யாழ். சர்வதேச விமான நிலையத்தை விஸ்தரிப்பது தொடர்பில் விசேட கலந்துரையாடல்

169 0

பலாலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் விஸ்தரிப்பு தொடர்பில் கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தலைமையில் இன்றைய தினம் (17) இடம்பெற்ற கலந்துரையாடலின்போது ஆராயப்பட்டது.

இதில் கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர், யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத் தூதுவர், விமான நிலைய உயர் அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இக்கலந்துரையாடலில் விமான நிலையத்தை வடக்கு பக்கமாக விஸ்தரிப்பதுடன், விமான சேவையை அதிகரிப்பது தொடர்பிலும் பேசப்பட்டது.

 

மேலும், விமானங்களின் வருகையை அதிகரிப்பது, அதிகளவான ஆசனங்களை கொண்ட விமானங்களை சேவையில் ஈடுபடுத்துவதன் மூலம் தொடர்ந்து அந்நிய செலாவணியை பெற்றுக்கொள்வது, யாழ்ப்பாண மக்கள் இலகுவான முறையில் பிரயாணத்தை மேற்கொள்வதற்கான வசதி வாய்ப்புகள் தொடர்பிலும் ஆலோசனைகள் இதன்போது முன்வைக்கப்பட்டன.

அத்துடன் விமான இறங்குதளம் விஸ்தரிக்கப்பட வேண்டும் எனவும், மக்களுடைய காணிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல், மேலும் நிலங்கள் சுவீகரிக்கப்படாமல் இறங்குதளம் விஸ்தரிக்கப்பட வேண்டும் எனவும் பேசப்பட்டது.

அவ்வேளை பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், கூடுதலாக விமான நிலையத்தின் வடக்கு பக்கமாக அதாவது கடல் பக்கமாக, இயன்றளவு காணிகளையும் ஓடுதளத்தையும் விஸ்தரித்து, தெற்கு பக்கத்தில் மிக சொற்ப அளவிலான காணிகளை எடுத்து விஸ்தரிக்க வேண்டும் என்றவாறு தனது ஆலோசனைகளை முன்வைத்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மக்களுக்கு பாதிப்பில்லாதவாறு விமான நிலைய விஸ்தரிப்பை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியமையும் குறிப்பிடத்தக்கது.