்சுவார்த்தைக்கு செல்வோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேதாச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (22) இடம்பெற்ற அண்மையில் ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு நிகழ்த்திய உரை மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
ஜனாதிபதியின் உரையின் போது தேசிய பரிணாமம் தொடர்பில் குறிப்பிட்டிருந்தார். அதற்கு பதிலாக தேசிய அனர்த்தமும் பேரவலமுமே இப்போது ஏற்பட்டுள்ளது.
இந்த பாராளுமன்றத்திற்கு வந்து இங்கே அதிசொகுசாக இருக்கும் போது, கீழ்மட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் தெளிவுகள் இல்லாமல் இருக்கலாம் ஆனால் கொவிட் காலத்தில் நாடு வங்குரோத்தடைவதற்கு முன்னர் நோயை கண்டுபிடித்து சுகப்படுத்த நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
அவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. முறையாக கணக்கெடுப்புகள் நடத்தாது எப்படி அஸ்வெசும வேலைத்திட்டத்தை செயற்படுத்த முடியும். நாட்டில் 70 வீதமான மக்கள் வறுமையில் இருப்பதாக லேன்ட் ஆசிய நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இதனால் முதலில் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும். 14 வீதமாக இருந்த வறுமை நிலைமை 31 வீதம் வரையில் அதிகரிகத்துள்ளது.
தோட்டப்புறங்களிலேயே அதிகளவில் வறுமை காணப்படுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது மலையகத்தில் மொத்த சனத்தொகையில் 51வீதமானவர்கள் வறுமை நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இப்போது அஸ்வெசும என்று கண்கட்டு வித்தையொன்றை அரசாங்கம் முன்னெடுக்கின்றது. அதனால் இப்போதாவது கணக்கெடுப்பை முன்னெடுத்து நடவடிக்கை எடுக்குமாறு கோருகின்றோம். வீடுகளில் 32 வீதமான சொத்துக்களை தங்களின் வாழ்வாதரத்துக்காக விற்றுள்ளனர். 2 இலட்சம் வரையிலான பிள்ளைகள் பாடசாலைகளுக்கு செல்ல முடியாது இருக்கின்றனர்.
சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில் துறையில் உள்ளவர்கள் விழுந்துள்ளனர். அவர்கள் கடும் நெருக்கடிக்குள் சிக்கியுள்ளனர். பெரிய நிறுவனங்களும் அவ்வாறான நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளன. பிரேமதாச காலத்தில் நாட்டுக்கு டொலர்களை கொண்டுவருவதற்காக அமைக்கப்பட்ட ஆடைத்தொழிற்சாலைகள் பல மூடப்படுகின்றன.
அன்று திறக்கும் போது வெள்ளைக்காரர்களுக்காக உள்ளாடை தொழிற்சாலைகள் திறக்கப்படுவதாக கூறினர். இப்போது மூடப்படும் போது அரசாங்கம் என்ன கூறப்போகிறது. உள்ளாடைகளை அரசாங்கத்தில் அனைவரும் தலையால் போட்டுக்கொண்டுள்ளனர்.
இதேவேளை விவசாயிகள் பெரும் பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளனர். 100 ரூபாவுக்கு நெல்லை கொள்வனவு செய்வதாக அரசாங்கம் கூறிய போதும், 80 ரூபாவுக்கும் வழங்கப்படுவதில்லை. உரம் தொடர்பிலும் பிரச்சினைகள் உள்ளன. இவை தொடர்பில் கேட்கும் போது அமைச்சர்கள் பதிலளிக்காது ஒளிந்துகொள்கின்றனர். தரமற்ற உரம் தொடர்பில் அமைச்சர்களுக்கு பொறுப்புகள் உள்ளன. அவர்கள் அதற்கு பதிலளிக்க வேண்டும்.
மேலும் சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து செயற்படுவது தொடர்பில் தவறில்லை. ஆனால் அதனுடனான செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. உள்நாட்டு கடனை மறுசீரமைக்கும் இணக்கப்பாட்டுக்கு செல்லாமல் 20 நாடுகள் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக்கொண்டுள்ளன.
அந்த நாடுகளுக்கு முடியும் என்றால் ஏன் எமக்கு முடியாது என கேட்கிறோம். உள்நாட்டு கடன் மறுசீரமைப்புக்கு செல்லப்போவதில்லை என மத்திய வங்கி ஆளுநர் உட்பட பலர் தெரிவித்து வந்தார்கள். ஆனால் ஜனாதிபதி தெரிவித்ததுடன் அரசாங்கம் தனது கொள்கையை மாற்றிக்கொண்டது.
மேலும் உள்நாட்டு கடன் மறுசீரமைப்புக்கு நாங்கள் செல்ல மாட்டோம் என சர்வதேச நாணய நிதியத்துக்கு தெரிவிக்க அரசாங்கம் முன்வந்தால், எதிர்க்கட்சியில் இருக்கும் அனைவரும் அதற்காக அரசாங்கத்துக்கு ஆதரவாக இருப்போம். உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு செய்யும்போது அதவானமாக கையாளுமாறே சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.
அதனால் எமது அரசாங்கத்தில் சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துகொண்டுள்ள ஒப்பந்தம் தொடர்பில் மீள் பேச்சுவார்த்தைக்கு செல்வோம் என்பதை தெளிவாக தெரிவித்துக்கொள்கிறோம். உள்நாட்டு கடன் மறுசீமைப்புக்கு அரசாங்கம் மீள் பேச்சுவார்த்தைக்கு செல்வதாக இருந்தால் அதற்காக நாங்கள் பூரண ஆதரவை வழங்குவோம்
அரசாங்கத்திற்கும் எங்களுக்கும் இடையில் உள்ள வேறுபாடுகள் உள்ளன. பொருளாதாரத்தை சுருக்கி தீர்வு காண அரசாங்கம் முயற்சிக்கின்றது. ஆனால் நாங்கள் பொருளாதாரத்தை விஸ்தரித்தே தீர்வு காண முடியும் என்று கூறுகின்றோம். அரசாங்கத்தின் செயற்பாடுகள் பொருளாதார ஸ்திர நிலைக்கு செல்ல முடியாத நிலையே உள்ளது. ஏற்றுமதியை விரிவுபடுத்த வேண்டும். அதற்காக முறையான வேலைத்திட்டங்களை முன்னெடுக்குமாறு கோருகின்றோம் என்றார்

