கொழும்பில் ஆர்ப்பாட்டங்கள், பேரணிகளை கட்டுப்படுத்த புதிய சட்டம் – அரசு ஆராய்வு

221 0

தலைநகர் கொழும்பில் நாளாந்தம் இடம்பெறும் ஆர்ப்பாட்டங்கள் எதிர்ப்பு ஊர்வலங்கள் காரணமாக நகரின் இயல்புநிலை பாதிக்கப்படுவதால் மக்கள் நலனை கருத்தில் கொண்டு ஆர்ப்பாட்டங்கள். ஊர்வலங்களை கட்டுப்படுத்தும் சட்டத்தை கொண்டுவர அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

புதிய சட்டம் தயாரிக்கப்படும் வரை இவ்வாறான ஆர்ப்பாட்ட ஊர்வலங்களை வாரத்தில் ஒரு நாளில் மட்டும் நடத்தக்கூடியதான செயல் திட்டத்தை அறிமுகப்படுத்த அரசு கவனம் செலுத்தி வருகின்றது. ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்ந்த அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து ஆர்ப்பாட்ட ஊர்வலங்களால் தலைநகரினதும், மக்களதும் இயல்புநிலை பாதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டி உரிய நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர்.

கடந்த பல மாதங்களில் தினசரி ஏதாவது பிரச்சினையை முன்வைத்து நாட்டின் பொருளாதார கேந்திர நிலையமான கொழும்பு மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் பல்கலைக்கழக மாணவர்கள், தொழிற்சங்கங்கள், முன்னாள் படை வீரர்கள் மற்றும் அரசியல் கட்சிகளும் அணிதிரண்டு ஆர்ப்பாட்டங்களையும், ஊர்வலங்களையும் நடத்தி வன்முறையை தூண்டும் வகையில் செயற்பட்டு வருகின்றன.

இதன் மூலம் அரச பணிகளை சீர்குலைத்து ஆட்சியை கவிழ்ப்பதற்கு திட்டமிட்டு வருவதாகவும், நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்து அரசின் நல்லாட்சிப் பயணத்துக்கு முட்டுக்கட்டை போட சிலர் முயற்சிப்பதாகவும் ஆளும் தரப்பு அமைச்சர்கள். எம்.பீக்கள் பிரதமரிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இது தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாதுகாப்புத் தரப்பு உயர் மட்டங்களுடன் உடனடியாக கலந்துரையாட தீர்மானித்துள்ளார். அத்துடன் திட்டமிட்ட குற்றச் செயல்களை முறியடிப்பது தொடர்பில் பாதுகாப்புத் தரப்பு முன்வைத்துள்ள யோசனைகள் அனைத்தையும் அங்கீகரிக்க பிரதமர் தீர்மானித்துள்ளார்.

தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர்களின் படுகொலை உட்பட திட்டமிடப்பட்ட குற்றச் செயல்கள் தொடர்பில் எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் குறித்து தம்மை தெளிவுபடுத்துமாறும் பொலிஸ் உயர் மட்டத்திடம் பிரதமர் கேட்டுள்ளார்.

எதிர்காலத்தில் தலைநகரினதும், நாட்டினதும் பாதுகாப்பு தொடர்பில் நாளாந்தம் பாதுகாப்புத் தரப்புடன் கலந்துரையாடவும் பிரதமர் தீர்மானித்துள்ளார்.