கொடுங்கோல் குடும்ப ஆட்சியைத் தோற்கடித்து இந்த ஆட்சியை உருவாக்கியது மக்கள் வீதிகளில் இறங்கி போராடுவதற்காகவல்ல!

414 0

அரசாங்கத்திற்கு எதிராகப் போராட முடிகிறது. வெள்ளைவான் வராது. பயங்கரவாதத் தடைச்சட்டம் பாயாது என்று சொல்கின்றனர். கடந்தகால கொடுங்கோல் குடும்ப ஆட்சியைத் தோற்கடித்து இந்த ஆட்சியை உருவாக்கியது மக்கள் வீதிகளில் இறங்கி போராடுவதற்காகவல்ல. மாறாக இந்த நாட்டு மக்களின் பிரச்சினைகளைப் புரிந்து அவர்களுக்கு துரிதகதியில் நிவாரணம் வழங்குவதற்காகவே நாமும் எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க எமது மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொடுத்து இந்த அரசாங்கத்தை ஆட்சிப்பீடம் ஏற்றினோம் என தமிழி தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

ஏற்றுமதி, இறக்குமதி கட்டளைகள் திருத்தச்சட்ட மூலத்தில் நேற்று முன்தினம் (07.03) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவித்ததாவது,

நாடு பொருளாதார ரீதியில் பாரிய சவால்களுக்கு முகங்கொடுத்துக்கொண்டிருக்கின்ற நிலைமையில் தான் நாங்கள் இந்த சட்டமூலம் தொடர்பில் பேசிக்கொண்டிருக்கின்றோம். இறக்குமதிகள் அதிகரிப்பதனால் தீர்வைகளும் அதிகரித்தேச செல்கின்றது.

இந்த சுமைகள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவே சாதாரண பொதுமக்களையே தான் பாதிப்பதாகவுள்ளது. ஆகவே இறக்குமதிகளுக்கு நிகரான ஏற்றுமதிகளை மேற்கொள்வதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்ற வேண்டும்.

ஆனால் தற்போது வரையில் அதற்குரிய நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை. தற்போதைய தேசிய அரசாங்கம் நாட்டின் பொருளதார நிலைமைகளை நன்கறிந்து கொண்ட நிலையிலேயே ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்தது. ஆகவே அதற்கு மாற்றீடான திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்குரிய கொள்கைத் திட்டமொன்றை கொண்டிருக்க வேண்டும்.

ஆனால் அவ்வாறான கொள்கைத் திட்டமொன்று ஆட்சியாளர்களிடத்தில் இல்லை என்ற தோன்றுகின்றது. காரணம் வெளியக முதலீடுகளை மட்டுமே மையமாக வைத்து பொருளாதாரத்தின் ஸ்த்திர தன்மையை கட்டியெழுப்ப இலக்காக கொண்டிருக்கின்றார்கள். வரவு செலவுத்திட்டத்தை தயாரிக்கின்றார்கள் ஏனைய விடயங்களை கையாள்கின்றார்கள்.

வெளியக முதலீடுகள் தாமதப்படுமாயின் அல்லது கிடைக்காது போய்விடுமாயின் அனைத்துமே சீர்குலைந்து செல்லும் பேராபத்தே உள்ளது. ஆகவே உள்ளக முதலீடுகள், ஏற்றுமதிக்கான சந்தைகள் விரிவுபடுத்த வேண்டியது அவசியமாகின்றது.

வடக்கு கிழக்கைப் பொறுத்தவரையில் விவசாயச் சந்தையிலும், கைத்தொழில் சந்தையிலும் செல்வாக்குச் செலுத்தக்கூடிய சக்தி காணப்படுகின்றது. குறிப்பாக விவசாய நடவடிக்கைகளுக்குரிய மானியங்கள், ஊக்குவிப்புக்கள் யுத்தம் நிறைவடைந்த சூழலிலும் முறையாக மக்களை சென்றடையாத நிலைமையே இருக்கின்றது.அதேபோன்று விவசாயக் காணிகள், கடற்பரப்புக்கள் மக்களிடத்தில் முழுமையாக ஒப்படைக்கப்படாத சூழல் நிலவுகின்றது. இவற்றை விடவும் கைத்தொழில் சந்தையில் செல்வாக்குச் செலுத்திய ஒட்டுசுட்டான் மட்பாண்டதொழிற்சாலை, பரந்தன் இரசாயண தொழிற்சாலை, ஆணையிறவு உப்பளம், அச்சுவேலி தொழிற்பேட்டை, காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலை ஆகியன மீளவும் இயக்கப்படாதிருக்கின்றன.

இவற்றின் நிருவாக அலகுகள் தற்போதும் செயற்பட்டுக்கொண்டிருக்கின்ற நிலையில் இந்த தொழிற்சலைகளை மீளவும் இயக்குவதில் தொடர்ந்தும் காலதாமதங்களை செய்யக்கூடாது எனது இந்த உயரிய சபையில் கோருகின்றேன்.

நாம் இந்து மா சமுத்திரத்தில் கேந்திர ஸ்தானத்தில் இருக்கின்ற நிலையில் அயல்நாடுகளுக்கிடையிலான வர்த்தக, போக்குவரத்து தொடர்புகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் கடல்சார் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த வேண்டும். குறிப்பாக இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான படகு சேவையை மீளவும் ஆரம்பிப்பதற்குரிய நடவடிக்கைகளை உடன் எடுக்க வேண்டும்.

ஆகவே பொருளதார ரீதியாக முன்னோக்கிச் செல்ல வேண்டுமெனக் கூறிக்கொண்டு சாதாரணமாக மேற்கொள்ள வேண்டிய செயற்பாடுகளை காலதாமதப்படுத்தியவாறு இருப்பது ஒருபுறமிருக்கையில் தற்போது முக்கியமானதொரு கட்டத்தில் தமிழ் சமுகம் இருக்கின்றது.

மனித உரிமை, மனிதாபிமான சட்ட மீறல்களால் பாதிக்கப்பட்ட சமுகத்திற்கு நீதியை வழங்கும் முகமாக கடந்த 2015ஆம் ஆண்டு அமெரிக்காவினால் கொண்டு வரப்பட்ட தீர்மானம் இலங்கை அரசாங்கமும் இணை அனுசரணையை வழங்கி நிறைவேற்றப்பட்டிருக்கின்றது.

இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 18 மாதங்கள் கடந்திருக்கின்றன. தற்போது வரையில் தீர்மானத்தில் கூறப்பட்ட விடயங்களை நடைமுறைரீதியாக முன்னெடுப்பதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எவையும் முன்னெடுக்கப்படவில்லை.

பாராளுமன்றம் அரசியலமைப்பு சபையாக மாற்றப்பட்டு புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுவதாக உலகத்திற்கே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பிரதான கட்சியான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியானது புதிய அரசியலமைப்பை முழுமையாக எதிர்க்கின்றது.

முன்னாள் ஜனாதிபதி உள்ளிட்ட 51 உறுப்பினர்கள் அரசியலமைப்பில் சிறு திருத்தத்தை மேற்கொள்வதற்கு கூட இடமளிக்க கூடாது என்ற தோரணையில் கடுமையான பிரசாரத்தை மேற்கொண்டவண்ணமிருக்கின்றார்கள். இவ்வாறான நிலையில் புதிய அரசியலமைப்பு என்ற நீண்டதொரு விடயப்பரப்பு உடனடியாக நடைமுறைச்சாத்தியமாகுமா?

அவ்வாறு சாத்தியமானாலும் அந்த அரசியலமைப்பு தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூரணப்படுத்தும் வகையில் அமையுமா? பிரிக்கப்படாத நாட்டில் இணைந்த வடகிழக்கில் பகிரப்பட்ட இறையாண்மையின் அடிப்படையில் தங்களின் விடயங்களை தாமே தீர்மானிக்கும் வகையிலான ஏற்பாடுகள் இடம்பெறுமா என்ற பாரிய வினாக்கள் எல்லாம் எம்முன்னே இருக்கின்றன.

இவ்வாறான நிலையில் அந்தவொரு விடயத்திற்கான பதிக்கப்பட்ட மக்களிற்கான நீதியை பெற்றுக்கொடுப்பதற்கான விடயத்தை கைவிடமுடியாது. காணிகள் அபகரிப்பு, கைதிகள் விடுதலை, காணமல் போனோர் விடயங்கள், நேரில் கையளிக்கப்பட்டவர்கள எங்கே போனார்கள் போன்ற பல்வேறு விடயங்களை மறந்து செயற்பட முடியாது.

தற்போது ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34ஆவது கூட்டத்தொடரில் இலங்கை இணை அனுசரணை வழங்கி நிறைவேற்றி தீர்மானத்தை முழமையாக நடைமுறைப்படுத்துவதற்கு மேலும் 2 வருடங்கள் கால அவகாசத்தை வழங்குவதற்கு பிரித்தானியா முயற்சித்து வருகின்றது.

