தமிழ் மக்களின் அரசியல் எதிர்பார்ப்புகளும் வாழ்க்கைத் தேவைகளும் புறக்கணிக்கப்பட்டிருப்பது ஏன்?

209 0

தமிழ் மக்களின் அரசியல் எதிர்பார்ப்புகளும், வாழ்க்கைத் தேவைகளும் புறக்கணிக்கப்பட்டிருப்பது ஏன் என, சமத்துவம் மற்றும் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் அமைப்பாளர் முருகேசு சந்திரகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

பூநகரி வாடியடியில் பிரதேச மக்களைச் சந்தித்துக் கலந்துரையாடியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதன்போது தொடர்ந்து கருத்து வெளியிட்ட முருகேசு சந்திரகுமார்,
தமிழ் மக்களின் அரசியல் எதிர்ப்பார்ப்புக்களும், வாழ்க்கைத் தேவைகளும் புறக்கணிக்கப்பட்டிருப்பது ஏன்? எனவும், இதற்கு யார் பொறுப்புச் சொல்வது எனவும் கேள்வி எழுப்பினார்.

யுத்தம் நிறைவடைந்த நிலையிலும், மக்கள் யுத்தப் பாதிப்புக்களில் இருந்து முற்று முழுதாக நீங்க முடியாதிருப்பது எதற்காக? இந்த நிலைமை தொடர்ந்து நீடிப்பது தமிழ்ச்சமூகத்துக்கு நல்லதாக அமையுமா? இவற்றையெல்லாம் தீர்க்க வேண்டிய பொறுப்பிலுள்ளவர்கள் அதைச் செய்யாதிருப்பது ஏன்? இதை மக்கள் தட்டிக் கேட்க வேண்டிய காலம் பிறந்திருக்கிறது.

குறிப்பாகப் போரினால் பெரும் இழப்புகளைச் சந்தித்த குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் படுகின்ற துயரம் அளப்பரியது. அதைப்போல இளைய தலைமுறையினர் இன்று வேலை வாய்ப்பில்லாத நிலையில், எதிர்காலத்தை எப்படித் தீர்மானிப்பது என்று தெரியாத கட்டத்தில் இருக்கின்றனர். பூநகரிப்பிரதேசத்தை எடுத்துக் கொண்டால் இங்கே உள்ள மக்கள் எதிர்நோககியிருக்கும் பிரச்சினை தண்ணீர்ப் பிரச்சினையாகும்.

இதற்கான தீர்வைக் காணும் முகமாக நாம் கடந்த காலத்தில் கொக்குடையான் மாளாப்பு என்ற குளங்களை இணைத்து பூநகரி நீர்த்தேக்கம் என்ற பெருந்திட்டத்தை உருவாக்குவதற்கான வேலைகளைச் செய்திருந்தோம். அதைத் தொடர்ந்து முன்னெடுக்க முடியாமல் போனது துரதிஸ்டவசமானது. அந்தத் திட்டத்தை இப்பொழுது யார் முன்வந்து நிறைவேற்றுவார்கள் என மக்கள் காத்திருக்கின்றனர். இப்படி ஏராளமான மக்கள் பிரச்சினைகள் உள்ளன.

அரசியல் தீர்வை எட்ட வேண்டிய அதேவேளை மக்களுடைய வாழ்க்கைப் பிரச்சினைகளுக்கான தேவைகளையும் நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு அரசியல் தலைமைகளுக்குண்டு. அவை எந்தக் காரணம் கொண்டும் மக்களுக்குச் சாட்டுக்களைச் சொல்லித்தப்பி விட முடியாது. எனவும் முருகேசு சந்திரகுமார் இதன்போது குறிப்பிட்டார்.