இரட்டை இலை சின்னத்தை கைப்பற்ற ஓபிஎஸ் அணி அதிரடி திட்டம்

281 0

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்குள் இரட்டை இலை சின்னத்தையும், கட்சியையும் கைப்பற்ற ஓபிஎஸ் அணி அதிரடி திட்டம் வகுத்துள்ளனர். இதற்காக அடுத்தடுத்த நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்தும் அவர்கள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். அதிமுக தற்போது சசிகலா அணி, ஓபிஎஸ் அணி, தீபா அணி என 3 அணிகளாக உடைந்துள்ளன. அதில் தீபா அணியைப் பொறுத்தவரை சிறிய அளவாக இருப்பதால், சசிகலா அணியும், ஓபிஎஸ் அணியும் தாங்கள்தான் உண்மையான அதிமுக என்று கூறி வருகின்றனர்.  சசிகலா, கட்சியின் தற்காலிக பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டது செல்லாது என்று அறிவிக்கக் கோரி, தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் அணி புகார் தெரிவித்துள்ளது. அதில், அதிமுகவைப் பொறுத்தவரை கட்சியின் உறுப்பினர்கள்தான் பொதுச் செயலாளரை தேர்வு செய்ய வேண்டும். பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடுகிறவர் தொடர்ந்து 5 ஆண்டுகள் உறுப்பினராக இருக்க வேண்டும். இந்த இரு விதிகளையும் மீறித்தான் கட்சியின், தற்காலிக பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனால் அவரது நியமனம் செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

இந்தப் புகாரைத் தொடர்ந்து சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீசுக்கு அவர் பதில் அளிக்காமல், தினகரன்தான் பதில் அளித்திருந்தார். ஆனால், தினகரனின் துணைப் பொதுச் செயலாளர் நியமனமே, தேர்தல் ஆணையத்தில் பதிவாகவில்லை. இதனால் அவரது விளக்கத்தை ஏற்க முடியாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதைத் தொடர்ந்து, சசிகலாவே நேற்று தனது பதிலை தேர்தல் ஆணையத்தில் அளித்தார். இந்நிலையில், ஏப்ரல் 12ம் தேதி ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற 16ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. இதனால் இந்த தேர்தலுக்குள் சசிகலா விவகாரத்தில் தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கும். அந்த முடிவு அதிமுகவின் சட்டவிதிகளின்படி எடுக்கப்படும். இதனால் சசிகலாவின் பொதுச் செயலாளர் பதவி ரத்தாகும் என்று ஓபிஎஸ் அணி எதிர்பார்க்கிறது. அவ்வாறு தேர்தல் ஆணையம் முடிவு எடுத்தால், சசிகலாவால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அவைத் தலைவர் மதுசூதனன், பொருளாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் மீதான நடவடிக்கையும் ரத்தாகும். இதனால் கட்சியின் தேர்தலை அவைத் தலைவராக உள்ள மதுசூதனன்தான் நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

அந்த நேரத்தில் சசிகலா மட்டுமல்ல, டிடிவி தினகரன் உட்பட குடும்ப உறுப்பினர்கள் யாருமே தேர்தலில் நிற்க முடியாத சூழ்நிலை ஏற்படும். ஏனெனில் அவர்கள் அனைவருமே கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள். சசிகலா தவிர வேறு யாரும் கட்சியில் ஜெயலலிதாவால் சேர்க்கப்படவில்லை. இதனால் தங்கள் ஆதரவாளர்களில் ஒருவரே பொதுச் செயலாளராக தேர்வு செய்ய ஓபிஎஸ் அணி அதிரடியாக திட்டங்களை வகுத்து வருகிறது. இதன் மூலம் கட்சி முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டில் வரும் என்று எதிர்பார்க்கின்றனர். அதேநேரத்தில், ஆர்.கே.நகர் இடைத் தேர்தலுக்குள் தேர்தல் ஆணையம் தனது முடிவை அறிவிக்காவிட்டால், சசிகலாவின் பொதுச் செயலாளர் நியமனம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டு புகார் செய்யப்பட்டள்ளதால், அவருக்கு கட்சியின் சின்னத்தை ஒருவருக்கு ஒதுக்கும்படி அறிவிக்கும் அதிகாரம் இல்லை. இதனால் அவரது கடிதத்தை ஏற்கக் கூடாது என்று தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் அணி புகார் தெரிவிக்க திட்டமிட்டுள்ளது.

