காணி அபகரிப்பில் ஈடுபடுபவர்களால் கால்நடைகளுக்கு அச்சுறுத்தல்

155 0

மட்டக்களப்பு – பொலன்னறுவை எல்லைப் பகுதியில் உள்ள மயிலத்தமடு மாதவனை கால்நடை மேய்ச்சல் பகுதியில் மகாவலி கால் நிலையத்துக்கு அருகில் கன்று ஒன்றினை வயிற்றில் சுமந்த பசு மாடொன்று இறைச்சிக்காக வெட்டப்பட்டிருப்பதாகவும், இதே போன்று தொடர்ந்து திட்டமிட்டு கால்நடைகள் வெட்டப்பட்டு வருவதாகவும் நேற்று (18) கால்நடை உரிமையாளர்கள் கவலையோடு தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு மாவட்ட கிரான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட இந்த மேய்ச்சல் தரைப் பகுதியூடாக மகாவலி திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருவதால் மேய்ச்சல் தரை காணியை சிங்கள இனத்தவர்கள் சிலர் அத்துமீறி அபகரித்துவருவதாகவும் கூறப்படுகிறது.

அத்தோடு, அந்த பகுதிகளில் மேய்ச்சல் தரையில் இருந்து கால்நடைகளை அகற்றுவதற்காக, காணி அபகரிப்பில் ஈடுபடுபவர்கள், அங்கு மேய்ச்சலுக்காக சுற்றித் திரியும் மாடுகளை துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் வெட்டி அறுத்தும் இறைச்சிக்காக கொண்டு செல்வது தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.

நேற்றைய தினமும் காணாமல்போன பசு மாட்டை கால்நடை உரிமையாளர் தேடிச் சென்றபோது, மகாவலி கால் நிலையத்துக்கு அருகில் கன்றினை வயிற்றில் சுமந்த பசு ஒன்று இறைச்சிக்காக வெட்டப்பட்டு உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதுடன், கன்றை வயிற்றில் சுமக்கும் மாட்டை அறுக்கும் செயலானது மிகவும் மோசமான செயல் என கால்நடை பராமரிப்பாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, தேசிய பால் உற்பத்தியில் மட்டக்களப்பு மாவட்டத்துக்கே அதிக பங்குண்டு; இருந்தபோதும், இவ்வாறாக மாடுகளை வெட்டிக் கொல்லும் செயற்பாடானது கால்நடைகளுக்கு பாதுகாப்பற்ற நிலையை காட்டுகிறது; எனவே, இதுபோன்ற தகாத செயல்களில் ஈடுபடுபவர்களை பொலிஸார் கண்டுபிடித்து, சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், ஜனாதிபதி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் இந்த பிரச்சினைக்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கால்நடை பராமரிப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.