இந்த காலஅவகசாமே வழங்க கூடாது என்ற நிலைப்பாட்டில் நாங்கள் இருக்கின்ற நிலையில் தற்போது வெளிநாட்டு நீதிபதிகள், சட்டத்தரணிகள், சட்ட வரைஞர்கள் ஆகியோர் நீதிக்கான விசாரணை பொறிமுறையில் பங்கேற்கத்தேவையில்லை என்றபதை காலஅவகாச தீர்மானத்தில் அல்லது அதற்கு மேலதிக தீர்மானமொன்றில் உட்புகத்தி நிறைவேற்றுவதற்குரிய முயற்சிகளை அரசாங்கம் ஜெனீவாவில் மேற்கொண்டு வருகின்றது.

இதற்கு சில வல்லாதிக்க சக்திகளும், சிவில் அமைப்புக்களும் துணைபோவதாக அங்கிருந்;து கிடைக்கும் தகவல்கள் மூலம் அறிய முடிகின்றது. அனைத்தையும் இழந்துநிற்கும் தமிழ்ச் சமுகம் சர்வதேசத்தையே தனது நீதிக்காக எதிர்பாத்திருக்கின்றது.

அவ்வாறான நிலையில் தமது நலன்களுக்காக தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை சிதறடித்து தமிழ் மக்களுக்கு துரோகத்தை இழைக்கும் செயற்பாட்டில் மேற்குல நாடுகள் ஒருபோதும் ஈடுபடக்கூடாது என இந்த உயரிய சபை ஊடாக கேட்டுக்கொள்கின்றேன்.

தேசிய அரசாங்கமும் வழங்கிய வாக்குறுதிகளில் இருந்து விலத்தியே செல்கின்றன. இதற்கு கடந்த 18 மாதங்களில் பல உதாரணங்கள் இருக்கின்ற நிலையில் தற்போது ஜெனீவா கூட்டத்தொடர் நடைபெற்றுக்கொண்டும் கால அவகாசத்தை வழங்குவதற்கான முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கும் சூழலில் அரசாங்கம் தனது நிலைப்பாட்டை தெளிவாக கூறியிருக்கின்றது.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சட்டவாரத்தின் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றி பிரதமர் நீதிக்கான விசாரணைப் பொறிமுறையில் சர்வதேசத்தின் பங்களிப்பிற்கு பதிலாக உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவை நிறுவுவதற்கு யோசனை செய்வதாக கூறுயிருக்கின்றார்.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஏனையவர்கள் எவ்விதமான கருத்தை வெளியிட்டாலும் தமிழ் மக்களிற்கு அதிகளவு நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் ஆட்சி மாற்றத்திற்கான தேர்தலின் போது வழங்கிய தற்போதைய ஜனாதிபதி, பிரதமரும் அவ்வாறு கூறுவதை உத்தியோக பூர்வமான நிலைப்பாடாக கருதாமல் விடமுடியாது.

அதேபோன்று சிவில் அமைப்புக்களும் தங்களின் ஆசியுடன் ஆட்சிப்பீடமேறிய தற்போது மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையாக மாறிக்கொண்டிருக்கும் ஆட்சியாளர்கள் குறித்து தெளிவான முடிவுகளை எடுக்க வேண்டுமெனவும் இந்த உயரிய சபை ஊடாக கோரிக்கை விடுக்கின்றேன்.

அரசாங்கத்திற்கு எதிராகப் போராட முடிகிறது. வெள்ளைவான் வராது. பயங்கரவாதத் தடைச்சட்டம் பாயாது என்று சொல்கின்றனர். கடந்தகால கொடுங்கோல் குடும்ப ஆட்சியைத் தோற்கடித்து இந்த ஆட்சியை உருவாக்கியது மக்கள் வீதிகளில் இறங்கி போராடுவதற்காகவல்ல. மாறாக இந்த நாட்டு மக்களின் பிரச்சினைகளைப் புரிந்து அவர்களுக்கு துரிதகதியில் நிவாரணம் வழங்குவதற்காகவே நாமும் எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க எமது மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொடுத்து இந்த அரசாங்கத்தை ஆட்சிப்பீடம் ஏற்றினோம்.

