தனிப்பட்ட தகவல்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொள்ள வேண்டாம் – பொலிஸார்

60 0

சமூக ஊடகங்கள் மூலம்  பண மோசடி சம்பவங்கள் தொடர்பில் அதிகளவிலான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. இந்நிலையில் தனது தனிப்பட்ட தகவல்களை மற்றுமொரு தரப்பினருக்கு வழங்க வேண்டாம்.

அவ்வாறு வழங்கும் போது மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு  பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

திங்கட்கிழமை (5) கொழும்பில்  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

நபர் ஒருவர் தனது தனிப்பட்ட தகவல்களை மற்றுமொரு தரப்பினருக்கு வழங்கும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

எந்தவொரு சூழ்நிலையிலும் தனது  தனிப்பட்ட தகவல்களை வழங்கும் போது, குறிப்பாக அவர்களின் தேசிய அடையாள இலக்கம், கடவுச்சீட்டு இலக்கம்,  சாரதி அனுமதிப்பத்திரம்  என்பவற்றின் நகல், வீட்டு முகவரி, குடும்பம் தொடர்பான தகவல்கள், வங்கி கணக்கிலக்கம் தொடர்பான தகவல்கள், வரவு மற்றும் செலவு அட்டை விவரங்கள், வங்கிக் அட்டைகளுக்கு வழங்கப்படும்  இரகசிய இலக்கம் (OTP)  என்பவற்றை எக்காரணம் கொண்டும்  அடையாளந்தெரியாத தரப்பினரிடம் கொடுக்க வேண்டாம்.

மோசடிக்காரர்களின்  கவர்ச்சிகரமான சலுகைகள், அவர்களால் முன்வைக்கப்படும் போலி  பிரசாரங்கள் என்பவற்றை  நம்பி ஏமாற வேண்டாம். இத்தகைய மோசடி செய்பவர்கள் சமூக ஊடகங்கள் மூலம் உங்களை அணுகலாம். மோசடிக்காரர்களின் போலியான

வாக்குறுதிகளை நம்பி  தகவல்களை வழங்குவதன் மூலம் நிச்சயம் ஏமாற்றப்படுவீர்கள். இதுபோன்ற  செயல்களில் ஈடுபட்டு உங்கள் சொத்துக்களை இழக்க வேண்டாம் என கோரிக்கை விடுக்கிறோம் என்றார்.