பிரசன்ன ரணவீரவின் வீட்டின் மீது தாக்குதல்

150 0

களனியிலுள்ள இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவின் வீட்டின் மீது ஞாயிற்றுக்கிழமை (18) இரவு சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

குறித்த வீட்டின் சொத்துக்கள் சேதமடைந்துள்ளதுடன், தாக்குதல் சம்பவம் தொடர்பில் சபுகஸ்கந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

களனி, சரத்சந்திர டயஸ் மாவத்தையில் அமைந்துள்ள சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவின் வீட்டின் மீது ஞாயிற்றுக்கிழமை (18) இரவு 10.50 மணியளவில் இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரனவீர,

மே தாக்குதலின் போது ஹுணுப்பிட்டிய விலிருந்த எனது  வீடு  தீக்கிரையாக்கப்பட்டது. அதன் பின்னர் மாலபே பகுதியிலுள்ள என்னுடைய தந்தையின் வீட்டில் தங்கியிருந்தோம்.

இந்த வீடும் எனக்கு சொந்தமானது. இருப்பினும் நேற்று முன்தினம் இரவு இந்த வீட்டின்  மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முன்னதாக தாக்கப்பட்ட எனது வீட்டுக்கு இன்றளவிலும் நட்டயீடு வழங்கப்படவில்லை. வீட்டுக்கு வருகை தந்தவர்கள் எனது பெயரையும், என்னுடைய மகனுடைய பெயரையும் அழைத்து கூச்சலிட்டுள்ளனர்.

காலி முகத்திடல் போராட்டத்தின் போதும்  எனது வீடு தாக்கப்பட்டது. இன்றும் தாக்கப்பட்டுள்ளது. இது எனக்கு பாரியதொரு பிரச்சினையாகும் என்றார்.