பொருளாதார பாதிப்புக்கு கடந்த அரசாங்கம் மற்றும் அமைச்சரவை பொறுப்புக்கூற வேண்டும் – சாணக்கியன்

98 0

பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தி நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளிய கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மலலசேகர மாவத்தை பகுதியில் அதிக சத்தம் என்பதால் வெளிவிவகாரத்துறை அமைச்சருக்கு வழங்கப்பட்ட இல்லம் வழங்கப்பட்டுள்ளது.

வெளிவிவகாரத்துறை அமைச்சர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இணக்கமானவர் என்பதால் இல்லத்தையல்ல, ஆடையையும் கழற்றிக் கொடுப்பார் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (7) இடம்பெற்ற சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் உட்பட இலங்கையின் கைத்தொழில் துறை எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தின்போது  உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

பொருளாதார ரீதியில் சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஆகவே, அவர்களுக்கு அதை செய்வோம், இதைச் செய்வோம் என அரசாங்கம் குறிப்பிடுகிறது.

ஆனால், தற்போதைய பொருளாதார பாதிப்புக்கு கடந்த அரசாங்கம் மற்றும் அமைச்சரவை பொறுப்புக்கூற வேண்டும் என்பதை மறந்துவிட்டார்கள்.

வங்கிக் கடன் வட்டி வீதத்தால் சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். வங்கி வட்டி வீதம் 25 முதல் 35, 40 சதவீதமாக உயர்வடைந்துள்ளது.

பொருளாதார பாதிப்பை ஏற்படுத்திய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மலலசேகர மாவத்தையில் வழங்கப்பட்ட இல்லத்துக்கு பதிலாக வெளிவிவகாரத்துறை அமைச்சருக்கு வழங்கப்பட்ட அரச இல்லம் வழங்கப்பட்டுள்ளது.

மலலசேகர மாவத்தையில் அதிக சத்தம் என்பதால் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வெளிவிவகாரத்துறை அமைச்சரின் இல்லம் வழங்கப்பட்டுள்ளது. வெளிவிவகாரத்துறை அமைச்சர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இணக்கமானவர் என்பதால் அவர் இல்லத்தை அல்ல, ஆடையை கூட கழற்றிக் கொடுப்பார்.

கடந்த அரசாங்கத்தின் தலைவர் மீது ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் குற்றச்சாட்டு, கொவிட் பெருந்தொற்று தாக்கத்தை முறையாக கட்டுப்படுத்தாத குற்றச்சாட்டு என பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தியவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என்றார்.