யாழ்ப்பாணம், பருத்தித்துறை பகுதியில் உள்ள வீடொன்றுக்கு அருகில் ஞாயிற்றுக்கிழமை (மே 28) இளைஞரொருவர் சடலமாக மீட்கப்பட்டதையடுத்து, குறித்த வீட்டின் உரிமையாளர் மீது இனந்தெரியாத நபர்கள் வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதன்போது பருத்தித்துறை, 3ஆம் குறுக்குத் தெருவைச் சேர்ந்த சுப்பிரமணியம் சுகுமார் (50) என்பவரே தாக்குதலில் படுகாயமடைந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது:
பருத்தித்துறை, 2ஆம் குறுக்குத் தெருவைச் சேர்ந்த தியாகராசா சந்திரதாஸ் (33) எனும் இளைஞர், கடந்த 28ஆம் திகதி அவரது வீட்டுக்கு அண்மையில் அமைந்துள்ள 3ஆம் குறுக்குத் தெருவில் உள்ள சுகுமார் என்பவரின் வீட்டுக்கு முன்பாக அதிகாலை வேளையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், சுகுமாரின் வீட்டினுள் அத்துமீறி நுழைந்த மூவர் கொண்ட குழு, சுகுமார் மீது வாள்வெட்டுத் தாக்குதலை நடத்தியுள்ளது.
இதனையடுத்து, பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது உயிரிழந்த இளைஞன் இரவில் குறித்த வீட்டினருகில் சென்றதற்கான காரணம், இளைஞனின் சடலம் மீட்கப்பட்ட இடத்துக்கு அருகில் உள்ள வீட்டுக்குள் வன்முறை கும்பல் புகுந்து தாக்குதல் நடத்தியதன் பின்னணி தொடர்பில் பொலிஸாருக்கு பலத்த சந்தேகங்கள் கிளம்பியுள்ள நிலையில், பொலிஸார் தீவிர விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

