ரணில் தலைமையிலான நிர்வாகம் எதிர்வரும் 10 ஆண்டுகளுக்கு தொடர வேண்டுமாம்!

159 0

பொருளாதார நெருக்கடிக்கு நிலையான தீர்வு காண வேண்டுமாயின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான நிர்வாகம் எதிர்வரும் 10 ஆண்டுகளுக்கு தொடர வேண்டும்.

அரசியல் காரணிகளை முன்னிலைப்படுத்தி முரண்பட்டுக் கொண்டிருந்தால் பொருளாதார பாதிப்புக்கு ஒருபோதும் தீர்வுகாண முடியாது என பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.

பத்தரமுல்ல பகுதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

விவசாயத்துறை தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான எமது அரசாங்கம் எடுத்த தவறான தீர்மானத்தால் பொருளாதார பாதிப்பு தீவிரமடைந்து பாரிய அரசியல் மாற்றத்தையும் ஏற்படுத்தியது. பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காகவே ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதியாக தெரிவு செய்தோம்.

பொருளாதாரப் பாதிப்பில் இருந்து மீள்வதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எடுத்த தீர்மானங்கள் தற்போது வெற்றிப் பெற்றுள்ளன.

நாட்டின் கடன் நிலைபேறான தன்மை குறித்து சர்வதேச நாடுகளின் நம்பிக்கை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவை தற்காலிகமானதொரு முன்னேற்றமாகும்.

பொருளாதார நெருக்கடிக்கு நிலையான தீர்வு காண வேண்டுமாயின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான நிர்வாகம் எதிர்வரும் 10 ஆண்டுகளுக்கு தொடர வேண்டும்.

ஜனாதிபதியின் தீர்மானங்கள் சிறந்தது என்பதை ஐக்கிய மக்கள் சக்தியினர் நன்கு அறிவார்கள். அரசியல் நோக்கத்துக்காக போலியான குற்றச்சாட்டுக்களை மாத்திரம் அவர்கள் முன்வைக்கிறார்கள்.

நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ள பின்னணியில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி என முரண்பட்டுக் கொண்டிருந்தால் பொருளாதார பாதிப்புக்கு ஒருபோதும் தீர்வு காண முடியாது.

விளைவுகள் மாத்திரமே மிகுதியாகும். பொருளாதாரப் பாதிப்பில் இருந்து மீள்வதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க பொதுஜன பெரமுன இணக்கம் தெரிவித்துள்ளது. அரசியல் செய்வதற்கு நாடு என்பதொன்று அவசியம் என்பதை அரசியல் தரப்பினர் விளங்கிக் கொள்ள வேண்டும் என்றார்.