வெளிநாட்டு குளிர்பான ஆலைகளுக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டி போராட்டம்: உதயகுமார்

214 0

தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் வழங்குவதை நிறுத்த வேண்டும். இல்லையென்றால் மக்களை ஒன்று திரட்டி குளிர்பான ஆலைகளுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்று சுப. உதயகுமார் கூறி உள்ளார்.

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமார் நெல்லையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வற்றாத ஜீவநதியான தாமிரபரணி ஆறு கடும் வறட்சி காரணமாக வறண்டு வருகிறது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. எப்போதும் இல்லாத வறட்சியால் விளைச்சல் இல்லாமல் வாங்கிய கடன்களை திருப்பி செலுத்த முடியாமல் விவசாயிகளின் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

99 ஆண்டு கால குத்தகை அடிப்படையில் தாமிரபரணி ஆற்றில் இருந்து வெளிநாட்டு குளிர்பான ஆலைகளுக்கு தண்ணீர் விற்பனை செய்யப்படுகிறது. மதுரை ஐகோர்ட்டில் குளிர்பான ஆலைகளுக்கு உபரி தண்ணீரையே வழங்குவதாக அரசு, மாவட்ட நிர்வாகம் பொய்யான தகவலை கூறியுள்ளது. ஏற்கனவே கடும் வறட்சியால் வறண்டு காணப்படும் தாமிரபரணி ஆற்றில் இருந்து குளிர்பான ஆலைகளுக்கு தண்ணீர் வழங்கப்படுவது தவறான செயல்.

உடனடியாக வெளிநாட்டு குளிர்பான ஆலைகளுக்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் வழங்குவதை நிறுத்த வேண்டும். இல்லை என்றால் மக்களை ஒன்று திரட்டி குளிர்பான ஆலைகளுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும்.

கூடங்குளம் அணு உலையில் ஏற்கனவே உள்ள 2 அணு உலைகள் முறையாக செயல்படாத நிலையில் மேலும் அங்கு கூடுதல் அணு உலைகள் அமைக்கக் கூடாது. கூடுதல் அணு உலைகள் அமைக்கப்பட்டால் இடிந்தகரையில் மக்களை ஒன்று திரட்டி மீண்டும் போராட்டம் நடத்தப்படும்.

நெடுவாசலில் போராட்டத்தில் ஈடுபடும் மக்களை ஒடுக்கும் வகையில் அரசு செயல்படுகிறது. மத்திய – மாநில அரசுகளின் மக்கள் விரோத போக்கை கண்டித்து தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.