அதிமுகவின் சட்ட விதிகளின்படி பொதுச் செயலாளர் மட்டுமே கட்சியின் வேட்பாளருக்கு சின்னம் ஒதுக்கும்படி கடிதம் கொடுக்கும் அதிகாரம் உள்ளது. இதனால்தான் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது கூட, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், தஞ்சை ஆகிய 3 தொகுதிகளுக்கும் நடைபெற்ற இடைத்தேர்தலின்போது ஜெயலலிதாவின் கைநாட்டு போட்ட கடிதம் வழங்கப்பட்டது. இதனால் சசிகலா அணியைச் சேர்ந்த வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்காவிட்டால், ஓபிஎஸ் அணியும் தங்களது சார்பில் வேட்பாளரை நிறுத்தி தங்களது பலத்தை நிரூபிக்க திட்டமிட்டுள்ளனர்.

இருவருக்குமே சின்னம் கிடைக்காத பட்சத்தில், சசிகலா அணியை விட அதிக ஓட்டுக்கள் பெற்று கட்சியை முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர். இந்த திட்டத்தை செயல்படுத்தும் விதமாக ஓபிஎஸ் அணியினர் தீவிரமாக சட்ட ஆலோசனைகளை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு கட்டமாகத்தான் சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என்று அறிவிக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் அணி சார்பில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இவ்வாறு அடுத்தடுத்து சசிகலா அணியினர் மீது கடும் நடவடிக்கைகளை எடுத்து நிலைகுலையச் செய்யவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர். இதனால் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலுக்குள் சின்னத்தையும், கட்சியையும் கைப்பற்ற ஓபிஎஸ் அணியினர் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அதேநேரத்தில் சசிகலா தரப்பினர் தேர்தல் ஆணையத்தின் முடிவுக்காக காத்திருக்கின்றனர். தேர்தல் ஆணையம் என்ன முடிவு எடுக்குமோ என்ற அச்சத்தில் அவர்கள் உள்ளனர்.

தினகரன் போட்டி உறுதி

சசிகலா அணியின் சார்பில், யாரை நிறுத்தலாம் என்று தீவிர மாக ஆலோசனை நடத்தப்பட்டது. அதில், டிடிவி தினகரன் நிற்க விரும்புகிறார். தற்போது ஆளும் கட்சியாக உள்ளதால், அனைத்து அதிகாரங்களையும் பயன்படுத்தியும், பணத்தையும் செலவு செய்து வெற்றி பெற்றாக வேண்டும் என்று தினகரன் நினைக்கிறார். தான் வெற்றி பெற்றால், எடப்பாடி பழனிச்சாமியை ராஜினாமா செய்யச் சொல்லிவிட்டு, தான் முதல்வராகவும் அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான பணிகளை தினகரன் தொடங்கியுள்ளார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி தற்போது சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவரை கவிழ்த்து விட்டு தினகரன் முதல்வராக வர முயற்சிப்பதை அதிமுக தொண்டர்கள் விரும்பவில்லை. ஏற்கனவே சசிகலா குடும்பத்தினர் மீது பொதுமக்கள் மட்டுமல்லாமல் கட்சியினரே கோபத்தில் உள்ளனர். இந்த நேரத்தில் தினகரன் நிற்க விரும்புகிறார். அதேநேரத்தில், தீபாவும் நிற்கிறார். ஓபிஎஸ் அணியும் தேர்தலில் போட்டியிட்டால் 3 பேரில் யாருக்கு தொண்டர்கள் பலம் உள்ளது என்று தெரியவரும் என்பதால், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.