கிளிநொச்சியில் பெண்கள் முன்னெடுத்த எதிர்ப்பு பேரணி

209 0

கிளிநொச்சியில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுத்து நிறுத்த கோரி எதிர்ப்புப் பேரணியொன்று புதன்கிழமை (14) புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி, கோணாவில் பகுதியில் இளம் குடும்பப் பெண்ணொருவர் கணவனால் கடுமையாக தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில், கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக வைத்தியசாலை மாற்றப்பட்டு, நீண்ட நாள் சிகிச்சைக்குப் பின்னர் வீடு திரும்பியுள்ளார்.

இதனையடுத்து, கிளிநொச்சி, கோனாவில் மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலும்  பெண்களுக்கு எதிரான வன்முறைகள், துன்புறுத்தல்கள் அதிகளவில் காணப்படுவதை கருத்திற்கொண்டு, சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும், பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் வகையிலும் சில பெண்கள் அமைப்புக்களால் இன்று பகல் எதிர்ப்பு பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இப்போராட்ட எதிர்ப்பு பேரணியானது கோனாவில், சந்திரமுகி சந்தியில் இருந்து ஆரம்பமாகி, கோனாவில் பாடசாலை வழியாக சென்று, கோனாவில் பொது விளையாட்டு மைதானத்தில் நிறைவு பெற்றது.

இப்பேரணியில் ‘பெண்களுக்கான அநீதி வேண்டாம்’, ‘போதை பிரியர்களே பெண் உனக்கு வேண்டாம்’, ‘கொடூரமான குடும்ப வன்முறை இனி எமக்கு வேண்டாம்’ போன்ற   சுலோகங்களை தாங்கியிருந்தனர்.

இந்த போராட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.