தமிழக மீனவர்களை சுட்டுக் கொல்கிறது: மத்திய அரசுக்கு புதுவை முதல்வர் கேள்வி

235 0

சிறிய நாடான இலங்கை எந்த தைரியத்தில் தமிழக மீனவர்களை சுட்டுக் கொல்கிறது. இதற்கு முக்கிய காரணம் உருப்படியான நடவடிக்கையை மத்திய அரசு எடுக்காததே என்று புதுவை முதல்வர் நாராயணசாமி கூறினார். சென்னை விமான நிலையத்தில் புதுச்சேரி  மாநில முதல்வர் நாராயணசாமி, நேற்று முன் தினம் இரவு  நிருபர்களுக்கு  அளித்த பேட்டி: இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்  சுட்டுக்கொல்லப்பட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மோடி தலைமையிலான பாஜ  அரசு பொறுப்புக்கு வந்த பின்னர், மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை  தடுத்து நிறுத்த உருப்படியான நடவடிக்கை எடுக்கவில்லை. இலங்கை அதிபர்  சிறிசேனா இந்தியா வந்தார்.

இந்திய பிரதமர் மோடி, இந்திய வெளியுறவு துறை  அமைச்சர் இலங்கை சென்றனர். மீனவர் பிரச்னையை தீர்ப்பதற்கு பேச்சுவார்த்தை  என்று கூறினார்கள். ஆனால் உருப்படியாக எதுவும் நடக்கவில்லை. இலங்கை  ராணுவமும், கடற்படையும் தொடர்ந்து இந்திய மீனவர்களை தாக்குவதும், அவர்கள்  படகுகளை சேதப்படுத்துவதுமாக இருக்கிறது. தமிழக அரசு, மத்திய அரசுக்கு  கடிதம் எழுதுகிறது. மத்திய அரசு, இலங்கை அரசுக்கு கடிதம் எழுதுகிறது.  இதுதான் நடக்கிறது. இப்போது, தமிழக மீனவரையே இலங்கை கடற்படை சுட்டு  கொன்றிருக்கிறது.

இலங்கை, மிகச்சிறிய ஒரு நாடு. அந்த நாட்டை சேர்ந்த  கடற்படையும், ராணுவமும், நமது மீனவர்களை சுடுவதும், தாக்குவதும்  தொடர்ச்சியாக நடக்கிறது. எந்த தைரியத்தில் இதுபோன்ற செயல்களில்  ஈடுபடுகிறது? மத்திய அரசும் இதை கண்டித்து நடவடிக்கை எடுக்காமல் மவுனமாக  இருக்கிறது. இலங்கை கடற்படையை இரும்புக்கரம் கொண்டு அடக்க மத்திய அரசு  முன்வர வேண்டும்’’  இவ்வாறு கூறினார்.