இரு மடங்கு ஆசிரியர்கள் ஓய்வு பெற்றமையே ஆசிரியர் பற்றாக்குறைக்கு காரணம்

120 0

ஓய்வு பெற்றுச்செல்லும் ஆசிரியர்களின் எண்ணிக்கை கடந்த  காலங்களில் ஒரு வருடத்துக்கு  ஐயாயிரம் அல்லது ஆறாயிரம் ஆகவே இருந்து வந்திருக்கிறது.

ஆனால் கடந்த வருடம் அது இரண்டு மடங்காகியுள்ளமையே ஆசிரியர்கள் பற்றாக்குறைக்கு முக்கிய காரணமாகும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செல்வாய்க்கிழமை (06) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால்  நிலையியற் கட்டளை 27இன் 2கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

அந்த வகையில்  எதிர்வரும் 16 ஆம் திகதி கல்வியியற் கல்லூரிகளிலிருந்து வெளியேறியுள்ள 7500 பேருக்கு தேசிய பாடசாலை மற்றும் மாகாண மட்ட பாடசாலைகளுக்காக ஆசிரியர் நியமனங்களை வழங்கவுள்ளோம்.

அதற்கு மேலதிகமாக நாம் 26,000 பட்டதாரிகளை நியமிப்பதற்கு விண்ணப்பங்கள் கோரியிருந்தோம். எனினும் அது தொடர்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு அது தொடர்பில் நீதிமன்றத்தின் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற நடவடிக்கைகள் முடிவடைந்ததும் அவர்களுக்கான பரீட்சைகள் நடத்தப்பட்டு அவர்களை ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.

அதனைத் தவிர மேலும் 6 ஆயிரம் பட்டதாரிகளை குறிப்பிட்ட பாடங்களுக்காக தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளுக்கு நியமிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

அதேவேளை மேற்படி 26 ஆயிரம் பட்டதாரிகளை நியமிக்கும் செயற்பாடுகளில் அரச சேவையில் உதவியாளர்களாக பணியாற்றியவர்களும் விண்ணப்பித்துள்ளார்கள். அவர்களுக்கும் அதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர்களும் பரீட்சை எழுதி ஆசிரியர் நியமனத்திற்குள் இணைந்து கொள்ளலாம் என்றார்.