யார் ஆட்சிக்கு வந்தாலும் ஊழலை ஒழிக்க முடியாது

92 0

மோசடி செய்யப்பட்ட அரச நிதியை அரசுடமையாக்குவதாக குறிப்பிட்டுக் கொண்டு ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கத்தில் ஊழல்வாதிகள் எவரும் சட்டத்தின் முன் முன்னிலைப்படுத்தப்படவில்லை.

யார் ஆட்சிக்கு வந்தாலும் ஊழலை இல்லாதொழிக்க முடியாது என்று மக்கள் குறிப்பிடுவது உண்மையே என பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (21) இடம்பெற்ற ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

ஊழல் என்பது புதியதொரு விடயமல்ல அரச காலத்தில் இருந்து ஊழல் காணப்படுகிறது.தேர்தல் முறைமை ஊடாகவே ஊழல் அதிகரித்துள்ளது.

பாராளுமன்றத்துக்கு வருகை தருவது என்பது வியாபாராமாக உள்ளது.இந்த தன்மை  ஆளும் தரப்பிலும் காணப்படுகிறது.எதிர்தரப்பிலும் காணப்படுகிறது.

மோசடி செய்யப்பட்ட அரச நிதியை மீண்டும் அரசுடமையாக்குவதாக  நல்லாட்சி அரசாங்கத்தில் குறிப்பிடப்பட்டது.இதனால் பலர் அரசாங்கத்துடன் ஒன்றிணைந்தார்கள்.

இதற்காக பிரத்தியேக  பிரிவு உருவாக்கப்பட்டது.அலரி மாளிகையில் சிறப்பு காரியாலயம் ஒன்று உருவாக்கப்பட்டது.

இறுதியில் ஒருவரை கூட சட்டத்தின் முன் முன்னிலைப்படுத்தவில்லை.ஆகவே யார் ஆட்சிக்கு வந்தாலும் ஊழலை இல்லாதொழிக்க முடியாது என்று மக்கள் குறிப்பிடுவது உண்மை.

காலத்துக்கு தேவையான சட்டங்களை இயற்றியாவது ஊழலை ஒழிக்க வேண்டும்.வெளிநாட்டு முதலீடுகளிலும் ஊழல் மோசடி காணப்படுகிறது.கடந்த காலத்தை உள்ளடக்கிய வகையில் ஊழல் எதிர்ப்பு சட்டம் உருவாக்கப்பட வேண்டும்.

விலைமனு கோரல் விவகாரத்தில் பாரிய ஊழல் மோசடி இடம்பெறுகிறது.ஆகவே விலைமனு கோரல் தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டும் என்றார்.