தேர்தலுக்கு செல்வதே நாட்டின் தற்போதைய பிரச்சினைகளுக்கு தீர்வு

150 0

பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ள இந்த சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அரசாங்கத்துக்குள் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன.

இந்த குழப்பங்களுக்கு ஜனாதிபதியே காரணம் என அனைவரும் உணர்ந்துள்ளனர். மேலும் அரசியல் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்காது உடனடியாக பாராளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தலுக்கு செல்வதே நாட்டின் தற்போதைய பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையும் என பாராளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

சனிக்கிழமை (17) யாழ்ப்பாணத்தில் நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் நாட்டின் அரசியல், பொருளாதார நிலைமை தொடர்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

மொட்டுக் கட்சியின் ஆதரவுடன் ஜனாதிபதி பதவிக்கு தெரிவு செய்யப்பட்ட ரணில் விக்கிரமசிங்க இன்று என்ன செய்வது என்பது தெரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறார்.

அரசாங்கத்துக்குள் நிலவும் குழப்பங்களும், மொட்டுக் கட்சிக்குள் நிலவும் குழப்பங்களுமே இதற்கு பிரதான காரணங்களாகும். நிரந்தரமில்லாத அரசாங்கத்தினுள் இன்று ஜனாதிபதியாக செயற்பட்டுக் கொண்டு மேலும் நாட்டின் அரசியல் ஸ்திரமற்ற நிலையை தோற்றுவிக்கும் நபராக அவர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

தற்போது நாட்டின் டொலர் பெறுமதி மீண்டும் அதிகரித்துள்ளது. பொருட்கள் சேவைகளின் விலைகள் அதிகரித்துள்ளது. மீண்டும் இலங்கையில் பொருளாதார தளம்பல் ஏற்பட்டு பொருளாதார நெருக்கடிகள் தோன்றும் நிலை ஏற்படுவதை அவதானிக்க முடியுமாகவுள்ளது. இதேவேளை தற்போது அரசியல் ஸ்திரமற்ற நிலையும் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே இந்த அரசியல் உறுதியில்லாத நிலையை உருவாவதற்கு காரணமாக இருந்தவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க என்பது எல்லோரும் உணர்ந்துள்ளனர்.

இந்நிலையில் உடனடியாக பாராளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலின் ஊடாக புதிய பாராளுமன்றத்தை உருவாக்கி ஸ்திரதன்மை வாய்ந்த பலமான அரசியலை உருவாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அப்போதுதான் நாட்டின் எதிர்கால சந்ததியினர் வாழ்வதற்கு வழி ஏற்படுத்திக் கொடுக்க முடியும் என்றார்.