டென்மார்க்கில் நடைபெற்ற அனைத்துலகத் தமிழர் மூத்தோர் உதைப்பந்தாட்டச் சுற்றுப் போட்டி.

115 0

கடந்த சனி மற்றும் ஞாயிறு (10-11.06.2023) இரு தினங்களில் டென்மார்க் Grindsted நகரில் அனைத்துலகத் தமிழர் மூத்தோர் உதைப்பந்தாட்டச் சம்மேளனம் மற்றும்
டென்மார்க் தமிழர் மூத்தோர் உதைப்பந்தாட்டச் சம்மேளனம் இணைந்து நடத்திய 40 வயதுக்கு மேற்பட்ட மூத்தோர் 11 வீரர்கள் கொண்ட, நாடுகள் ரீதியான உதைப்பந்தாட்டச் சுற்றுப் போட்டி மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இச் சுற்றுப்போட்டியின் ஆரம்ப நிகழ்வாக டென்மார்க் மற்றும் தமிழீழத் தேசியக் கொடிகளுடன் கலந்து கொண்ட, நாடுகளின் தேசியக் கொடிகளும் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து அக வணக்கம் செலுத்தப்பட்டது.

தொடர்ந்து தமிழர் மூத்தோர் உதைப்பந்தாட்டச் சம்மேளனத்தின் தலைவருடைய வரவேற்புரையைத் தொடர்ந்து முதலாவது ஆட்டமாக டென்மார்க் மற்றும் ஐக்கிய இராச்சிய அணிகளிற்கிடையேயான ஆட்டம் ஆரம்பமாகியது.

ஐக்கியத்தையும் நட்பையும் முதன்மையாகக் கொண்டு நடத்தப்படும் இச்சுற்றுப் போட்டியில், இவ் வருடம் நேர்வே, ஜேர்மனி, ஐக்கிய இராச்சியம், இத்தாலி மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகள் கலந்து சிறப்பித்திருந்தன.

இரு நாட்களிலும் நடைபெற்ற 10 ஆட்டங்களி்ல் தலா நாலு ஆட்டங்களாக ஐந்து நாடுகளும் எதிரெதிராக மோதிக் கொண்டனர்.
ஞாயிறு நடைபெற்ற நோர்வே மற்றும் ஐக்கிய இராச்சிய அணிகளிற்கிடையேயான இறுதியாட்டத்தைத் தொடர்ந்து மாலை 06.00 மணிக்குப் பரிசளிப்பும் ஒன்றுகூடல் நிகழ்வும் இடம் பெற்றன.
மூத்த விளையாட்டு வீரர்கள் மற்றும் நடுவர்கள் மதிப்பளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கலந்து சிறப்பித்த அனைத்து நாட்டு வீரர்களும் மற்றும் சிறந்த வீரர்களும் மதிப்பளிக்கப்பட்டனர்.
நாடுகள் ரீதியாகக் கலந்து சிறப்பித்த அணி முகாமையாளர்கள் பேசும் போது இச் சுற்றுப் போட்டியின் முக்கியத்தை எடுத்துக் கூறியதுடன் எதிர்வரும் காலங்களில் மேலும் பல நாடுகள் இணைய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டதுடன், இச் சுற்றுப் போட்டியைத் திறம்பட நடாத்திய டென்மார்க் தமிழர் மூத்தோர் உதைப்பந்தாட்டச் சம்மேளனத்திற்கு நன்றியையும் தெரிவித்துக் கொண்டனர்.