மத்திய மாநிலத்திற்கான மாவீரர் வெற்றிக் கிண்ண மெய்வல்லுநர் போட்டி -வில்லிச்.Germany,Willich 2023

541 0

விளையாட்டுகள் மனிதனுக்கு உடல், உளஉறுதியையும் புத்துணர்வையும் கொடுப்பவை. அவை போட்டியாக நடாத்தப்படும் போது ஒற்றுமையையும் மனமகிழ்வையும் வெற்றி தோல்வியை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தையும் கொடுக்கின்றன. யேர்மனியில் தமிழாலயங்களில் கல்வி கற்கும் எம் சிறார்கள் இப் பண்புகளைச் சிறுவயதிலிருந்தே வளர்த்துக் கொள்வதற்காக, மாவீரர் வெற்றிக் கிண்ண மெய்வல்லுநர் போட்டியைத் தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பு ஆண்டு தோறும் 5 மாநிலங்களில் நடாத்திவருகின்றது
அந்த வகையில் இந்த வருட மத்திய மாநிலத்திற்கான மாவீரர் வெற்றிக் கிண்ண மெய்வல்லுநர் போட்டி வில்லிச் நகரில் 17.06.2023 சனிக்கிழமை வெகுசிறப்பாக நடைபெற்று முடிந்தது. இதில் 13 தமிழாலயங்கள் ஆர்வத்துடன் பங்குபற்றியிருந்தன.

இப் போட்டியின் ஆரம்ப நிகழ்வாகப் பொதுச்சுடரினை வியர்சன் நகரக் கோட்டப் பொறுப்பாளர் திரு கோபாலசிங்கம் கேதீஸ்வரன் அவர்கள் ஏற்றிவைத்தார். தொடர்ந்து யேர்மன் தேசியக் கொடியைத் தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பின் பொறுப்பாளர் திரு தர்மலிங்கம் இராஜகுமாரன் அவர்களும் தமிழீழத் தேசியக்கொடியைத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் துணைப் பொறுப்பாளர் திரு சுப்பிரமணியம் ஜெயசங்கர் அவர்களும் தமிழ்க் கல்விக்கழகத்தின் கொடியைத் தமிழ்க் கல்விக்கழக நிதிப்பிரிவின் துணைப் பொறுப்பாளர் திரு பிரவின் செல்வேந்திரன் அவர்களும் ஏற்றி வைத்தனர்.

எம் மண்ணின் மைந்தர்கள் நினைவாக நடாத்தப்படும் இம் மெய்வல்லுநர் போட்டியின் ஆரம்ப நிகழ்வின் தொடர்ச்சியாகத் தாயக விடுதலைக்காக மரணித்த மாவீரர்களையும் கொல்லப்பட்ட மக்களையும் நாட்டுப்பற்றாளர்களையும் நினைவு கூர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டதும், வெற்றிச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டது. தொடந்து வீரர், வீராங்கனைகள் வெற்றிச் சுடரினைக் கைகளில் ஏந்தியவாறு மைதானத்தைச் சுற்றிஓடி வலம் வந்ததும் போட்டிகள் ஆரம்பமாகின.

முதலாவதாக அணிவகுப்பு இடம்பெற்றது. அணிகள் தங்கள் தமிழாலயக் கொடிகளைத் தாங்கியவாறு நேர்த்தியோடும் கம்பீரத்தோடும் மைதானத்தைச் சுற்றி அணிவகுத்து வந்தது பார்க்கத் தாயக நினைவுகளை மீட்டுவதாக அமைந்தது. தொடந்து போட்டியாளர்கள், நடுவர்கள் ஆயத்தமாக மற்றைய போட்டிகள் யாவும் ஆரம்பமாகின. பார்வையாளர்கள், பெற்றோர்களின் உற்சாக ஊக்கப்படுத்தலுடன் போட்டிகள் மிக விறுவிறுப்பாக நடைபெற்றன. ஒவ்வொரு போட்டியாளரும் தங்களுடைய திறமையை வெளிக்கொண்டு வரும் விதமாக மிகச் சிறப்பாக விளையாடினர். போட்டிகளின் முடிவுகள் உடனுக்குடன் அறிவிக்கப்பட்டு வெற்றியாளர்களுக்கான வெற்றிப்பதக்கங்கள் சமநேரத்தில் வழங்கப்பட்டன.

இறுதியாக சிறந்த வீரர், வீராங்கனைகளும் சிறந்த தமிழாலயங்களும் தெரிவு செய்யப்பட்டன. அதன் அடிப்படையில் 676 புள்ளிகளைப் பெற்று மேயர்புஸ் தமிழாலயம் முதலாம் இடத்தையும் 409 புள்ளிகளைப் பெற்றுக் கிறீபெல்ட் தமிழாலயம் இரண்டாம் இடத்தையும் 318 புள்ளிகளைப் பெற்று நொய்ஸ் தமிழாலயம் மூன்றாம் இடத்தையும் தமதாக்கிக் கொண்டன. இவர்களுக்கு வெற்றிக் கேடயங்கள் வழங்கப்பட்டு மதிப்பளிக்கப்பட்டது.

இறுதியாகத் தமிழீழத் தேசியக் கொடி இறக்கி வைத்ததோடு போட்டிகள் இனிதே நிறைவுபெற்றன.