மட்டக்களப்பில் சுகாதார தொகுதிகள் நிர்மாணம்

93 0

 மட்டக்களப்பு மாவட்டத்தில் சுகாதார தொகுதிகள் / கழிவறைகளை நிர்மாணிக்கும் திட்டம் குறித்த திட்ட வழிநடத்தல் குழுவின் சந்திப்பொன்று பிரதி உயர்ஸ்தானிகர் வினோத் கே. ஜேக்கப் மற்றும் இலங்கை அரசின் விவசாயத்துறை அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க ஆகியோரின் இணைத்தலைமையில் நடைபெற்றுள்ளது.

இதன்போதே இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இந்திய அரசாங்கத்தின் நன்கொடை திட்டமாக மட்டக்களப்பில் சுகாதார அலகுகளை நிர்மாணிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த சந்திப்பின்போது, பிராந்தியத்தில் உள்ள மக்களின் சுகாதார நிலைமையை மேலும் மேம்படுத்தும் நோக்குடன் ஆயிரத்துக்கும் அதிகமான சுகாதார தொகுதிகளை துரிதமாக நிர்மாணிப்பதற்கான முறைமைகள் தொடர்பில் மீளாய்வு செய்யப்பட்டது.

கிழக்கு மாகாணத்தில் மக்களை இலக்காகக் கொண்டு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கும் இந்தியாவின் உறுதிப்பாட்டின் ஒரு பிரதிபலிப்பாகவே இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

இலங்கைக்காக இந்தியாவால் வழங்கப்பட்ட ஒட்டுமொத்த அபிவிருத்தி உதவியானது 5 பில்லியன் டொலரைத் தாண்டியுள்ள அதே நேரம் 600 மில்லியன் அமெரிக்க டொலர் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள 25 மாவட்டங்களிலும் சுமார் நன்கொடை அடிப்படையிலான 65 அபிவிருத்தி திட்டங்கள் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தற்போது இருபதுக்கும் அதிகமான திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டு வருவதுடன், அவை பல்வேறு நிலைகளில் உள்ளன. குறிப்பாக, இந்திய வீடமைப்பு திட்டம் மற்றும் 1990 சுவசெரிய அம்புலன்ஸ் சேவை ஆகியவை இலங்கையில் இந்தியாவால் முன்னெடுக்கப்படும் நன்கொடை திட்டங்களில் முதன்மையானவை என்பது குறிப்பிடத்தக்கது.