இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு தமிழ்நாட்டை விளையாட்டின் தலைநகராக மாற்ற வேண்டும் என்ற லட்சியத்தோடு, மாநிலத்தில் அதிநவீன விளையாட்டு உட்கட்டமைப்பு மற்றும் விளையாட்டு வசதிகளை ஏற்படுத்தவும், விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் விளையாட்டு சூழலை உருவாக்கிடவும், அரசிற்கும், பங்குதாரர்களுக்கும் இடையில் தடையற்ற ஒருங்கிணைப்பை அடைவதற்கும், பெருநிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட நன்கொடையாளர்களிடமிருந்து பெறக் கூடிய நன்மைகளைப் பயன்படுத்துவதற்கும், “தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை” என்ற அறக்கட்டளை உருவாக்கப்பட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் 8.5.2023 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையின் உருவாக்கம், உறுப்பினர்கள் மற்றும் இயக்குநர் குழுவின் செயல்பாடுகள் ஆகியவை தமிழ்நாடு சங்கங்கள் பதிவு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அறக்கட்டளைக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சரை தலைவராகவும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளரை துணைத் தலைவராகவும் கொண்ட 7 பேர் அடங்கிய நிர்வாகக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக நடைமுறைகளை சிறப்பாக செயல்படுத்துவதற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளைக்கு தனது சொந்த நிதியில் இருந்து ரூ.5 லட்சத்துக்கான காசோலையினை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கினார்.

