மத்திய அரசின் அவசர சட்டத்தை திமுக எதிர்க்கும்: கேஜ்ரிவால் சந்திப்புக்குப் பின் முதல்வர் ஸ்டாலின் உறுதி

155 0

 “டெல்லி மாநில அரசுக்கு சாதகமாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பு நிறைவேறக் கூடாது என்ற எண்ணத்தோடு ஆளும் பாஜக அரசு ஓர் அவசர சட்டத்தை பிறப்பித்திருக்கிறது. இந்த அவசர சட்டத்தை திமுக கடுமையாக எதிர்க்கும். அதில் எந்த மாற்றமும் கிடையாது” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

டெல்லி மாநில அரசின் அதிகாரத்தைப் பறிக்கும் அவசர சட்டத்தை நிராகரிக்க ஆதரவு கோரி டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் ஆகியோர் வியாழக்கிழமை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்தனர். பின்னர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது முதல்வர் ஸ்டாலின் கூறியது: “டெல்லியில் உள்ளது போன்ற மாதிரிப் பள்ளிகளை தமிழகத்திலும் உருவாக்க வேண்டும் என்று நானும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சரும் டெல்லிக்கு சென்று ஆய்வு நடத்தினோம். அதைத் தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்படுகிறது. பெண்கள் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு கல்லூரிக்குச் செல்லும்போது நிதி உதவி வழங்க முடிவெடுத்து புதுமைப்பெண் திட்டம் உருவாக்கப்பட்டு, மாதம் ஆயிரம் ரூபாய் வழங்க அந்த திட்டத்தை டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். அவரும் வருகை தந்து சிறப்பித்தார். அப்படி வந்த நேரத்தில், கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தை நேரில் பார்வையிட்டு மகிழ்ந்தார். டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலைப் பொறுத்தவரை ஒரு நல்ல நண்பராக பழகி வருபவர்.

டெல்லி யூனியன் பிரதேச முதல்வருக்கு, அவர் சார்ந்திருக்கக் கூடிய ஆம் ஆத்மி கட்சிக்கு நெருக்கடி ஏற்படுத்த வேண்டும் என்று மோடி தலைமையிலான பாஜக ஆட்சி முடிவு செய்துள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கக் கூடிய ஆட்சியை சுதந்திரமாக செயல்படவிடாமல், பல்வேறு நெருக்கடிகளைத் தொடர்ந்து அளித்து வருகிறது. அதுமட்டுமின்றி டெல்லியின் துணை ஆளுநர் மூலமாகவும் பல்வேறு தொல்லைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

பணியாளர்கள் தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு டெல்லி மாநில அரசுக்கு சாதகமான ஒரு அழகான தீர்ப்பை வழங்கியிருக்கிறது. ஆனால், அது நிறைவேறக் கூடாது என்ற எண்ணத்தோடு ஆளும் பாஜக அரசு, அந்தத் தீர்ப்பை எதிர்த்து ஓர் அவசர சட்டத்தை பிறப்பித்திருக்கிறது. இந்த அவசர சட்டத்தை திமுக கடுமையாக எதிர்க்கும். அதில் எந்த மாற்றமும் கிடையாது.

இது தொடர்பாக டெல்லி, பஞ்சாப் மாநிலத்தின் முதல்வர்களும் என்னுடன் கலந்து பேசினர். மற்ற மாநிலங்களின் முதல்வர்களும், பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் என்னென்ன நிலையில் இருக்கிறார்கள், அவர்களது ஆதரவைப் பெற என்ன செய்ய வேண்டும் என்பதையெல்லாம் நாங்கள் கலந்து பேசினோம். நிச்சயமாக அனைத்து மாநிலங்களின் முதல்வர்களும், அகில இந்திய அளவில் இருக்கக்கூடிய கட்சியின் தலைவர்களும் இதற்கு ஆதரவு தரவேண்டும் என்று இதன்மூலம் நான் கேட்டுக்கொள்ள கடமைப்படிருக்கிறேன்.

இந்தச் சந்திப்பு என்பது கடந்த வாரமே நடந்திருக்க வேண்டும். இந்தச் சந்திப்புக்காக டெல்லி முதல்வர் நேரம் கேட்டபோது நான் வெளிநாடு செல்வதாகவும், வந்தவுடன் சந்திப்பதாக அவரிடம் கூறியிருந்தேன். மிக ஆரோக்கியமாக நாட்டில் இருக்கும் ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வுடன் நடந்த இந்தச் சந்திப்பு தொடர வேண்டும்” என்றார் முதல்வர் ஸ்டாலின்.

முன்னதாக, தேசிய தலைநகர குடிமைப் பணி ஆணையத்தை (என்சிசிஎஸ்ஏ) உருவாக்குவதற்கான அவசர சட்டத்தை குடியரசுத் தலைவர் திரவுபதி அண்மையில் பிறப்பித்தார். தேசிய தலைநகர் பிரதேச டெல்லி அரசு சட்டத்தை (1991) திருத்தும் வகையிலும், குடிமைப் பணி அதிகாரிகளை கட்டுப்படுத்த மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி அரசுக்கே அதிகாரம் உள்ளது என உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நிராகரிக்கும் வகையிலும் இந்த அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த அவசர சட்டம், டெல்லி அரசின் ஏ பிரிவு அதிகாரிகள் மற்றும் டெல்லி, அந்தமான் நிக்கோபர், லட்சத்தீவுகள், டாமன் டையு, தாத்ரா நாகர் ஹவேலி யூனியன் பிரதேசங்களின் குடிமைப் பணி (டிஏஎன்ஐசிஎஸ்) பிரிவைச் சேர்ந்த டெல்லி அதிகாரிகள் நியமனம் மற்றும் மாறுதல் விவகாரத்தில் பரிந்துரை செய்வதற்கான அதிகாரத்தை மத்திய அரசுக்கு வழங்குகிறது. அவசர சட்டத்தின்படி, என்சிசிஎஸ்ஏ-வுக்கு டெல்லி முதல்வர் தலைமை தாங்குவார். டெல்லியின் நிர்வாகியாக துணைநிலை ஆளுநர் செயல்படுவார் என்றும் குடிமைப் பணி அதிகாரிகள் நியமனம் மற்றும் பணியிட மாறுதல் விவகாரத்தில் அவருக்கே இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் உள்ளது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.