ஆறு இளைஞர்கள் பொலிஸ் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது

207 0

நாட்டில் இவ்வருடம் பொசன் பௌர்ணமி தினத்தன்று பல பாகங்களிலும் உணவு மற்றும் பானங்கள்  தானமளிக்கும்  நிகழ்வுகள் இடம்பெற்றன.  அதேபோல் சில இளைஞர்கள் மதுபானம் தானமளிப்பது போன்ற வீடியோவை சமூக வலைத்தளமான ‘டிக் டொக்’ ல் பதிவேற்றியிருந்தனர்.

குறித்த வீடியோ அதிகமாக பகிரப்பட்டதும் குறிப்பிடத் தக்கது. எனவே மதுப் பாவனையை ஊக்குவித்த குற்றச்சாட்டின் பேரில் குறித்த காணொளியை பதிவேற்றிய ஆறு இளைஞர்களை  பொலிஸ்  கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

இந்தக்  காணொளி சமூக ஊடகங்களில் பரவி வந்தமையால் , பொலிஸ்மா அதிபர் இது தொடர்பான விசாரணைகளை கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளார்.

இதன்படி, 20 முதல் 25 வயதுக்குட்பட்ட 6 பேர் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டு, அவர்களிடமிருந்து வீடியோ தொடர்பாக நீண்ட வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

விசாரணைகளின் போது, இளைஞர்கள் தங்கள் உறவினர் ஒருவர் வெளிநாட்டிலிருந்து கொண்டு வந்த  வெற்று வெளிநாட்டு மதுபான போத்தல்களில் தேநீரை ஊற்றியதாகவும்  டிக்டொக்கில் வீடியோ கிளிப்பை தயாரிப்பதற்காக இந்தச் செயலை செய்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், குறித்த ஆறு பேரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர்கள் கட்டுநாயக்க பிரதேசத்தில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.