பாராளுமன்ற வரவு – செலவுத் திட்ட காரியாலயம் அமைக்கும் தீர்மானம் சிறந்தது

170 0

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் பாராளுமன்ற வரவு செலவுத் திட்ட காரியாலயத்தை அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளமை வரவேற்கத்தக்கது.

பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைந்துள்ள நாடுகளில் இவ்வாறான தன்மை காணப்படுகிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (20) இடம்பெற்ற பாராளுமன்ற வரவு செலவுத் திட்ட அலுவலக சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

நிதி ஒழுக்கம்,நிதி முகாமைத்துவ வெளிப்படை தன்மை தொடர்பில் விசேட கவனம் செலுத்தியுள்ளதாக அரசாங்கம் குறிப்பிடுகிறது.

அரசாங்கத்தின் வாக்குறுதிக்கும்,செயற்பாட்டுக்கும் இடையில்  பரஸ்பர வேறுபாடு காணப்படுகிறது.அரச நிதி விவகாரத்தில் அரசாங்கம் வெளிப்படைத்தன்மையுடன் செயற்பட்டிருந்தால்  நாடு வங்குரோத்து நிலை அடைந்திருக்காது.

மோசடி செய்யப்பட்ட அரச நிதி மீண்டும் அரசுடமையாக்கப்பட வேண்டும்,அரச நிதி விவகாரம் மற்றும் செயற்பாடுகள் வெளிப்படைத் தன்மையுடன் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைளை நாட்டு மக்கள் போராட்டம் (அரகலய) ஊடாக முன்வைத்தார்கள்.

பாராளுமன்ற வரவு செலவுத் திட்ட அலுவலகத்தை ஸ்தாபிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது வரவேற்கத்தக்கது.இந்த காரியாலயத்தை அமைக்க 2002 மற்றும் 2003 ஆம் ஆண்டு காலப்பகுதியில் விசேட கவனம் செலுத்தப்பட்டது இருப்பினும் பல்வேறு காரணிகளினால் அந்த முயற்சி தோல்வியடைந்தது.

பாரிய பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் பாராளுமன்ற வரவு செலவுத் திட்ட அலுவலகத்தை அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது சிறந்தது.

இந்த காரியாலயம் சுயாதீனத்தன்மையுடன் செயற்படுவது அத்தியாவசியமானது.பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைந்துள்ள நாடுகளில் இவ்வாறான முன்னேற்கரமான தன்மை காணப்படுகிறது.

நாட்டின் நிதி நிலை தொடர்பான அதிகாரம் பாராளுமன்றத்துக்கு பொறுப்பாக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்படுகிறது.

இருப்பினும் நிதி அதிகாரம் பாராளுமன்றத்தின் ஊடாக முழுமையாக செயற்படுத்தப்படுவதில்லை .ஆகவே இவ்விடயம் குறித்தும் எதிர்வரும் காலங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.