தமிழரை நேசித்த அவுஸ்திரேலியா நாட்டு ஆர்வலர் திரு. ட்ரெவர் கிராண்டின் இழப்பு தமிழருக்குப் பேரிழப்பாகும். அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!!

235 0

அவுஸ்திரேலிய பத்திரிகையாளரும் மற்றும் தமிழர்கள் உரிமைக்காகக் குரல் கொடுத்தவரும் மற்றும் ஈழத் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலையில் மேற்கத்திய அரசாங்கங்களின் உடந்தை பற்றி காட்டமாகப் பேசியவருமான திரு. ட்ரெவர் கிராண்ட் அவர்களின் இறப்பால் ஈழத்தமிழர்கள் ஆழ்ந்த கவலையடைந்துள்ளனர்.

சிறிலங்காவில் தமிழர்களுக்கு நடைபெற்ற இனப்படுகொலை பற்றிப் பரவலாகப் பேசியது மட்டுமல்லாமல் «சிறிலங்காவின் இரகசியங்கள்» என்ற நூலையும் எழுதியுள்ளார். கடந்த திங்கட்கிழமை 6ம் திகதி தனது 65வது வயதில் இயற்கையெய்திய அன்னாரின் ஆத்மா சாந்தியடையவேண்டுமெனப் பிரார்த்திக்கின்றோம்.

துடுப்பாட்ட விளையாட்டில் சிறந்து விளங்கிய இவர் ஒரு திறமைமிக்க விளையாட்டு அறிவிப்பாளருமாவார். இவர் 40 ஆண்டுகளாக விளையாட்டு பத்திரிகையாளராகப் பணிபுரிந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஈழத்தமிழர்களின் மனதில் இடம்பிடித்த இவர் கடந்த 18 மாதங்களாகப் புற்றுநோயால் அவதியுற்றிருந்தார்.

இனப்படுகொலை செய்த சிறிலங்காவிற்கு ஆதரவாக இருந்த சில பன்னாட்டு அரசுகளை ராஜபக்கவுக்கும் சிறிசேனவிற்கும் சமமான இனப்படுகொலையாளிகளே என மிகக்கடுமையாகச் சாடியிருந்தார்.

அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் வசிக்கும் ஈழத்தமிழர்களுடன் நெருங்கிய தொடர்புடைய திரு. ட்ரெவர் கிராண் ஈழத்தமிழரின் போராட்டம் பற்றி மிகவும் தெளிவான கொள்கையுடன் இறுதிவரை ஆதரவாகச்செயற்பட்டு மறைந்துள்ளார்.

இவர் போரால் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழ்க் குடும்பங்களைச் சந்திக்க இந்தியாவில் உள்ள ஏதிலிகள் முகாமிற்குச்சென்று அவர்களுக்கு வேண்டிய அத்தியாவசிய உதவிகளைச் செய்துள்ளார். இத்துடன் இவர் ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்லாமல் பலஸ்தீனியர், மேற்குப் பப்புவா மக்கள் மற்றும் உலகத்தில் வாழும் பூர்விகக்குடிகளுக்கும் தனது முழுமையான ஆதரவை வழங்கிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை அன்னாரின் இழப்பால் வாடும் அவரது குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்ளுகின்றோம்.

-அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை-