ஈழத்தீவில் போரில் மரணித்தவர்களுக்கு பொது நினைவுத் தூபி! ஏற்க முடியாது!!!

413 0

ஈழத்தீவில் போரில் மரணித்தவர்களுக்கு பொது நினைவுத் தூபி ஒன்றை நிறுவவும் நினைவுத் தினம் ஒன்றை அறிவிக்கவும் தயார் என சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் கடந்த 09 ஆம் திகதி இடம்பெற்ற தனிநபர் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றியபோதே சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன இதனைத் தெரிவித்தார்.

“1983 – -2009 உள்நாட்டு இறுதிப் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட நிலையில் இன, மத, மொழி பேதங்களுக்கு அப்பால் பலர் உயிரிழந்துள்ளனர். அவர்களை ஒன்றாக நினைவு கூருவதற்கு நினைவுத் தூபி அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அமைச்சரவையில் தமிழின துரோகியும் ஒட்டுக்குழு ஒன்றின் தலைவரும் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தனிநபர் பிரேரணையொன்றை முன்வைத்தார். அத்துடன் நினைவுத் தினம் ஒன்றையும் அறிவிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

கொழும்பில் நினைவுத் தூபியை அமைப்பதற்கான இடத்தை அடையாளப்படுத்துவதற்காகக் குழு அமைப்பதற்கு சிறிலங்கா ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனுமதி வழங்கியுள்ளார்.

போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் பொது நினைவுத்தூபி அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ள நிலையில் அந்த நிலைப்பாட்டை இரா.சம்பந்தன், கஜேந்திரகுமார், செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன் உள்ளிட்ட தமிழ்த் தலைவர்கள் எதிர்த்துள்ளனர். ஆனால், தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச் செயலரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் ஈ.பி.டி.பி.யின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் ஆதரித்துள்ளனர்.

இனப்படுகொலை புரிந்தவர்களுக்கு கொல்லப்பட்ட தமிழ் மக்களுக்கும் விடுதலைப்போரில் உயிர் தியாகம் செய்தவர்களுக்கும் ஒரே நினைவுத் தூபியா?

“பாதிக்கப்பட்ட எமது மக்கள் கொழும்புக்கு வந்து பொதுத்தூபியில் தங்கள் உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என்பதும், அவர்களது உறவுகளின் இழப்புக்குப் பொறுப்புக்கூற வேண்டிய படையினருக்கும் அதே இடத்தில் நினைவுகூரலைச் செய்வது என்பதும் வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சுவதைப்போன்றதாகும்” – என்று ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

“படையினரையும் அவர்களால் கொல்லப்பட்ட மக்களையும் ஒரே இடத்தில் நினைவுகூர முற்படுவதானது கேலிக்கூத்தானது. இது இனங்களிடையே மேலும் விரிசலையே ஏற்படுத்தும்” – என்று புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.

பொறுப்புக்கூற வேண்டிய படையினருடன் இணைந்து எப்படி தமிழ் மக்கள் நினைவுகூரமுடியும்?” என்று கேள்வி எழுப்பினார் ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன்.

“பொதுத்தூபி அமைத்து இனங்களுக்கு இடையே நல்லிணக்கம் மலர்ந்து விட்டது என்று சர்வதேசத்துக்குக் காண்பிக்க அரசு திட்டமிடுகின்றது. இனப்படுகொலை புரிந்த படையினருக்கும், விடுதலைக்காகப் போராடிக் கொண்டிருக்கும் இனத்திலிருந்து மடிந்தவர்களுக்கும் ஒரே இடத்தில் நினைவேந்தலைச் செய்ய முடியாது. அது இயற்கைக்கு முரணானது – என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

இனப்படுகொலை செய்த இராணுவத்திற்கும் விடுதலைக்காகப் போராடிய தமிழ் மக்களுக்கும் ஒரே இடத்தில் அஞ்சலி என்பதை ஏற்க உங்களால் எவ்வாறு முடிந்தது என சி.வி.விக்கினேஸ்வரனை க.சுகாஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், சில வருடங்களுக்கு முன்னர் உங்களை உங்கள் கட்சியே முதலமைச்சர் பதவியிலிருந்து அகற்றி அரசியலிலிருந்து அப்புறப்படுத்த முற்பட்டனர்.

இதன்போது, கட்சி பேதங்களைக் கடந்து உங்களுக்காக வீதிக்கு இறங்கியதையிட்டு வெட்கப்படுகின்றேன். வேதனைப்படுகின்றேன். இனி ஒரு நிமிடங்கூட தமிழ்த் தேசிய அரசியலில் நீடிக்கத் தகுதியற்றவர் நீங்கள் என கடும் காரசாரமான தனது கருத்தினை முன்வைத்துள்ளார்.

