வடமாகாணத்தில் ஏற்பட்டுள்ள தொழில் வெற்றிடங்களை உடனடியாக திரட்டி, வேலையற்ற பட்டதாரிகளைக் கொண்டு அவற்றை நிரப்ப நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் உறுதியளித்துள்ளார்.
அத்துடன், வடக்கில் மேலதிக வெற்றிடங்களை நிரப்புவது குறித்து ஆராய மூன்று வாரகால அவகாசம் தேவையாக உள்ளதாகவும், மேலதிக தொழில் வாய்ப்பு உருவாக்குவது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
தமக்கு வேலைவாய்ப்புக்களை வழங்கக் கோரி வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் கடந்த 12 நாட்களாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், அவர்களுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பொன்று அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்றது.
இதன்போதே வட மாகாண வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்தார் என வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வட மாகாணத்தில் அண்ணளவாக 3 ஆயிரத்து 500 இற்கும் மேற்பட்ட பட்டதாரிகள் எவ்வித அரச தொழில் வாய்ப்புக்கள் இன்றி உள்ளதாக இந்தச் சந்திப்பின்போது பிரதரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
அத்துடன், வடக்கு மாகாணத்திலும், மத்திய அரசாங்கத்தின் கீழும் காணப்படுகின்ற வெற்றிட இடைவெளி தொடர்பிலும் கூறப்பட்டுள்ளது.
இதற்கமைய வடமாகாணத்தில் உள்ள அனைத்து வேலையற்ற பட்டதாரிகளையும் அரச தொழில் வாய்ப்பிற்கு உள்ளீர்ப்பதற்கான பொறிமுறை ஒன்றை உடனடியாக உருவாக்குமாறும் பிரதமரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டதாக வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