ஆனால், இந்த அரசாங்கமும் முந்தைய அரசாங்கத்தைப்போலவே சில சந்தர்ப்பங்களில் அதைவிடவும் கூடுதலாகவே எமது மக்களை அடிமைப்படுத்த முனைகிறது.உதாரணமாக, வன்னியில் நடைபெற்ற யுத்தத்தில் பெருமளவு பாதிக்கப்பட்ட வன்னி மக்களின் காணிகளை பாதுகாப்புப்படையினர் அடாத்தாகப் பிடித்துவைத்துக்கொண்டுள்ளனர். காணிகளை மீள ஒப்படைக்கும்படி நாம் பலமுறை இந்த அவையிலும் பிரதமர் மற்றும் ஜனாதிபதியிடம் நேரில் முறையிட்டும் எதுவித பலனும் கிடைக்கவில்லை என்பதை இங்கு வருத்தத்துடன் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

எமது மக்கள் அரசாங்கத்தின்மீது மட்டுமன்றி எங்கள் மீதும் நம்பிக்கையிழந்தவர்களாக உள்ளனர். இதனால் அவர்கள் வீதியில் இறங்கி மாதக்கணக்கில் தொடர்போராட்டங்களை நடத்தி வருகின்றனர். முல்லைத்தீவு கேப்பாபிலவு புலக்குடியிருப்பு மக்கள் மனஉறுதியுடன் மேற்கொண்ட போராட்டத்தினால்தான் அவர்களின் காணி மீளவும் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது.

காணியை ஒப்படைத்த படைத்தரப்பினர் இதுநாள்வரை தாங்கள் அனுபவித்துவந்த வீடுகளின் கதவுகளையும் ஜன்னல்களையும் பெயர்த்து எடுத்துக்கொண்டு சென்றுள்ளனர். வீடுகளை இடித்துவிட்டும் சென்றுள்ளனர். இவர்கள்தான் ஒழுக்கம் மிக்க படையினரா? இவர்களைத்தான் பயங்கரவாதிகளிடமிருந்து நாட்டைமீட்டெடுத்த வீரர்கள் என்று பட்டம் சூட்டி கௌரவிக்கின்றீர்களா?

யுத்தம் முடிவுற்ற சூழலிலேயே இப்படி நடக்கிறது என்றால் யுத்தத்தின்போது இவர்கள் எப்படி நடந்திருப்பார்கள் என்பதை இந்த சபை நினைத்துப் பார்க்க வேண்டும்.இப்பொழுது கேப்பாபிலவு பூர்வீக கிராம மக்கள் தங்களது காணிகளை விடுவிக்குமாறு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 135குடும்பங்களுக்குச் சொந்தமான 480ஏக்கர் காணிகளை படையினர் ஆக்கிரமித்துக்கொண்டிருக்கின்றனர். படையினருடன் பேசுகையில் தங்களுக்கு இந்தக் காணி தேவையில்லை மேலிடத்து உத்தரவு வந்தால் நாங்கள் இதைக் கையளிப்பதற்குத் தயார் என்கின்றனர். அப்படி என்றால் எந்த மேலிடம் மக்களின் காணிகளைத் திருப்பிக்கொடுப்பதற்கு தடையாக இருக்கிறது? என்பதை இந்த சபைக்கு தெரிவிக்கவேண்டும்.

சின்னஞ்சிறு குழந்தைகள் முதல் 92வயது மூதாட்டிவரை ஆண்களும் பெண்களுமாக தங்களது காணியைத் திருப்பித்தரக்கோரி ஒரு தகரக்கொட்டிலினகீழ் இரவு பகலாக கொளுத்தும் வெயிலிலும் பொழியும் பனியிலும் கொட்டும் மழையிலும் வேள்வி நடத்துகின்றனர். கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக அவர்களது காணிகளைக் கபளீகரம் செய்து வைத்திருப்பது எத்தகைய மனிதாபிமானம்? கடந்த ஒன்பதாண்டுகளாக அவர்களது வாழ்வாதாரத்தைப் பறித்தெடுத்து அவர்களை வறியவர்களாக்கி வைத்திருப்பது எத்தகைய நல்லிணக்கம் என்பதை இந்த அரசாங்கம் சபைக்குத் தெரிவிக்க வேண்டும்.

