கம்பஹா மேல் நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டு சுனாமி அனர்த்தத்தின் போது தப்பிச்சென்று தலைமறைவாகியிருந்த கைதி ஒருவர் சுமார் 19 வருடங்களுக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளார்
குறித்த நபர் நேற்று முன்தினம் ராகம பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
2001 ஆம் ஆண்டு ராகம பிரதேசத்தில் நபர் ஒருவரைக் கொலை செய்ததாக குறித்த நபரும் அவரது சகோதரரும் குற்றம் சுமத்தப்பட்டனர். இவர்கள் இருவரும் 2004ஆம் ஆண்டு சுனாமி அனர்த்தத்தின் போது நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து வேறு சிறைச்சாலைக்கு பேருந்தில் அழைத்துச் செல்லப்பட்ட போது குறித்த நபர் அதிகாரிகளிடமிருந்து தப்பிச் சென்றுள்ளார். இருப்பினும் 54 வயதுடைய குறித்த நபரே தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறைச்சாலையில் இருந்த மற்றைய நபர் 2012ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டதையடுத்து, குறித்த சந்தேக நபருக்கு மரண தண்டனை விதிக்க நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

