வாகனச்சாரதிகளின் ‘ ‘மனதின் குரலைக் கேட்க’ லாரியில் பயணம் செய்த ராகுல் காந்தி டிரைவர்களின் மனதில் உள்ள குறைகளை நேரில் தெரிந்து கொள்வதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரவு லாரியில் பயணம் மேற்கொண்டார். இந்தப் பயணம் டெல்லியில் இருந்து சண்டிகர் வரை நீடித்தது.
இதுதொடர்பாக லாரி டிரைவர்களுக்கு மத்தியில் ராகுல் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை காங்கிரஸ் கட்சி ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. அதில், ‘உங்கள் ராகுல் காந்தி உங்கள் மத்தியில்’ என்று காங்கிரஸ் கட்சி பதிவிட்டுள்ளது.

புள்ளிவிவரங்களின்படி நாடு முழுவதும் சாலைகளில் 90 லட்சம் டிரைவர்கள் தினமும் பயணித்து வருகின்றனர். அவர்களில் ஏராளமானோர் கடினமான பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர். ஜனநாயக முறையில் அவர்களுடன் ஒன்றாக அமர்ந்து டிரைவர்களின் மனதின் குரலையும், குறைகளையும், எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும் ராகுல் காந்தி கேட்டறிந்ததாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
இந்த மாத தொடக்கத்தில், கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்கானபிரச்சாரத்தில் பங்கேற்ற ராகுல்,பெங்களூரு மாநகரப் போக்குவரத்து கழக (பிஎம்டிசி) பேருந்தில் பயணம் செய்து கல்லூரி மாணவர்கள், பெண்களிடம் உரையாடி அவர்களின் தேவைகளை கேட்டறிந்தார்.
அதுமட்டுமின்றி உணவு விநியோகம் செய்வோரின் பைக்கில் பின்னால் அமர்ந்து சென்று அவர்கள் அன்றாடம் படும் கஷ்டங்களையும் கேட்டறிந்தார்.
ஏப்ரல் இறுதியில், டெல்லி முகர்ஜி நகரில் உள்ள சிவில் சர்வீசஸ் தேர்வர்களை சந்தித்து அவர்களின் கருத்துகளையும் ராகுல் காந்தி நேரடியாக கேட்டுணர்ந்தார்.

