ரஷ்யாவில் கைதான அமெரிக்க பத்திரிகையாளருக்கு மீண்டும் தூதரக உதவியை மறுத்த புதின் அரசு

62 0

உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்ட அமெரிக்க பத்திரிகையாளர் இவான் கார்ஸ்கோவிச்சுக்கு இரண்டாவது முறையாக தூதரக உதவியை ரஷ்யா மறுத்துள்ளது.

‘வால் ஸ்ட்ரீட்’ பத்திரிகையாளரான இவான் கார்ஸ்கோவிச் ரஷ்யாவின் யூரல் மலைப் பிரதேசமான யெகாடரின்பர்க் பகுதியிலிருந்து கைது செய்யப்பட்டதாக எஃப்எஸ்பி (The Federal Securiy Service) எனப்படும் ரஷ்ய உளவுப் பிரிவு போலீஸார் கடந்த மார்ச் மாதம் தெரிவித்தனர். இவான் கெர்ஸ்கோவிச் சில ரகசியத் தகவல்களை இடைமறித்து சேகரிக்க முயன்ற குற்றத்துக்காக கைது செய்யப்பட்டுள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவான் கார்ஸ்கோவிச்சுக்கு தூதரக உதவியை அளிக்க அமெரிக்க தொடர்ந்து முயன்று வருகிறது. இந்த நிலையில், இரண்டாவது முறையாக தூதரக உதவியை ரஷ்யா அரசு மறுத்துள்ளது. இது குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் தரப்பில், “சர்வதேச தூதரக ஒப்பந்தங்களை பின்பற்ற ரஷ்யா தவறுகிறது. இதனை நாங்கள் எதிர்க்கிறோம். தடைகளைப் பொருட்படுத்தாமல், வெளிநாடுகளில் நெருக்கடிகளில் உள்ள அமெரிக்க மக்களுக்கு சரியான நேரத்தில் தூதரக அணுகலை உறுதி செய்வதில் எங்கள் குழு கவனம் செலுத்துகிறது” என்று தெரிவித்துள்ளது.

2022-ஆம் ஆண்டு உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்த பிறகு ஐரோப்பிய நாடுகள் பலவும் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்தன. இதில் அமெரிக்கா கூடுதலான பொருளாதாரத் தடைகளை ரஷ்யா மீது விதித்தது. மேலும், ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் கலந்துகொள்ள ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு விசா வழங்க அமெரிக்கா சமீபத்தில் மறுத்தது. இந்த நிலையில், இவான் கெர்ஸ்கோவிச் கைது செய்யப்பட்டு, தூதரக உதவி பெற முடியாமல் இருக்கிறார். பனிப்போர் காலத்துக்குப் பின்னர் அமெரிக்க பத்திரிகையாளர் ஒருவர் ரஷ்யாவால் உளவுக் குற்றத்துகாக கைது செய்யப்படுவது இதுவே முதன்முறை .

யார் இந்த இவான் கார்ஸ்கோவிச்? – இவான் கெர்ஸ்கோவிச் உக்ரைன் ரஷ்யா போர் செய்தியை எழுதுவதற்காக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகையால் ரஷ்யாவுக்கு அனுப்பப்பட்டார். அவரிடம் ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் வழங்கிய பத்திரிகையாளர் அங்கீகார அடையாள அட்டையும் உள்ளது. இருப்பினும் அவரை ரஷ்யா உளவாளி எனக் கைது செய்துள்ளது. இவான் கடைசியாக மேற்குலக நாடுகளின் பொருளாதாரத் தடைகளால் ரஷ்யப் பொருளாதாரம் எந்த வகையில் சரிந்துள்ளது என்பது குறித்து வால் ஸ்ட்ரிட் பத்திரிகைக்கு கட்டுரை எழுதி இருந்தார்.