முன்னைய அரசாங்கம் யுத்தம் என்ற போர்வையில் எமது மக்களுக்கு அடிப்படை மருந்துகள் கூட கொடுக்காமல் போதிய உணவுப் பொருட்களை வழங்காமல் பட்டினிபோட்டும் மருந்தின்றியும் பலரை சாகடித்தது. எம்மால் உருவாக்கப்பட்ட இந்த அரசாங்கம் தொடர்ந்தும் எமது மக்களின் வாழ்வாதாரத்திற்குத் துணைபுரிகின்ற காணிகளைப் பறித்து வைத்துக்கொண்டு பட்டினிபோட்டு அவர்களது சுயகௌரவத்தை விலைபேசி அவர்களை ஈனப்பிறவிகளாக வைத்திருக்கிறது. இனியும் நாங்கள் எப்படி தொடர்ந்தும் உங்களுடன் இணங்கிச் செயல்படமுடியும்?

கேப்பாபிலவு பூர்வீக கிராம மக்களின் காணிகளில் பலநூறு ஏக்கர் காணிகளில் தெங்கு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் தங்களது காணிகளிலேயே வீடுகளை அமைத்து தங்களையும் காணியையும் பிரிக்கமுடியாத அளவிற்கு காணியடன் உறவாடியவர்கள். அவர்களின் பயிர்கள் அவர்களது பிள்ளைகளைப்போல் பாசத்துடன் வளர்ந்தவை. அவர்கள் பயிர்களுக்கு தண்ணீரை மட்டும் ஊற்றவில்லை. தங்களது பாசத்தையும் சேர்த்தே ஊட்டினார்கள். வளர்ந்து நிமிர்ந்த தென்னை மரங்களைப் பார்த்து அவர்கள் தமது பிள்ளைகள் வளர்ந்து நிற்பதைப் பார்த்து பிரமிக்கும் பெற்றோர்களைப் போன்று மகிழ்ச்சியடைந்தவர்கள்.

ஐநூறு ஏக்கர் காணியைப் பறித்துக்கொண்டு அந்த மக்களுக்கு இருபது பேர்ச்சில் மாதிரிகிராமம் என்ற பெயரில் இரண்டு அறையுடன் ஒரு வீட்டைக் கட்டிக்கொடுத்திருக்கிறீர்கள். அதுவும் இடிந்துவிழும் நிலையில் உள்ளது. அவர்கள் உங்களிடம் தங்களது உயிரோடும் உணர்வோடும் ஒன்றியுள்ள தமது காணிகளைத் திரும்பத் தரச்சொல்லியே கேட்கின்றனர்.

எமது உறவுகளின் வாழ்வாதாரத்தைப் பறித்து, அவர்களின் காணிகளில் விளையும் பயிர்களை அனுபவிக்கும் படையினரின் செயலையும் அதற்கு அனுமதி அளித்திருக்கும் இந்த அரசையும் என்ன பெயர் கொண்டு அழைப்பது? இந்த சபையே முடிவெடுக்கட்டும்.

இனியாவது இந்த அரசாங்கம் மக்கள் வீதிகளில் இறங்கி போராடுவதற்கு வழிவிடாமல் அவர்களின் காணிகளை மீண்டும் அவர்களிடம் திரும்பி கையளிக்க முன்வருமா? வரவேண்டும் என்பது எமது விருப்பம்.

காணாமல் போகச்செய்யப்பட்டவர்கள் தொடர்பில் இன்னமும் ஒரு சரியான முடிவைத் தெரிவிக்க இந்த அரசாங்கம் முன்வரவில்லை. இதன் காரணமாக எமது உறவுகள் தமது உறவுகளைத் தேடி வற்றிய கண்களுடன், ஒட்டிய வயிற்றுடன் வீதிகளில் இறங்கி நியாயம் கேட்கின்றனர். உங்களது மனச்சாட்சி இனியாவது பேசுமா?கொலை கொள்ளைகளில் ஈடுபட்டுவரும் படைத்தரப்பினரை காட்டிக்கொடுக்கமாட்டோம் என்கிறீர்கள். என்ன காரணத்திற்காக சிறையில் இருக்கிறோம் என்பதே தெரியாமல் இருப்பவர்களை விடுவிக்க மறுக்கிறீர்களே இது என்ன நீதி?

இந்த நாட்டின் ஜனாதிபதி, எமது கடின உழைப்பின் மூலமும், இந்த நாட்டின் சிவில் சமூகத்தினரின் துணிச்சல் மிக்க உழைப்பின் மூலமும், எமது நாட்டை சிறந்த ஜனநாயக நாடாக மாற்ற வேண்டும் என்ற அடிப்படையில் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதி அண்மையில் யாழ்ப்பாணத்தில் தெரிவித்த சில கருத்துக்களை இந்த சபையில் முன்வைக்க விரும்புகிறேன். தொட்டதெற்கெல்லாம் போராட்டம் நடத்தாதீர்கள். எதையும் பேசித்தீர்த்துக்கொள்ள முடியும் என்று கூறியிருந்தார்.

