சங்கத்தமிழுக்கு பிறகு, தமிழிலும் தமிழ்நாட்டிலும் மக்களை பற்றி பேசுவது மண்சார்ந்த கலைகளே: கனிமொழி

87 0

 ‘சங்கத்தமிழுக்கு பிறகு, தமிழிலும் தமிழ்நாட்டிலும் மக்களை பற்றி பேசுவது, மண் சார்ந்த கலைஞர்கள் மட்டும் தான்’ என ஆவடி அருகே அயப்பாக்கத்தில் நேற்று முன்தினம் நடந்த கிராமிய கலை விழாவில் எம்.பி. கனிமொழி பேசினார்.

முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில், ஆவடி அருகே அயப்பாக்கத்தில் கிராமிய கலை விழா நடைபெற்றது.

இதில் கனிமொழி எம்.பி. பேசும்போது சங்கத்தமிழுக்கு பிறகு, தமிழிலும் தமிழ்நாட்டிலும் மக்களை பற்றி பேசுவது, மண் சார்ந்த கலைஞர்கள் மட்டும்தான். நம்முடைய பாரம்பரியம், தமிழ் மண் சார்ந்த கலைஞர்கள் நிகழ்த்தும் கலை வடிவங்களில் மட்டும் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறது. அதனால்தான், இந்த மண் சார்ந்த கலைஞர்களை முன்னாள் முதல்வர் கருணாநிதி ஒவ்வொரு நாளும் நேசித்தார்.

தமிழ் மண் சார்ந்த கலைஞர்களை மிகப்பெரிய அளவில் கொண்டாடிய, மதித்த, உணர்ந்து புரிந்து கொண்டவர் அவர். தற்போது அவருடைய நூற்றாண்டு விழாவில் கிராமிய கலைஞர்களை அழைத்து மீண்டும் சமூகத்தை பற்றியும் நாட்டை பற்றியும் அக்கறையுடன் செய்திகளை சொல்லுங்கள் என கிராமிய கலை விழாவை நடத்தி கொண்டிருக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து, பாரம்பரிய கலைஞர்களுடன் கனிமொழி புகைப்படம் எடுத்து கொண்டு, பசுமை பூங்காவில் மரக்கன்றுகளை நட்டார். பிறகு, அங்கு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப் படத்தை திறந்து வைத்து, மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில், திருவள்ளூர் மாவட்ட கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) செ.ஆ. ரிஷப், பெரும்புதூர் எம்.பி. டி.ஆர்.பாலு, மதுரவாயல் எம்எல்ஏ கணபதி, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத் தலைவர் வாகை சந்திரசேகர், உறுப்பினர்- செயலாளர் விஜயா தாயன்பன், அயப்பாக்கம் ஊராட்சி தலைவர் அ.ம. துரை வீரமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.