கேப்பாபிலவு மக்கள், இன்று இராணுவ நுழைவாயிலை முற்றுகையிட்டு போராட்டம் (காணொளி)

258 0

முல்லைத்தீவு கேப்பாபிலவு மக்கள், இன்று இராணுவ நுழைவாயிலை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர்.

அத்துடன் இருவர் இன்று சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

முல்லைத்தீவு இராணுவ படைத் தலைமையகம் முன்பாக, கேப்பாபிலவு மக்கள் தமது பூர்வீக நிலங்களை விடுவிக்க கோரி, கடந்த முதலாம் திகதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் தமது காணி விடுவிப்பு தொடர்பில் யாரும் எந்த முடிவுகளையும் எடுக்காத நிலையில், இன்றையதினம் 28 வயதுடை விவேகானந்தன் திஜீபன் மற்றும் 55 வயதுடைய பொன்னுத்துரை அழகராஜா ஆகியோர் தமக்கான தீர்வு கோரி  சாகும்வரையான உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளனர்.

இன்று காலை குறித்த இருவரும் இராணுவ முகாமிற்கு முன்பாக சாகும் வரையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இந்த நிலையில் கேப்பாபுலவு மக்களின் தொடர் போராட்டம் இன்று பதினோராவது நாளாக நடைபெற்று வருகின்றது.

பாடசாலை, கோவில்கள், பொதுநோக்கு மண்டபம் உள்ளிட்டவை மற்றும் தமது பொருளாதார வளமும் இராணுவத்தால் கையகப்படுத்தபட்டுள்ளதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

கேப்பாபுலவு கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட புலவுக்குடியிருப்பு, சீனியாமோட்டை, சூரிபுரம் ஆகியவற்றை போராட்டம் மூலம் மக்கள் பெற்றுக்கொண்டனர்.

இந்நிலையிலேயே கேப்பாபிலவு மக்கள் பூர்வீக நிலத்தை மீட்கும் தொடர் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இன்று நண்பகல் 1.00 மணியளவில் மக்கள் அனைவரும், இராணுவ முகாம் வாயிலை நோக்கி கோசங்களை எழுப்பியவாறு சென்று, இராணுவ முகாம் வாசலை பத்து நிமிடங்கள் வரை மறித்து, காணிகளை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

இந்த மக்களின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக ஒளிப்பதிவு செய்த இராணுவத்தினர், ஊடகங்களில் செய்தி வெளிவந்த நிலையில், தாம் வெளிப்படையாக மின்குமிழில் பொருத்திய கமராவை அகற்றிவிட்டு, தற்போது நவீன கமரா ஒன்றை இரகசியமாக பொருத்தி ஒளிப்பதிவு செய்வதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.