பொது நினைவுத் தூபியை ஏற்றுக் கொள்ள முடியாது தமிழ் அரசியற்தலைவர்கள் இறுக்கமாக தெரிவித்து விட்டனர்.
உலக தமிழினமும் பொது நினைவுத் தூபியை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

இதே வேளை கனடாவில் தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபியை அமைக்கும் முயற்சிகளிற்கு கனடாவிற்கான சிறிலங்கா தூதரகம் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

இருபதாம் நூற்றாண்டில் நடந்து முடிந்த மிகப் பெரிய இனவழிப்பாக ஈழத்தமிழருக்கு நடந்தேறிய இனப்படுகொலை இருந்த போதிலும், அதனை இனவழிப்பு என்று ஐ. நா சபையும், மேற்குலக சமூகங்களும் இற்றைவரை இனப்படுகொலை என்று பேச மறுக்கின்றன. இந்நிலையில் பிராம்ரன் மாநகரசபையின் தமிழ் இனத்திற்கான இந்த அங்கீகாரம்  ஒரு வரப்பிரசாதம்.

அதே சமயம்  இன்று நாங்கள் 14 வருடங்களிற்கு பின்னர் துன்பகரமான விதத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளை நினைகூறுகின்றோம் என தெரிவித்துள்ள கனடா பிரதமர் முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இனப்படுகொலையில்உட்பட ஆயிரக்கணக்கான தமிழர்களின் உயிர்கள் இழக்கப்பட்டன,பலர் காணாமல்போனார்கள் காயமடைந்தார்கள் இடம்பெயர்ந்தார்கள் என கனடா பிரதமர் தெரிவித்துள்ளார்.

கொல்லப்பட்டவர்கள் உயிர்பிழைத்தவர்கள் மற்றும் அர்த்தமற்ற வன்முறையால் ஏற்பட்ட துயரத்துடன் தொடர்ந்தும் வாழும் அவர்களின் குடும்பத்தவர்கள் குறித்து எங்கள் சிந்தனைகள் உள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கனடாவின் பல சமூகங்களில் நான் சந்தித்த பலர் தமிழ் கனடா பிரஜைகளின் கதைகள் மனித உரிமைகள் சமாதானம் ஜனநாயகம் போன்றவற்றை இலகுவாக கருதமுடியாது என்பதை நினைவுபடுத்தி நிற்கின்றன எனவும் கனடா பிரதமர் தெரிவித்துள்ளார்.

இதன்காரணமாகவே கடந்த வருடம் மே18ம் திகதியை தமிழ் இனப்படுகொலை நினைவுதினமாக நாங்கள் அங்கீகரித்தோம் என தெரிவித்துள்ள கனடா பிரதமர் மோதலால் கொல்லப்பட்டவர்கள் உயிர்பிழைத்தவர்கள் உரிமைக்காகவும் இலங்கையில் தொடர்ந்தும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளவர்களிறகாக குரல்கொடுப்பதை கனடா நிறுத்தாது எனவும் தெரிவித்துள்ளார்.

 

சிதைக்கப்பட்ட கல்லறைகள்
சித்திரமாய்ச் சிறப்பெடுக்கும்!
விதைக்கப்பட்ட கருவறைகள்
புத்துயிராய்ப் பிறப்பெடுக்கும்!
புதைக்கப்பட்ட உணர்வலைகள்
அணைதாண்டிப் பெருக்கெடுக்கும்!

தமிழனாய் மீண்டும் தலை நிமிர்வோம்!
தன்மானத்தோடு மீண்டும் உயிர்பெறுவோம்!!
எவன் எதிர்த்தாலும்
எமனே மறித்தாலும்
அஞ்சாமல் அணிதிரள்வோம்
அஞ்சலி செலுத்த…!

மகா யாகங்கள் கூட வீண்போகலாம் – ஆனால்
உண்மைத் தியாகங்கள் என்றைக்கும் வீண்போவதில்லை!
புனிதமான உங்கள் தியாகங்கள் மீது ஆணை…!
இடித்துப் புழுதியாக்கப்பட்ட உங்கள் கல்லறைகள் மீது ஆணை!!

தமிழ்க் கருவறைகள் மீண்டும்
உங்களைச் சுமக்கும்!
ஈழத் தமிழ் மண் பார்த்து
உலகமே வியக்கும்!!
வானுயரப் பாயும்
புலிக்கொடி பறக்கும்!!!

நீங்கள் நிம்மதியாய் உறங்குங்கள்…!
உங்கள் கனவுகள் உறங்காது!!