இனிமேல் ஒவ்வொரு மாதமும் வடபகுதிக்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவித்துள்ளார். நல்ல விடயம். வரவேற்கிறோம். ஒரு திறமையுள்ள நிர்வாகி அந்தந்த பகுதிகளுக்குச் சென்றுதான் நிர்வாகம் செய்ய வேண்டும் என்பதில்லை. இன்றைய நவீன தொழில்நுட்ப யுகத்தில் இருந்த இடத்தில் இருந்துகொண்டே செயலாற்ற முடியும்.

மக்களின் பிரச்சினைகளை கவனிப்பதற்குத்தான் மாகாண சபைகள், பிரதேச, நகர மற்றும் மாநகரசபைகள் இருக்கின்றன. அவைகளுக்கு உரிய அதிகாரங்களை வழங்கி, போதிய நிதியை ஒதுக்கி அவை சரிவர இயங்குகின்றனவா? என்ன தேவை இருக்கிறது? என்ன குறைபாடு இருக்கிறது என்பதை ஆராய்ந்து அவற்றை வழிநடத்தினாலே போதும். அதைவிடுத்து என்னுடன் நேரடியாகத் தொடர்புகொள்ளுங்கள் என்று ஒரு அலுவலகத்தைத் திறந்து வைப்பதன் மூலம் என்ன நடந்துவிடப்போகிறது?

ஏற்கனவே நொந்துபோயிருக்கும் மக்களை மேலும் ஏமாற்றுகின்ற நடவடிக்கையாகவே நாங்கள் இதனை பார்க்கிறோம். மாகாண நிர்வாகங்கள் தேவையில்லை அனைத்து விடயங்களையும் நாங்களே பார்த்துக்கொள்கிறோம் என்பதன் உள்ளடக்கமாகவே நாங்கள் இதனைப் பார்க்கிறோம்.வேலையற்ற பட்டதாரிகளை போராட்டங்களைக் கைவிட்டு எனது இருப்பிடத்திற்கு வாருங்கள். நான் உங்களை சந்திப்பதற்குத் தயாராக இருக்கிறேன் என்றும் அங்கு ஒவ்வொருநாளும் 1500பேர்வரை வருகிறார்கள் என்றும் கூறுகிறார். அப்டியானால் தனது வீட்டின் வாசலில் இந்த நாட்டின் இளைஞர்கள் ஒவ்வொருவரும் பிச்சைகேட்டு நிற்க வேண்டும் என்று விரும்புகிறாரா?

இளைஞர்கள் பல்கலைக்கழகம் செல்வதே அரிதாக உள்ள நிலையில் பட்டம் பெற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும் இல்லை என்றால் அவர்கள் விரக்தி அடைவார்கள் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். இது ஒரு நல்ல அரசாங்கத்திற்கு அழகல்ல.

இதயசுத்தியுடனான நல்லிணகத்தை ஏற்படுத்துவதற்கு இனியாவது முன்வாருங்கள். சர்வதேச அழுத்தங்களிலிருந்து தப்பிப்பதற்காக எந்தவொரு செயலையும் செய்யாமல் இந்த நாட்டை ஐக்கியப்படுத்த வேண்டும் சகல மக்களும் சம உரிமைகளுடன் சகோரத்துவத்துடன் கைகோர்த்து சமாதானமாக வாழ வேண்டும் என்று திடசங்கற்பம் கொண்டு செயற்படுங்கள்.

சர்வதேச சமூகம் அரசுகளுக்கு இடையிலான உறவு என்ற அடிப்படையில் அரசாங்கத்துடன் மட்டும் உறவை வைத்துக்கொள்ளாமல் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் வழங்குவதற்காகவும் அந்த மக்களின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்வதற்காகவும் பற்றுறுதியுடன் செயற்பட முன்வரவேண்டும்.

ஐ.நா மன்றம் அது உருவாகியதன் நோக்கத்தைச் சரியாகப் புரிந்துகொண்டு, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சரியான நியாயம் வழங்குவதற்கு இனிமேலும் தாமதிக்காமல் முன்வரவேண்டும் என்று இந்த சபையின் ஊடாக வேண்டுகின்றேன்.